Sunday 26 February 2012

மாலைச் சிவப்பும் மனசும்..

வன்னிப் பரப்பின் நிலமெங்கும்
வாய்க்காலிட்ட குண்டுகளின்
சின்னச் சிதறல்த் துண்டொன்று
சிதறிப் பறந்து சூரியனின்
கன்னம் உடையப் பட்டதனால்
கக்கும் சிவப்புக் குருதியிதோ..!

கொத்தாய் குலையாய் எம் மக்கள்
குடலை அறுக்கக் குருதி நதி
அத்தால் உள்ள கடல் நோக்கி
ஆறாய்ப் பெருகி ஓடியதன்
பத்தா வானநிறத்தைத் தான்
பருக சிவந்த கடல் மீது
இத்தால் மறையும் சூரியனும்
இறங்கச் சிவப்பாய் ஆனானோ..!

கொல்லக் கொல்ல தினங் குமையும்
கொதிக்கும் மனசின் தீ மூச்சாய்
செல்லக் காற்று அதைச் சுமந்து
சேர்த்த முகிலின் தீ குடித்து
உள்ளே பரிதி உடல் அவிய
ஒழுகும் நிணத்தின் நிறமீதோ..!

போரின் பின்னே பிள்ளைகளும்
போன இடத்தை அறியாமல்
ஆரும் இன்றி அணைப்பின்றி
அழுதே சிவந்த கண்ணெல்லாம்
ஊரைப் பார்க்க முடியாமல்
உற்றுப் பார்க்கும் வானத்தில்
ஏறி இந்தச் சிவப்பூறி
எங்கும் கண்ணாய்த் தெரிகிறதோ..!

கேட்பார் இன்றி இம் மண்ணில்
கிழிந்து கிடக்கும் விடுதலையை
மீட்பார் என்று தினமேங்கும்
மிகுந்த குருதி அழுத்தத்தால்
வாட்டம் மிகுந்து மனம் சோர்ந்து
வலிந்த விதியை நம்புகிற
ஊட்டம் குறைந்த எம்மினத்தின்
ஊழித் தீயும் இது தானோ..!

கண்ணைத் திறந்தால் எங்கணுமே
கல்லின் அறைகள் மீந்திருக்கும்
மண்ணில் பிறந்த மனமெல்லாம்
மாலை நேரச் சூரியனை
எண்ணும் விதமும் இது தானோ
இல்லை ஏதோ எனக்கு மட்டும்
கண்ணில் நோயோ கற்பனையோ
காட்சி மாயைக் கவிதையிதோ..!

No comments:

Post a Comment