Wednesday, 23 January 2013

கஞ்சாபோலாக்கும் கனநினைவு..

கஞ்சா நுகர்ந்த மனம்
காற்றாகி விண்ணேறி
தஞ்சம் அடைகின்ற
தாலாட்டும் மெல்லிசை போல்
பிஞ்சு பிடித்து வளர்
பெரு நினைவுச் சாகரமோ
கெஞ்சி உன் மடியிற்
கிடப்பதற்குக் கேக்குதடி

அழுக்கேதும் அண்டாத
ஆழ்மனது வீணையினில்
வழுக்கி வரும் உன்னுடைய
வலி போக்கும் விரல் மேவ
ஆனந்தக் கூத்தாடும்
ஆவியதன் அக்கணத்தீ
ஏனிந்த வாழ் முழுதும்
எனைத்தொடர வில்லையென
ஞானத்தில் தேடி
நனையுதடி மனக்கண்கள்

பூவை நினைத்த படி
பூட்டினால் கண்ணுக்குள்
பூந்தோட்டம் ஒயிலாகப்
புன்னகைத்து நிற்பதுவும்

காட்டை நினைத்தால்
காட்டோடு பச்சை மணம்
கூட்டாகக் கண் மூக்கில்
கொளித்துப்போய்த் தோன்றுவதும்

ஆற்றை நினைத்தாலோ
அவதார குணம் வந்து
தோற்றுவித்த சிவனின்
தொடர்ச்சியாய் தலைமுழுதும்
மலையும், சுனையும்
மதமதென்ற பத ஆறும்
நிலையொன்றை உணராத
நிலையும், உடற்பொறியில்
அலையின் தத்தளிப்பும்
ஆழ நீரோட்டமதும்
கலந்து புதிதாயோர்
காவ்ய நிலை தோன்றுவதும்

கஞ்சா வரைகின்ற
காட்சிகளால் மட்டுமல்ல
என் சா வரை நீளும்
எனையுடையாள் நினைவிலும் தான்..
Sunday, 20 January 2013

துகளாய் ஆகிடினும் துடிப்பேன்..


அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உண்டென்றால்
கண்டத் தகடிரெண்டு
கலந்திணைந்த பிதிர்வு வழி
உண்டாகி வந்தேன் நான்
ஒரு மலையாய், எவ்விடிக்கும்
கண்ணைக் கசக்காத
கரும்பாறை நெஞ்சோடு,
துன்பமென்ற சொல்லென்னைத்
தொட்டுவிட ஒண்ணாமல்
என் பாட்டிலெழுந்துயர்ந்தேன்
எதற்கும் வளையாமல்,

எத்தனை பேரென்னை
இடித்தார்கள்,இடிந்தேனா
குத்துகின்ற உளிகளால்
குடைந்தார்கள், குமைந்தேனா
செத்துப்போ என்றென்னைச்
சிதைத்தார்கள், சிதைந்தேனா
சத்தால் நிறைந்த என்
சாகாவர வித்து
எத்தனையைத் தாண்டி
இடியாமல் வந்ததடி!
இத்தனையும் பார்த்து
எழுந்த வெப்பியாரத்தில்
காலம் வாயுறிஞ்சிக்
கண் வைக்க அதனுடைய
கோலமாய் நீ வந்தாய்,
கொஞ்சங் கொஞ்சமாயெந்தன்
உள்ளீட்டை அதிற் கசியும்
உயிரீரம் தனை நுகர்ந்தாய்
அள்ளிக் குடித்தாயென்
அத்தனையும், சில ஆண்டில்
வறள் நிலமாய் வந்த நீ
வளம் கொளிக்கும் நிலமானாய்

கல்லாய் இருந்த மனம்
கனிந்த பழமான நாளில்
பல்லாள் அடித்தும்
பதறாத என்னை நீ
சொல்லால் அடித்து வீழ்த்திச்
சொல்லாமற் போய் விட்டாய்
வில்லாளால் வீழ்த்தேலா
வீரத்தை உன்னுடைய
சொல் வாளைச் சுழற்றி
சுக்கு நூறாக்கி விட்டாய்

எத்தனையோ கண்டும்
இளகாத மலையாக
இத்தனையும் கடந்த நான்
இன்றைக்கு
செத்தது போல் வீழ்ந்து
சிதறித் துண்டு துண்டாய்
பொடியாய், மண்ணாகிப்
போக வழி தெரியாமல்
அடிக்கின்ற காற்றில்
அலமலந்து பறக்கின்றேன்

என்னைத் தொலைத்து விட்டு
எடுப்பாக நீ திரியும்
விண் கீழ் நீண்டு செல்லும்
வெளியொன்றில், என்றைக்கோ
ஓர் துகளாய் பறந்து வந்து
உன் கண்ணுள் விழுந்திடுவேன்
நீர் திரளும் போது
நினைவாக நான் எழுந்தால்
உறுத்தாமல் உள்ளேயே
உயிர் கரைப்பேன், கன்னத்தால்
தெறிக்கின்ற கண்ணீரில்
தீர்ப்பேனென் நீர்க் கடனை
அறிக! எனை மொண்டு
ஆண்டவளே..!

