Saturday, 3 December 2016

இரெண்டாம் வானம்..

என்னைக் கொண்டாள்
என்னையே கொண்டாள்
தன்னைத் தந்தாள்
தன்னையே தந்தாள்
முன்னைப் பிறப்பின்
மூண்ட தீ முழுதும்
தண்ணியாய்க் குளிர்ந்து
தணிந்தது, என்றுமே

வானம் பரந்தது
பன்மையில்லாது என்கிற
ஞானம் வாழ்விலும்
உண்மையா? இவ்வளவும்
வானமாய்த் தெரிந்தது
வழியிடை மாறிட
நானுளேன் என்பதாய்
நாணுமோர் வானமென்
கானமில் வாழ்வினைக்
கண்டெனை மொண்டது
போனவோர் பிறப்பதன்
பூத்தலா? இல்லையென்
வழமைப் பிரமையா?
வாழ்க்கையின் வழுக்கலா?
இளமையின் சாகிற
ஏக்கமா? அறிகிலேன்

பிறப்பைக் கொடுத்தவா! பின்னரென் வாழ்வினை
இறப்பினில் தோய்த்து எடுத்தவா!  - உறுப்பென
ஒட்டியே வாழ்வுறும் உறவொன் றெனக்கும்
கிட்டிடா விழுவனோ கீழ்..?

Sunday, 6 November 2016

கண்ணம்மா என்பது..


கண்ணம்மா என்பது,

அடித்த காட்டாற்றில்
அடிபெயர்ந்து வீழ்ந்துவிட்ட
நெடிய பெருமரத்தின்
நினைவில், கிளையொன்றில்
இன்னமும் துடிக்கின்ற
இளந்தளிர்

கண்ணம்மா என்பது,

மாண்டாலும் எழுந்தெழுந்து
மறுபடியும், மறுபடியும்
மீண்டு கரைமனசை
மீட்டி, நுரை தளும்ப
ஆரத்தழுவுகின்ற அலை

கண்ணம்மா என்பது,

ஊரைப் பெயர்ந்து
ஓர் தசாப்தமானாலும்
ஈரமாய் நாசிக்குள்
எங்கிருந்தோ ஊர்ந்து வரும்
ஆட்டுப்பால் வாசத்தின்
அமர சுகம்

கண்ணம்மா என்பது,

அரைக்கண் செருகுண்டு
அந்தரத்தில் உயிர் மிதக்க
இதழால் செவி கவ்வி
இழுத்து, பிடரியிலே
விரலூர விட்டென்றன்
வெறும் பிறப்புக்குயிர் கொடுத்த
அன்புத்தேன் சொட்டும்
அடை

கண்ணம்மா என்பது,

பின்புறமாய் வந்தென்னைப்
பிடித்து, கழுத்திறுக்கி
சின்னமுளை ஈரத்தைச்
சிந்த, தோளேறி
தாடியிலே நாடியினால்
தடவி, குளைந்தபடி
அப்பா என அவனணைக்கும்
அமுத நிலை.

கண்ணம்மா என்பது,

வாழ்வை அப்படியே
வழித்தெடுத்து  விடுதலையின்
வேள்வித் தீயிலிட்டு
விதையானோர் கனவெனது
பிறப்போய்ந்து போவதற்குள்
பிறந்தால், கொடியேற
கண் நிறையக் கண்டு
காயமெல்லாம் மெய்சிலிர்க்க
அடக்கி வைத்திருப்பதெல்லாம்
அழுதூத்தி, புரவியைப் போல்
மண்புரளக் காத்திருக்கும்
மனசு..

Friday, 23 September 2016

மடி குளிரும்..

எமக்கான கொடியை இன்னும்
ஏற்றுகிறேன், பக்கத்தில்
இணைந்து நிற்கத்தான் நீங்களிலை
அசைந்தெழுந்து
ஏறுகின்ற செம்பாடல்
பாடுகின்றேன், ஒன்றாக
இசைந்து பாடத்தான் எவருமிலை
தலை நிமிர்த்தி
அகவணக்கம் செய்துருகி
எண்ணுகிறேன், நிரையாக
அடுத்தடுத்து நிற்கத்தான்
ஆட்களிலை, இது போல

தனித்துப்போய் கண்டத்
தகடுகளின் கோடிகளில்
தங்களுக்குள் கொடியேற்றி
தங்களுக்குள் பாட்டிசைத்து
தமக்கான தேசத்தை
தம் அறையுள் வடிவமைத்து
தாகத்தோடின்னும்
தவமிருப்போர் ஆயிரம் பேர்

பொறுமையாய் இருந்தாலும்
பூசலாராய் இருக்கின்றோம்
மனசின் அகக் காட்சி
மலர்ந்து விடிந்தொரு நாள்
மண்ணின் யுகக் காட்சியாகும்
மடி குளிரும்.. 

