Friday 27 May 2016

வேதனையின் விதை..

வேதனை தாளாமல்
நாமெல்லாம் இறந்துகொண்டிருந்தபோது
அவன் பிறந்தான்
வேதனை சுமந்து பெற்ற
விதை அவன்

கண்ணை மறைக்கும்
வெற்றிக் கற்பனைகளில்
அவனொருபோதும் மிதந்ததில்லை
ஆனால்
தான் நட்ட விதை
துளிர்க்குமென்ற நம்பிக்கை
அவனிடம் இருந்தது

பெரு விம்பமாய்
அவனை ஆக்கியது
வெறும் பேச்சல்ல,பேராற்றல்

புனைந்து காட்ட மட்டுமே
பலரால் முடிந்த போது
அவன் நிகழ்ந்து காட்டினான்

சுயபரிசோதனையெனும் பேரில்
இங்கிதம் வழியும்
தந்திரம் நிறைந்த
ஆயிரம் முகமூடிகளை
நீங்கள் அணிந்து கொண்டாலும்
அவனில்லாத விடுதலைக்காலத்தை
எதைத்தோண்டினும் உங்களால்
எடுத்துவிட முடியாது.. 

Saturday 21 May 2016

நெக்குருகி எனை நீயும் நினைப்பாய்..

முடிவற்ற சோகத்தின்
துயர் நிறைந்த சொற்களை
கற்களாக்கித்தான்
விமானநிலையத்தை
கட்டித் தொலைத்திருக்கிறார்கள் போல,

நீ வெளியே தெறிக்கவிட்ட
விம்மலையும், உப்பாற்றையும்
தாங்க முடியாக் கனத்துடன்
ஏந்திக்கொண்டு வீடு வந்தேன்
நீ ஓடித்திரிந்த அறை
வெறிச்சோடிக்கிடக்கிறது
பேரலைப் பிரளமாய்
என்னை மீறி எழுந்திறங்கும் மூச்சை
ஏது செய்வதென எனக்குத் தெரியவில்லை

என்றோ ஒருநாள்
நான் திரும்பவும் வருவேனென
நீ விட்டுச்சென்ற
விளையாட்டுப் பொருட்கள்
அங்கங்கே கிடந்து
உன் சிரிப்பையும்
கதகதப்பான கட்டி அணைப்பையும்
விம்பமாயெழுந்து
என்னில் உருவாடவிட்டு
உயிரைக் கருக்கி எரிக்கிறது

போகேனென நீ கெஞ்சி அழுதபோது
பிய்ந்து போனெதென் ஆவி
சரி, போய் வா என் சுவாசமே
உலகின் எங்கோ ஓர் மூலையில்
விதியென்றொன்றிருந்தால்
உடம்புக் கணச்சூடு உயிரில் ஒட்ட
நெக்குருக நீவி
ஆரத்தழுவி அணைத்துக் கொள்வோம்..