Tuesday, 15 May 2012

மகனெழுதும் கவிதை மனத்துள்..

என்னை நீ தூக்கி வைத்திருக்கும் நிழற்படத்தில்
உன்னோடு ஒரு காலம் இருந்திருக்கேன் என மகிழ்வேன்

ஆறாம் மாச ஊசி எனக்கடித்த நாளன்று
கூறாமல் போனாயாம் எங்கேயோ, பின்னருனை

கடல் தாண்டி வந்தேதோ கட்டட இருட்டறையின்
கம்பிகளின் பின்னால் நான் கண்ட நினைவிருக்கு

எட்டி எனைத் தொட்டுப் பார்க்க நீ எத்தனித்தாய்
முட்டி விடும் என நானும் முயன்று கை நீட்ட

தட்டி விட்டான் ஒருவன் தள்ளியுனை உதைத்து விட்டான்
பட்டமரம் போல வீழ்ந்தாய் அம்மாவும்

கட்டி எனைப்பிடித்துக் கண்கலங்க, புறப்பட்டோம்
குட்டி என நீ கூப்பிட்ட குரலின்னும்

தட்டுப்பட்டபடி கிடக்குதுள்ளே, இன்றைக்கு
எட்டாத தூரத்தில் எங்கேயோ உள்ளாயாம்

கணணித் திரையில் நீ கண் சிவந்தபடி இப்போ
அணைக்கக் கை நீட்டி அழைப்பாய் நானும் தான்

காற்றில் வெறுங்கையைக் கட்டி எம்மை நாம்
தேற்றிக் கொள்வதிப்போ தெரிகிறது, அப்பா நீ

ஊட்டி விடுவாய் உங்கிருந்து, ஆக்காட்டி
நீட்டுவேன் என் வாயை நீயும் தான் ஆவென்பாய்

ஆளாளை ஏமாற்றல் அறிந்தும் வெறும் வாயை
அசைபோட்டு மென்றெம்முள் ஆறுதல் கொள்ளுகிறோம்

பெற்றோர் சந்திப்பு என்றால் பள்ளியிலே
மற்றக் குழந்தைகட்குத் தந்தை தாய் வந்திருப்பார்

எனக்கு மட்டுமிங்கே எப்போதும் அம்மா தான்
மனம் கனத்து நானுன்னை வாவென்று அடம் பிடித்தால்

இனிப்புப் பை அனுப்பி ஏமாற்றி விடுகிறாய் நீ
எனக்கின்னும் விளங்காததிது தான் எங்கேயோ

இருக்கின்றாய் இருந்தும் ஏன் வீட்டை வருவதற்கு
மறுக்கின்றாய் என்ற மர்மம் தான்? விரைவாகப்

பார்ப்போமெனத் தினமும் சொல்லுகின்ற அம்மாவின்
நீர்த்தின்னும் போகாத நெடுநாள் வார்த்தைகளைப்

போர்த்தபடி நானுறங்கிப் போகின்றேன் என்றைக்கோ
சேர்வாய் எனை என்னும் சிறு கனவின் தாலாட்டில்...

உனக்கான அருகதை..

காட்டாறு
எங்கள் வேர்கள் பற்றி உள்ள
கரையை அரிக்கத் தொடங்கிய போது
விழுதுகளை இறக்கி
விழாமல் நின்று கொண்டு
வேர் வலைகளை விரித்து
மண்ணை இறுகப் பற்றினோம்
அப்போதில்
பக்கவேராகக் கூட நீ
பங்களிப்புச் செய்திருக்கவில்லை
வேரோட்டம் பற்றி மட்டுமே
விமர்சித்துக் கொண்டிருந்தாய்

காட்டாற்றின் பலவந்தம்
கேட்பாரற்று உள் நுளைந்த போது
வேர்களால் கற்களைக் குடைந்து
வேகத் தடைகளைப் போட்டோம்
உயிர் கொடுத்து
பாதையைக் கூட அடைத்தோம்
அப்பொழுதில் நீ
கழிவறையில் பொழுது போக்காகப் படித்த
காலாவதியான கோட்பாடுகளுக்குள்
வேகத்தடை முறைமை வரவில்லையென
காட்டாற்றின் அருகில் நின்று
கத்திக் கொண்டிருந்தாய்

