Tuesday 7 February 2012

அணையாத தீபம்..

அந்த விளக்கு இன்னும்
எரிந்து கொண்டே இருக்கிறது

நீ பிறந்திருந்தபோதில்
பாம்பெறும்பு அண்டாமல்
பக்கத்தில் ரா விளக்காய்
இதுவே எரிந்து கொண்டிருந்தது

வெட்கத்தை விட்டுச் சொல்வதானால்
நீ கருவில் உருவாகையிலும் கூட
காமாட்சி விளக்காய்
கை கொடுத்ததும் இதுவே,

மின்சாரத் தூணையே காணாத
எம் ஊரின்
கும்மிருட்டு வீடுகளில்
பகலில் கூட
இதனைத் தணித்து வைக்கவே
முடிந்தது,

நீ பள்ளிக் காலங்களில்
படிக்கின்ற போதும்
பாசறைக் காலங்களில்
படைக்கின்ற போதும்
உனக்கு
வெளிச்சமாய் இருந்ததும்
இவ்விளக்கே..

வழமை போலவே இன்றும்
காதைப் பிளக்கின்ற
குண்டோசைகளை நோக்கி
’பாலை மரம் போல
நீ போனாய்
பலர் சூழப் படத்துண்டாய்
வீடு வந்தாய்’

வாழ்வே இருண்ட பிறகு
வீட்டில் என்ன வெளிச்சம் என
எண்ணியும் கூட
அந்த விளக்கை என்னால்
அணைக்க முடியவில்லை

கால நினைவுகளைச் சுமந்தபடி
இப்பொழுதும்
அதே அந்த விளக்குத்தான்
ஒளி சிந்திக் கொண்டிருக்கிறது
உந்தன்
படத்தின் முன்னால்...

No comments:

Post a Comment