Tuesday 5 May 2015

நான்கு விழுப்புண்கள்..

மாவீரனே..
கடலுக்கும் ஆறுக்குமான இடைவெளி
உன் கனவு
மிகுந்த மேடுகளும் அதிகம் பள்ளங்களும்
கட்புலம் மங்கலாயினும்
கடலோசை
காதிற் கேட்ட படியே இருந்தது
இயன்றவரை நீயும் ஏறி இறங்கினாய்
நீ சென்ற வழியெங்குமின்று
திட்டுத் திட்டாய்
தேங்கிக் கிடக்கிறதுன் தீர(ரா)க் கனவு
எட்டமுடியவில்லைக் கடலை, எனினும்
என்றேனும் ஓர்நாள்
இதே வழியில் ஓராறு எட்டலாம்!
அதுவரையில்
நினைப்போர் வாழ்நாளுள்
நீயும் நின் பாதைகளும்

போராளியே..
தலைப்பயணி முன்னில்லாத்
தவிப்பும்
சகபயணி போய்விட்ட
சலிப்பும்
ஏன் பயணம் தொடங்கினாயென
இடிந்து போயிருக்கிறாய்
இப்படித்தான் இந்த உலகு
இலக்கை நீ எட்டினால்
வழிகாட்டியென்றும்
இல்லையேல்
குழிகாட்டியென்றும்
குறிப்பிடும்
இடையில் நீ பட்டதெல்லாம்
என்றைக்கும் எண்ணாது
இப்படித்தான் தோழா உலகு

மக்களே..
பாய்ந்துவரும் வல்லூறு பார்க்காமலிருக்க
குஞ்சுகளை இறக்கையுள் ஒளிக்கும்
கோழியாய்
உட்பாவடையுட் கூட
ஒளித்துவைத்துக் காத்தீர்கள்
நீர்க்கடன் செய்யத்தான்
கடற்கரை போனோமென
எவருந்தான் எண்ணியிருக்கவில்லை
பெற்று நீர் வளர்த்த பெருங்கனவு
தசைத் துண்டங்களாய்
சிதறிப் போய்க்கிடந்தது
கொள்ளிக் கட்டைகளாய்க்
கொட்டுண்டு கிடந்தது
கொள்ளி வைக்க ஆளில்லாக் குறைக்கோ..?
இழந்தும், இழந்தும்
எல்லாமாய் நீர் இருந்தீர்

பூர்வீக தேசமே..
தேசங்களை ஈன்ற தாயின் வயிற்றில்
இந்தா பிறக்கிறேன் என்பதாய்
உப்பித் தெரிந்தாய்
நாமும் பிரசவம் பார்க்க
கொத்தாய் குலையாய்
குடும்பங் குடும்பமாய்
எத்தனை கொடுத்தும்
இன்னுமுன் பிறப்போ
சத்தமே இன்றிக் கிடக்குது
இன்னமும்
ரெத்தங்கண்டு மொண்டு தான் பிறப்பியோ..?
கொடுப்பதெம் பணி
பிறப்பதுன் கடன்

Monday 4 May 2015

பறவையைப் பிரிந்த சிறகு..

எப்படி முகிலே நீ
என் வானந்தனை அகன்றாய்..?

எப்படித் தூரிகையே
என் வண்ணந்தனை மறந்தாய்..?

எப்படி நறுமணமே
இப் பூவின் இதழ் பிரிந்தாய்..?

எப்படி என் பேச்சே
இந்நாவை நீ கழன்றாய்..?

எப்படிச் சிறகே நீ
இடமறியா நடுவானில்
இப்பறவை உடல் விட்டு
எங்கேயோ பறந்து சென்றாய்..?

கருவேப்பிலை..

உரமாக மட்டும் நீ
உண்டுயரும் செடியல்ல
கருவேப்பிலை நீ கறியல்ல என்றுபலர்
அறைந்தறைந்து சொல்லியுமேன்
அறியவில்லை மென் மனசே..?

வேண்டாமல் விலகுகின்ற கால்களையும்
நாய்க்குட்டி
விளையாட்டென எண்ணி
விருப்போடு பின் தொடரும்
பாலக உள்ளமேன் பெற்றாய்
பால் மனசே...?

என்புருகிக் கரைந்து
இரு கையும் நிறைய உன்னை
அப்படியே அள்ளி
அனைத்தயுமே கொடுத்து விட்டு
பாற்தாகம் வந்த கன்று
பசு முகத்தைப் பார்ப்பது போல்
ஏற்காத ஒன்றுக்காய்
ஏங்கிடுதல் ஏன் மனசே..?


சிறகை ஒடுக்கும் பறவை..

வானம் புரியாத
வறள் நிலமாய் வாழ்க்கை
வலுவிழந்தும் வளையாக் கற்றாளைத் திமிராக
மானம்,
மனசோ கற்பாறைதானெனினும்
மலர்ப்பிஞ்சு வேர்விரல்கள்
மார்தடவ பிளக்கிறது

பருவம்மாறத் திரும்புதற்கு
பறந்துவந்த
பறவைக்கும் உடல்
பலமிழந்து போகிறது
உருவமும்,உளக்கட்டும்
உடைந்து நரைக்கிறது
உற்றிருந்த உறவுகளும் ஒன்றுமின்றி விலக
தெரிவுகளும் இல்லை
திரும்பியேனும் செல்வதற்கு
தெருக்களும் இல்லை, தெளிவில்லை
தெரியவில்லை

தெரிகிறது
பறப்பினிமேல் முடியாத
பாரமுணர் பறவையொன்று
கற்பாறைகள் உள்ள
ககனத்தின் மேற்பறந்து
இயன்றவரை மேலே
ஏறி உயர்ந்து விட்டு
அடிக்காமல் சிறகுகளை
அத்தோடு ஒடுக்கிற்று..

எவருக்கும் நோகாமல் அனுப்பு..

கண்கள் செருகிக் காட்சியும் மங்கிக்
கால் குளிர்ந்து
எண்ணம் மூச்சு எழுதல் திணறி
இறுக்கமுற்று
மண்ணை விட்டு நீங்கும் நேரம்
மனசு சொல்லும்
'உன்னாலெவரும் வாழ்வை இழந்து
உடைந்ததில்லை
உன்னுள் எந்தக் குற்ற உணர்வும்
இருந்ததில்லை'
என்னும் செய்தி செவியிற் கேட்க
எனை அனுப்பு
என்னைச் சிதைத்தும் நகர்த்திச் செலுத்தும்
என் முருகா..