Friday, 2 September 2016

இதமான இரகசியங்கள்..

இளமழையில் துளிர்த்து
அழகுப் பசுமையாய் காற்றிலாடி
காயும், பூவுமாய் கண் நிறைந்து
பின்னோர் நாள்
பழுத்து காம்புடைந்து
சொல்லாத நினைவுடன்
மண் வீழும் இலையாய்

நீல வான் திரையில்
வெள்ளை ஓவியமாய் மிதந்து
கணமெனினும் வாழ்ந்து
பேசாத கதைகளுடன்
கலைந்து சென்றுவிடும்
முகிலாய்

கடலோடு கடலாகக் கிடந்து
காற்றணைக்க மெய்சிலிர்தெழுந்து
மூச்சிரைக்க
கரை நீவித் தழுவி அந்தக்
கதையெதுவுங்  காட்டாமல்
பின் வாங்கிச் சென்றுவிடும்
பேரலையாய்

வெளியில் சொல்லாமல்
விடைபெற்றுச் செல்கின்ற
எத்தனை கதைகளுண்டு எம்முள்?
கொடுப்புள் சிரிப்பாயும்
கண்ணோரம் கசியும்
கனநினைவுத் துமிப்பாயும்
மிண்டித் தொண்டைக்குள்
விழுங்குமுமிழ் நீராயும்
இதமான,கனமான
எத்தனை இரகசியங்கள்
எங்குமே தெரிதலின்றி
எம்மோடே முடிகிறது..

Sunday, 28 August 2016

தனிமை நடக்கும் தன்னந் தனியே..

தனியே இருந்து பழகப் பழக
இனிமை அதிலே துளிர்க்கும்
ஓர்நாள்
இணைவோமென்று யார் வந்தாலும்
இடையில் தயக்கம் தடுக்கும்

என்னோடுள்ளே பேசிப் பேசி
என்னோடுள்ளே இன்பம் துய்த்து
என்னோடுள்ளே சிரித்து, அழுது
எனக்குள் நானே பொங்கித் தணிந்து
எனக்கோர் உலகை நானே வரைந்து
என்னை நடக்கப் பழக்கி அதிலே
எனக்கு நானே உறவு, குடும்பம்
என்றோர் மனதை அடைந்தேன்

இடையில்
எனக்கும் சாய ஓர் தோள் வேண்டும்
எந்தன் தலையை மடியில் கிடத்தி
பிடரி வருடும் விரலும், குரலும்
இருந்தாலென்று எண்ணம் தோன்றும்
அதுவும் பின்னர் மேகம் போல
வடிவம் மாறிக் கரையும், மறையும்

முடிவில்
பட்டுத் தெளித்த பதத்தை அடைந்து
கிட்ட நெருங்க யார் வந்தாலும்
விட்டிடைவெளியில் இவர்களும் என்னை
தட்டி வீழ்த்தி ரசிப்பரென்றச்சம்
எட்டத் தள்ளியே நிறுத்தும்,
போதை
உற்றுப் பழகி மகிழ்ந்தவன் அதனை
விட்டுச் செல்ல விரும்பானென்பதாய்
தனிமைப் போதை இன்பம் மாந்தி
இனிமை அதனுள் எய்தி, பழகி
இனிமேல் வாழ்க்கை இதுவென்றறிந்து
தனிமை நடக்கும் தன்னந் தனியே..

Saturday, 2 July 2016

விடுதலைப் போராட்டம் நெடிது..

நண்பா!,
நீ எத்தனை நெருப்பாற்றை
நீந்திக் கடந்தாய் என்பது பற்றி
எவரும் கேட்கப் போவதில்லை
இறுதியில் நீ வென்றாயா
என்பது மட்டும் தான்
விவாதிக்கப்படும்

தோல்விக்கான காரணங்களை மட்டுமே
தோண்டிக் கொண்டிருப்பவர்கள்
எப்போதுமே தோள் கொடுத்தவர்களாக
இருக்க மாட்டார்கள்

விடுதலைப் போராட்டத்தின் வெற்றியென்பது
காலையில் சாளரத்தை திறந்தவுடன்
கை நீட்டும் சூரியக் கதிரல்ல
மாறாக
என் நண்பனொருவன் தன் பழத்தோட்டத்தில்
முப்பது ஆண்டுக்குப் பின் பயன் தருமென
தன் மகனுக்காக நாட்டத் துவங்கியிருக்கும்
செம்மரங்களைப் போன்றது