காட்டாறு மட்டுமே எனில்
கையாண்டிருப்போம் நாம்
எமக்கான நிலப்பரப்பை
எமதாக்கி வைத்திருப்போம்
கண்டத்தகடு பிளந்து
கடல் புகுந்த போது தான்
ஊட்டம் குறைந்து உடைந்து போனோம்

ஒவ்வொரு வேர் வேராய்
உயிரறுந்து போம் போதும்
அவ்வளவு ஓலங்கள் அழும் போதும்
காட்டாற்றை நோக்கி
ஓர் கல் கூட எறியாத நீ
எப்படிப் போராடுவதென்று
எமக்குச் சொல்லித் தருகிறாய்

இப்போதில்
நாம் சிதைக்கப்பட்ட காட்சியை
மிக ரசித்து
மாலைத் தேனீராய் சுவைத்துக் குடிக்கிறாய்
குடி

சிதைந்த காயத்தால் இன்னும்
சீழ் ஊற்றி வரும் நிலையில்
அதைச் சொல்லிச் சொல்லி
ஆனந்தக் கூத்தாடுகிறாய்
ஆடு

கந்தக வாசனையே
கண்டிரா உன் மூக்கால்
கட்டமைப்பின் பிழை என்று
கத்தித் திரிகிறாய்
கத்து

ஒன்றை மட்டும் புரிந்து கொள்

விருட்ச இருப்பின் விதைகள்
மண்ணில் மட்டுமல்ல
மனசிலும் முளை விட்டிருக்கிறது
மண்ணில் விருட்சம் மரித்தது போலிருந்தாலும்
மனசில் விருட்சம் மரணிப்பதே இல்லை
மனசின் அகக் காட்சி தான்
மண்ணின் யுகக் காட்சி
அது
தேவை தீரும் வரை
திரும்பத் திரும்ப எழும்..

கற்றாழை இதயம்..

இலை துளிர்த்தும் அது உதிர்ந்தும்
பனி படர்ந்தும் அது கரைந்தும்
பூ மலர்ந்தும் அது விழுந்தும்
பருவங்கள் ஆண்டுகளாய்ப் பல ஓடி
என்றோ ஓர் நாளில்
நாம் சந்திக்கின்ற போது
உன்னுடைய பழையவனாய்
நான் இல்லாமற் கூடப் போகலாம்

உன் நினைவுகளின் ஈரப்பதன்
குறையாமல் இருப்பதற்கு
என் நெஞ்சின் ஈரத்தை
ஆண்டுகளாய் இறைத்து முடித்து விட்டேன்

உன் நினைவுகளுக்காக மட்டுமே
செலவழிக்கப்பட்ட என் மூளைச்செல்கள்
புதையுண்ட ராஜதானியில் இருந்து
எடுக்கப்பட்ட கல்லைப் போல
ஆயிரம் கதைகளைச் சுமந்தபடி
வெடித்துப் போய்க்கிடக்கிறது

செல்களில் உறைந்துள்ள
நினைவுகளைப் பிரித்தெடுக்கும்
தொழில் நுட்பத்தை
நீ வரும் அந்த நாளில்
யாரேனும் கண்டுபிடித்திருந்தால்
உன் பற்றிய
என் நினைவின் வார்த்தைகளை
உயிர் ததும்பும் ஓசைக் கவிதையாக
ஒரு வேளை
உன்னால் படிக்க முடியலாம்

கிணற்றடி வாழையின் பசுமையாய்
உனிலன்று படர்ந்திருந்த நான்
இன்று
ஆற்றோட்டம் நின்று போன நிலமாய்
வெடித்துப் பிளந்து போயிருக்கிறேன்
ஆயினும்
நீ என்னைக் காணப்போகும் அந்த நாளில்
என் கற்றாழை இதயம்
மனத்தரிசில் தன்னைப் பிழிந்து
ஆவி உயிர்ப்பை அகத்துறிஞ்சி
நெகிழ்ந்து குழைந்துருகி நீராகி
காதலைத் துமிக்குமடி
கண்ணில்..

பறப்பின் தாகம்..

