Wednesday 1 February 2017

பார்க்கும் இடத்திலெல்லாம் உனைப் போலவே..

மின்விளக்கின் ஒளியில்
மேனி மினுங்கியபடி
யாருமற்று மல்லாந்து கிடக்கும்
நனைந்த இரவு வீதிகள்தான்
காதலுற்ற போதில்
மிளிர்ந்த அவள் கண்கள் போல்
எத்தனை அழகு

வீடு திரும்பும் பாதையில்
சஞ்சாரமற்றுப் பரந்தகலும்
சணல் வயலிலிருந்து
ஏதோ ஒரு பறவை
படபடன சிறகடித்துக் கிளம்பும் ஒலியில்
அன்றொரு நாள்
என் மார்பில் சாய்ந்திருந்த
மார்பின் ஓசை
கால நீட்சியை ஊடறுத்து
காதுகளில்

காற்றில் ஈரம் பிசுபிசுக்க
அண்ணாந்து பார்க்கிறேன்
முகிலவிழ்ந்த இரு துளிகள்
கன்னத்திலும், காதுமடலிலும்.
ஊரும் துளி தேடி
அத்தனை இயல்பாய்
கையும், குளிர் காற்றும்
காதை மெல்ல மேவ,
இதழ் நுனியால் செவி கவ்விய
அந்த உதடுகளின் அதே ஈரலிப்பு

ஏன் இத்துணை நிசப்தமாய்
இருக்கிறது இன்றைய இரவு
எண்ணிய படியே
சத்தமெழாமல் கதவில் சாவியைச் செருக
வீட்டு முகப்பின் மாடத்திலிருந்து
குறுகுறு எனக் குளைகிறது புறா
அந்தக் குறுகுறுப்பு என் விரல்களிலும்
ஓ.. நினைவிருக்கிறது
கணச்சூடு கண்களில் அடித்த
அந்த உடலில் என் விரல்கள்
பாம்பாய் ஊர்ந்து நெளிந்த போது
விரலின் காதுக்கு விளங்கிய
அதே குறுகுறுப்பு

அறை முழுதும் நிறைந்தறையும்
இன்மையில் இருப்பைத் தேடும்
என் தன்மையை எள்ளிய படி
வானொலியைத் திருகுகிறேன்
காற்றலையில் மிதக்கிறது
"பார்க்கும் இடத்திலெல்லாம் உனைப் போலவே
பாவை தெரியுதடி"..