நூற்றாண்டு நின்று நிழல் தரப்போகும்
விதைகளை ஊன்றிய கரங்கள்
ஒருபோதுமே அவற்றை
தமக்கென்றெண்ணித் தாட்டதில்லை
நமக்கென்று சொல்லியே நட்டார்கள்
உரிய காலம்வர அது
உயர்ந்து வளரும்
அதுவரை
அப்படிமிப்படியுமாய் பேச்சுக்கள்
அடிபட்டுக் கொண்டிருக்கட்டும்.. 

Sunday, 19 June 2016

சாவும் கவிதையும்..

உணர்வில் மூழ்கி
உலகை மறந்து
அதுவே நானாய் ஆகி
கவிதை வனைவதைப் போல
சாவையும் வரைகிறேன்

இப்படித் தொடங்கும் கவிதை
எப்படித் தொடரும்
அடுத்த வரியெது? முடிவெது?
இடையிலே
எப்படிக் காட்சிகள் இணையும்?
அறிகிலேன்,

அப்படியேதான் சாவும்,
அழகாய், உணர்வாய்
அத்துணை அர்த்தமாய்
எண்ணியே பார்த்திரா
எத்தினை காட்சிகள்
இணைய, இணைய
இத்துணை தூரமும்
இயல்பாய் இணைந்து வந்தது

தவிரவும்
அர்த்தக் கவிதையும், சாவும் எப்பவும்
அத்துணை நீட்டினால்
அழகிலை, அறிக!

ஆனாலென் கவி
முடிக்கும் வரிகளில்
முழுதாயென் உயிர் சுடர்ந்து
துடிப்பதே என் முகம், முத்திரை
அஃதுவாய்
சாவு என்னுடை
படலையைச் சாத்தையில்
யாவும் நிகழணும்
யாசகம் வேறிலை.. 

மேகம் நினைவாய் மிதக்கிறது..

உண்மைதான் பிரியமே
இல்லாத போது தான்
இருந்ததை உணர்கிறேன்

காட்சி கலங்கிப் போனது
காலம் உருண்டு வீழ்ந்தது
நாசியிலிருந்து மட்டும் இன்னும்
நகரவே இல்லை
நம் சுகிப்பில் அன்றவிழ்ந்த
நன் மணம்

ஓக்மர இலையை ஒடித்து
ஊர்க்கிழுவையை முகர்வதும்
அடைத்த புட்டிப் பாலிலே
ஆட்டுப்பால் மொச்சையை
அனுபவிப்பதுமாக

இருப்பதிற் தேடித்தேடி
இழந்ததை முகர்கிறது
மூக்கு

வாழ்ந்தது பட்டம்
வாசனை அதன் நூல்
வழுக்கி அதைவிட மனமிலாதின்றும்
வலிக்கிறதென் கை
அண்ணாந்து பார்க்கவோ
அத்தனை அழகு

விண்கூவத் தொடங்கிற்று..


Friday, 27 May 2016

வேதனையின் விதை..

வேதனை தாளாமல்
நாமெல்லாம் இறந்துகொண்டிருந்தபோது
அவன் பிறந்தான்
வேதனை சுமந்து பெற்ற
விதை அவன்

கண்ணை மறைக்கும்
வெற்றிக் கற்பனைகளில்
அவனொருபோதும் மிதந்ததில்லை
ஆனால்
தான் நட்ட விதை
துளிர்க்குமென்ற நம்பிக்கை
அவனிடம் இருந்தது

பெரு விம்பமாய்
அவனை ஆக்கியது
வெறும் பேச்சல்ல,பேராற்றல்

புனைந்து காட்ட மட்டுமே
பலரால் முடிந்த போது
அவன் நிகழ்ந்து காட்டினான்

சுயபரிசோதனையெனும் பேரில்
இங்கிதம் வழியும்
தந்திரம் நிறைந்த
ஆயிரம் முகமூடிகளை
நீங்கள் அணிந்து கொண்டாலும்
அவனில்லாத விடுதலைக்காலத்தை
எதைத்தோண்டினும் உங்களால்
எடுத்துவிட முடியாது.. 

Saturday, 21 May 2016

நெக்குருகி எனை நீயும் நினைப்பாய்..