கட்டளைகள் எதுவுமே காதிற்
படாமலுக்கு
வெட்டவெளி கிழித்து விண் குளித்து
வீறாக
பொட்டல் வெளி கடல் மலைகள்
பொருட்டாகத் தோன்றாமல்
திட்டமிட்ட இலக்கின்
திசை நோக்கிப் பறக்கின்ற
களைப்பறியாப் பறவை ஒன்றின்
காத்திரச் சிறகாக
இளைத்து நான் சோர்ந்து
இருந்திடமுன் எனையாக்கு

ஆவியள்ளும் கண் சிமிட்டில்
அசைத்துருக்கும் பாடலதில்
பாவி என் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்ற
பாசாங்கறியாத பால் வாயின் சிரிப்பொலியில்
பட்டுண்டு என் நெஞ்சம் பலவீனமாகுமுன்னர்
பாசம் எனும் வேர் படராத பாதை வழி
கட்டுப்பாடிழக்காமல் காலை நடக்க விடு

செம்பால் வழிந்தோடிச் சிவந்த
எம் பயணத்தை
வம்படித்துப் பேசுகின்ற வாய்களுக்குப்
பதில் சொல்லி
என் பலத்தைச் சிறிதேனும் இழந்து விட
வைக்காதே
இன்னும் நெடும்பயணம் இருக்கிறது
அதனாலென்
கண் வாய் காது பொத்திக் காப்பாய்
என் சக்தியினை

நீண்டு செலும் நள்ளிரவின்
நெடுவான வெளியொன்றில்
தோன்றவுள்ள விடிவெள்ளி தொலைவிலில்லை
அதை நோக்கி
அடித்து நான் பறக்கும் அற்புதத் தினம்
வரையில்
துடிக்கவை என் நெஞ்சை துவண்டு விட
ஒப்பாதே

என் பறப்பின் தாகம் எதுவென்று
நீ அறிவாய்
மண் தாகமும் அது தான் மனதிருத்து
விடுதலையே..

இயக்கிய வார்த்தைகள்..

எப்படியோ எவ்விதியோ எதிர்பார்க்கா இடமொன்றில்
ஏற்பட்ட ஒரு சின்னச் சந்திப்பு வளர்ந்தோடி
இப்பிறப்பில் என்றைக்கும் எதுவந்தும் மறக்கேலா
இறப்புவரை வரப்போகும் இத நினைவாய் ஆனதடி

சேர நாட்டினது செழுங்குளுமைத் தளதளப்பு
சிந்தாமற் சிந்தியெனைச் சிலிர்க்க வைக்கும் விந்தையுந்தன்
ஓர விழிப்பார்வையிலே ஒழுக புன்சிரித்தாய்
உயிருருகி ஓடி அப்போ உன் காலை நனைத்ததடி

என்னிலமை தானுனக்கும் இருந்திருக்கும் ஏனென்றால்
எப்படியோ ஓர் பேச்சை எடுத்தாய் எமைச் சுமந்து
தன்னுடைய பாதை வழி போகின்ற புகையிரத
தாளில்லாச் சாளரத்தைத் தாண்டுகின்ற ஊர்களைப் போல்
எமைக் கடந்து சென்றுவிட்ட எமதெமது வாழ் கதையை
எமையறியாதெமக்குள் நாம் ஏன் தானோ பகிர்ந்து கொண்டோம்

ஊரொன்றில் நீயிறங்கிப் போனாலும் அதன் பின்னர்
உன்னை நான் ஒரு போதும் காணவில்லை என்றாலும்
தீராத எம்பேச்சுத் தீரவில்லை ஊடகத்தால்
தேசங்கள் கடந்தலையாய் தினம் பேசித் திரிந்ததடி

எத்தனை மலைகடல் கடந்திருந்தாலும்
எத்துணை அருகில் நாம் இருந்துகொண்டிருந்தோம்
இத்தனை காலம் நாம் இயக்கிய வார்த்தைகள்
இனி வரும் காலமும் இயங்கிடும் கேளடி!

பேச்சறுந்த இந்தப் பெரும் மெளனக் காலத்துள்
நீச்சலடிப்போமெம் நினைவுகளில் என்றைக்கோ
மூச்சறுந்து போகுமுன்னர் முன்னரைப் போல் பயணமொன்றில்
முதுமை வந்திருந்தாலும் முயன்றேனும் கண் விரித்து
ஆளாளை எப்படியும் அடையாளம் கண்டிடுவோம்
அதுவரையில் சுகமாக நீ வாழவேண்டுமடி நிம்மதியாய்..