Tuesday 7 February 2012

அதே வாசல்..

உரத்த நெஞ்சுகளிலும்
ஒளி சுடரும் கண்களிலும்
விடுதலைக்கான தேவை
ஊற்றெடுத்துப்பாய
எல்லாரும் ஒன்றாகி நின்று
போகும் வழி தேடினோம்
பல வாயில் கதவுகள்
திறந்திருந்த போதும்
உணர்வுகளின் அன்றைக்கான
ஒருமித்த தெளிவு
நாம் போகவேண்டிய
வழிக்கான கதவை
உடைத்துத்திறந்தது,
கையைக் கோர்த்தபடி
ஒன்றாக உள்ஙுழைந்து
உரக்கக் கேட்டோம்
எமக்கான உரிமையை,

விடுதலைக்கான
நெடிய பாதையில்
இடறுப்பட்டு
ஒரே கொள்கை வழிக்கதவால்
உள் நுழைந்ததை
காலமும், நினைவுகளும்
எம்முள் மறக்கடிக்க வைத்தது,
விறாண்டி விட்டுக்கடிக்க மறக்கும்
எமக்கான அறணை விதி
அகப்பட்ட வெடிப்புகளிலெல்லாம்
எம்மை அடைக்கலம் புகச்செய்தது,
எட்ட நிற்கின்றவர்கள்
மட்டுமல்ல தன்னுடைய
வீட்டின் வெடிப்புகளுள்
இருக்கின்ற எம்மவர்களும் கூட
எந்நேரமும் ஞாபகம் வந்து
தன்னைக் கடித்து விடலாம்
என்ற பயத்தில்
அடிப்பதற்கான ஆயத்தங்களோடு
எப்போதும் அவன் இருக்கிறான்,

மரண பயமும்
கொஞ்சம் சுரணை உணர்வும்
நாம் வெளியேறலுக்கான
கதவினைத் தேட வைக்கிறது,
எல்லாரும் ஒன்றன்பின் ஒன்றாக
ஆளாளுக்குத் தெரியாமல்
கிடைத்த ஓர் கதவின்
வாசல் வழியா வெளியேறுகிறோம்..
நாம் உள்ளே வந்ததும்
இதே வாசல்
வழியாகத்தான் என்பதனை
தெரியாமல்...

No comments:

Post a Comment