முடிவற்ற சோகத்தின்
துயர் நிறைந்த சொற்களை
கற்களாக்கித்தான்
விமானநிலையத்தை
கட்டித் தொலைத்திருக்கிறார்கள் போல,

நீ வெளியே தெறிக்கவிட்ட
விம்மலையும், உப்பாற்றையும்
தாங்க முடியாக் கனத்துடன்
ஏந்திக்கொண்டு வீடு வந்தேன்
நீ ஓடித்திரிந்த அறை
வெறிச்சோடிக்கிடக்கிறது
பேரலைப் பிரளமாய்
என்னை மீறி எழுந்திறங்கும் மூச்சை
ஏது செய்வதென எனக்குத் தெரியவில்லை

என்றோ ஒருநாள்
நான் திரும்பவும் வருவேனென
நீ விட்டுச்சென்ற
விளையாட்டுப் பொருட்கள்
அங்கங்கே கிடந்து
உன் சிரிப்பையும்
கதகதப்பான கட்டி அணைப்பையும்
விம்பமாயெழுந்து
என்னில் உருவாடவிட்டு
உயிரைக் கருக்கி எரிக்கிறது

போகேனென நீ கெஞ்சி அழுதபோது
பிய்ந்து போனெதென் ஆவி
சரி, போய் வா என் சுவாசமே
உலகின் எங்கோ ஓர் மூலையில்
விதியென்றொன்றிருந்தால்
உடம்புக் கணச்சூடு உயிரில் ஒட்ட
நெக்குருக நீவி
ஆரத்தழுவி அணைத்துக் கொள்வோம்..

Saturday, 5 March 2016

ஊற்றைப் போல் நுரைக்கட்டும் உறவு..

தோட்டமும் எங்கும்
தொங்குகின்ற பழக்குலையும்
பாட்டும், செவிக்கரையை
பதமாகக் கவ்வுகின்ற
காற்றும், காதலுமாய்
கண்ணை விட அழகாக
நேற்றென் வளவுந்தான்
நிறைவொழுக இருந்ததடி

கரும் நச்சுப் புகையெழுந்து
காலத்தின் உள் நுளைய
அருந்தவ வாழ்வெறிந்து
ஆலவிடங் கழுத்தணிந்து
எரிகின்ற வயல்தாண்டி
ஏறிவந்து பார்க்கையிலே
தெரிந்தவரும் எவருமில்லை
திக்கிடமும் தெரியவில்லை

வளவும் தரிசாகி வறள
வான் பார்த்து
அழவும் முடியாமல்
அடுத்த நிலை புரியாமல்
இழவு வீட்டின்
இடியுண்ட முகந்தாங்கி
எழவே இயலாமல்
இருண்டிருந்த நிலம் மீதில்
உலகாய் ஓர் துளி
உருண்டதடி, என்ன இது

கண்ணீரா, நீரா
கனவா, நிசந்தானா?
எண்ணிப் பார்க்கவும்
இதயத்தில் பலமில்லை
கண்ணீரில்லை ஏனெனில்
கரிக்கவில்லை, அண்ணாந்தேன்
விண்ணீர் தான் மெதுமெதுவாய்
விழுந்தணைக்கத் தொடங்கிற்று

என்னிலமும் கூட
இனிப் பச்சை நிறமாகும்!
உன்வரவே அதற்கு
உரமாகும் - என்னினிய
காற்றே எனையிறுக்கிக்
கட்டிக் கொள், என்றைக்கும்
ஊற்றைப் போல் நுரைக்கட்டும்
உறவு..

Thursday, 21 January 2016

எம் வானின் தாரகைகள்..

நானென்றும் நீயென்றும்
நடக்கின்ற உலகத்தில்
நாமென்று வழி காட்டினீர் நம்
நாடியில் உணர்வூட்டினீர்

கூனாகிக் கிடந்த எம்
குலத்தினை நிமிர்த்தினீர்
குன்றாக்கி விளக்கேற்றினீர் எம்
கொள்கையை நெய்யூற்றினீர்

இடியேதான் வீழ்ந்தாலும்
ஏனென்று கேட்காத
எம்மிலே செவி பூட்டினீர் எம்
இனத்துக்கு விழி நீட்டினீர்

நான் செத்துப் போனாலும்
நாம் சாகக் கூடாது
என்பதை வாழ்வாக்கினீர் எம்
எதிர்காலத் திசைகாட்டி நீர்

உம் வாழ்வுத் தடம் பற்றி
உருள்கின்ற எம் காலம்
தம் காலம் தனைஆக்குமாம் உம்
உயிர்ச்சோதி அதைப் பார்க்குமாம்...