Tuesday 28 September 2021

நாற்பதுகள்..


இளமைக்கும் முதுமைக்கும்

நடுவில் நிற்றல்

எவ்வளவு நொடிந்தாலும் அதையும் கற்றல்

அழகுக்கும் அன்புக்கும்

இடையில் சுற்றி 

வாழ்வுக்கு எதுவென்ற

வழியைப் பெற்றல் 


காசென்று காசென்று 

ஓடித் தேய்ந்து

யோசிக்க வாய்ப்பின்றி

உடலம் நொய்ந்து  

பேசவே ஆளின்றி 

முடிவில் எல்லாம் 

கடதாசி தானென்று 

புரிந்து கொள்ளல்


நாக்கிற்கும், மனசுக்கும்

இடையிற் சொல்லை 

நடப்பதற்குப் பழக்கிடுதல்

குரலைத் தாழ்த்தி 

ஆளுக்காள் தேவையுடை 

மொழியைத் தேர்ந்து 

உரைப்பதற்குத் தெரிந்திடுதல் 

இதனின் போது 

சுயத்திற்கும் அறிவிற்கும் 

இடையில் தோன்றும் 

பாதைதனைக் கண்டடைதல்

கொடுப்புப் பல்லை 

தெரியாமற் கடித்தபடி 

அதன் மேல் போதல் 


காமமும் காதலும் 

பதின்மம் போல 

ஆமாம் உண்டு தான் 

ஆனால் இப்போ 

ஓமகுண்டத்தை உள்ளே கட்டி

உள்வட்ட முதிர்விற்குள் எரித்தல்  

முன்போல் அவிப்பொருட்கள் 

தேடுகின்ற மனம்வேறின்றி 

புகைந்தடங்கி படிப்படியாய் 

பழகிப் போதல்


நாற்பதுகள் நானறிய 

வயதில் அழகு 

போர்க்களத்தில் பூப்பறிக்கும் 

தெளிவின் கனிவு ..


Tuesday 1 June 2021

வாழ்வெனப்படுவது..

விதைத்தலும் இல்லை 

அறுத்தலும் இல்லை 

எங்கும் சேமித்தலும் இல்லை

உணவின்றி இறந்ததென எவையுமில்லை 

வானளவு சுதந்திரமாய் வாழ்க்கை 

பறவைகள்.. 



Saturday 29 May 2021

வறண்ட தாபம்..

 வானம் நீரை உறிஞ்சும் தாகம்

வாயோ வறண்டு கிடக்கிறது

தேனில் வண்டு திளைக்கும் மோகம் 

தீயே இதழாய் இருக்கிறது


காட்டிற் பாயும் ஆற்றின் தாபம்

காற்றே அணைக்க இருக்கிறது

கோட்டை அதிரும் யானைக்காமம் 

கோடை படர்ந்து வெறிக்கிறது 


பாறிவிழுந்தும் மரத்தின் தளிராய்

பாசம் இன்னும் துடிக்கிறது

ஊறிய மாநதி உருள மறுத்து

உள்ளே சுழலாய்க் கிடக்கிறது


உடலோ மனசைக் கேளேனென்று

உலுப்பி உலுப்பி வெடிக்கிறது

படத்தில் மட்டும் பார்த்துப் புழுங்கும்

பாட்டை பாட்டு வடிக்கிறது 


Tuesday 2 February 2021

சிலம்பு..

 கோன் மறந்தும் அறஞ்சறுக்கின் 

கொளுத்துமது கோலையென்றும் 

வான் போற்றும் வாழ் பெறுவாள் 

வாய் தவறா வஞ்சியென்றும் 

நானிலத்தில் செய்தவினை

நடந்துன்னைத் தொடருமென்றும் 

கண்ணகியாற் காட்டுவது 

கதையன்று தமிழறமே.. 

Sunday 10 January 2021

பூசலாரைப் புரிதல்..

எவருமே காப்பாற்ற முடியா 

கையறு நிலையின் கைகள் 

இறுதி வினாடியில் அதிசயமாய் 

எவரேனும் வரக்கூடுமென்ற 

கடைசி நப்பாசையில் 

வானை நோக்கி அசைகிறது 


நீரில் மூழ்குகின்ற ஒருவன் 

தன்னைக் காப்பாற்ற வேண்டி 

எழுப்பும் சைகையில் தெரிகின்ற 

ஒற்றைக் கையின் 

அதே அவலக் காட்சிதான் இங்கும்


கந்தகப் புகையின் வீச்சத்தில் 

அபலக் குரல் எழுப்பியவாறு 

கருகி வீழ்ந்த அந்த 

கைகளின் வடிவம் தான்

இனப்படுகொலையின் சாட்சியாய் 

எழுதப் பட்டிருந்தது


ஒவ்வொரு விரல் வழியாகவும் 

ஓலம் எழுப்பி 

கண்சிதறக் கதறிய 

கைகளில் தெரிந்த அந்த முகங்களை

சிதைத்து எறிய முடிகிற 

மனத்தின் குரூரத்தை எண்ணிப் பார்க்கிறேன்


வருடத்தின் நாளொன்றில் மட்டும் 

வருவார்களெனக் காத்திருக்கும்

கல்லாய் இறுகிய நினைவுகளின் காட்சி 

மண்ணாக்கப்பட்ட பின் தான்

ஒவ்வொரு மனதிலும் உறுதியாய்

ஊன்றப்படுகிறது


பூசலாரை இப்போது தான் 

புரிய முடிகிறது 

மனசின் அகக்காட்சி தான் 

மண்ணின் யுகக்காட்சி