Friday, 18 January 2013

அடிப்பிடிச்ச வாழ்வும் அன்பும்..

அடிப்பிடிச்சு மணக்கிறது நிகழ்வாழ்வு
அன்போடும்
துடிப்புள்ள நாடி துவண்டு
துயரடைப்பால்
வெடிப்புண்டு கசிகிறது
வெங்குருதி, நாசிக்குள்
உடைப்பெடுத்த குருதி மணம்
ஊறி மணக்கிறது

அன்பென்ற மருந்து தனை
ஆறுதற் கரண்டியினால்
என்புருக ஊட்டி விடும்
இங்கிதத்தை எதிர்பார்த்து
என்புருகும் வாழ்க்கையிது
ஏதேனும் ஓர் சொட்டு
அன்பு மணக்காத்து
அடித்தால் பட்ட மனம்
இன்புற்றுத் தவிக்கும்
இதக் கணத்தின் வரத்துக்காய்
புண்ணாகிக் கொதிக்கும்
பொறுக்கேலாக் காயத்தை
இன்னும் ஆற விட
எண்ணாமல் இழுக்கிறது 

என்னாளிலெனை நம்பும்
ஏதேனுமோர் வார்த்தை,
என்னாளிலென் மனசின்
ஈரத்தை உணருகின்ற
உன்னால் முடிகின்ற
ஓர் சமிக்ஞை, உடல்மொழியில்
என்னைப் புரிந்து விட்ட
எதுவேனுமோர் அசைவு
என்றைக்கு உனிலெழுந்து
எனை வந்து அடைகிறதோ
அன்றைக்கே மனக்காயம்
ஆற எண்ணி அசடு வைக்கும்

பழங்காயம் ஆக விட்டால்
பதிந்து விடும் நோ, பின்னர்
உளம் திருந்தி ஒரு காலம்
ஓடி நீ வந்தாலும்
பழகி நோ பழகி
பட்டு விட்ட மனம் மீண்டும்
இளகுதற்கு முடியாமல்
இரும்பாயே இருந்து விடும்

வருந்தி நீ அன்று
வாய் விட்டு அழக்கூடும்!
புரிந்தேனுனை என்று
புலம்பலாம் நீ!, அன்றைக்கு
திரும்பி வர முடிந்த
திக்கினிலே நான் இருந்தால்
திரும்பி வரப்பார்ப்பேன்
இல்லையெனில் இப்பொழுதே
தேற்றிக்கொள் உன்னை, என்
தீச்சட்டி வாய்க்காரி..!
Monday, 14 January 2013

அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து)


உந்தன் நினைவு வந்தால்
ஒரு கவியும் எழுகுதில்லை
எந்தன் இமை கவிந்து
இருள, துளியிரெண்டு
சிந்தி உன் சிரிப்பாய்
சிதறித் தெறிக்கிறது

எத்தனை யுகமாய் நான்
ஏந்தி வந்த புண்ணியமோ
இத்தினத்தில் இவ்வாண்டில்
எழுவன் என்று காத்திருந்து
அப்பனாய் எனைப்படைத்த
அழகேசா! எமக்கிடையில்
இப்படியே பேசாமல்
இரும்பாய் கடல் மலைகள்
தாச்சி விளையாடித்
தவிச்ச முயல் அடிச்சாலும்
நினைவுக்குள் நீயெழுந்து
நின்றால், உயிர் தவித்து
கூட்டைப் பிரித்துக்
குதித்துக் கடல் கடந்து
உன் காலைச் சுற்றித் தான்
ஓடித் திரியுதடா

உயிரங்கே போனபின்னால்
உதவாத ஐம்புலன்கள்
பதறுகின்ற புலம்பலினைப்
பற்றி, சொல்லாக்கி
ஏதோ பழக்கத்தில்
எழுதுதடா, மற்றபடி
உன்னைப் போல் மனசாகும்
உயிர் ததும்பும் கவிதையொன்றை
இன்றுவரை என்னாலே
எழுதிவிட முடியவில்லை

உன்னுடைய சிரிப்பில்
உறங்குகின்ற பேரழகில்
என்னை இழந்து விடும்
ஏதோவோர் உயிர்ப் பந்தம்
எத்தனை ஜென்மம் நான்
எழுதிக் குவித்தாலும்
பத்தியப் பட்டெனக்குள்
பாவாகா தென்பதனால்
ஆறாக உன் வாசம்
அடர்ந்து பெருகுகையில் வெறுங்
கீறு கூடப் பேனாவால்
கிழிக்க முடிவதில்லை

ஏனென்றே தெரியாமல்
இழுபடுமோர் இவ்வாழ்வில்
நான் படைத்த நல்ல உயிர்ப் பாட்டே
நீ இருக்க
வீண் தான் வெறும் பாட்டு
விடு..