Thursday 16 February 2012

இப்படியாகத்தான் தோழர்களே..

திடீரென்று ஒரு நாள்
மம்மல் பொழுதொன்றில்
எல்லைப் பிரதேசத்தில் உள்ள
என் வீட்டு வேப்ப மரத்தில்
பறவை ஒன்று வந்து
குந்தி இருக்கத் தொடங்கியது
அதன் ஈனஸ்வரமான
பசிக்குரலைக் கேட்டு
என் உணவில் சிறிதளவை
அதற்கு நான் வழங்கியும்
இருந்தேன்,

மறுநாள் கூடு கட்டவும்
குடும்பமாயும் குழுமமாயும்
வந்திருக்கவும் தொடங்கியது,
என் நாளாந்தச் சமையலுக்காக
வைத்திருந்த விறகுகளை
குச்சிகளாய்ப் பிரித்தெடுத்து
கூடு கட்டுவதை நான்
கவனித்தேன்,

சில நாட்களில் முட்டை இட்டுக்
குஞ்சும் பொரித்தது,
அதன் பின்னர் ஒரு போதும் அது
உணவு கேட்டுக் கத்தியதில்லை
எனக்குத் தெரியாமலும்
தெரியவும் கூட
என் சமையற் கட்டுக்குள்
புகுந்து உணவுகளை
எடுக்கத் தொடங்கியது
அதில் பலவந்தம் இருந்ததை
நான் அவதானித்தேன்
சொந்தம் கொண்டாடுவதையும்,

குஞ்சு பொரித்த காலங்களில்
மரத்தின் கீழே எமைப்போக விடாமல்
கொத்தியும் கலைத்தது
பயத்தால்தானோ என எண்ணி இருந்தேன்
பொரிக்காத காலங்களிலும் கூட
இது தொடர்வதை
மரம் பறவைக் கூட்டத்தின்
கட்டுப்பாட்டில் வந்த
சில காலங்களின் பின்னர் தான்
உணர்ந்தேன்,

இப்பொழுது
என் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமல்ல
ஊரில் உள்ள அத்தனை மரங்களிலும்
பறவைகள்
திட்டமிட்டுக் குடியேறி இருந்தன,
ஆனாலும்
கேக்கிற பெடியள்
கேக்கத்தான் செய்தார்கள்
தட்டியும் முட்டியும்,
ஆயிரம் நியாயங்கள் இருந்தும்
ஏனோ..? காலம்
அவர்களையும் வீழ்த்திவிட்டது.

அதன் பின்னர்
கதவற்ற வீடாய்ப் போன
எம் வாழ்வில்
அவைகளின் இரைச்சலும்
கழிச்சலும் புகைச்சலும்
தாங்கொணாது
ஊரினைப் பெயர்ந்து
அவைகளால் வரையறுக்கப்பட்ட
மரங்களின் கீழே
அதே ஈனஸ்வரத்தில் முனகியபடி
கலங்கிய கண்களோடு
காலம் கடக்கிறோம்..

இருக்க இடந்தேடி
ஒண்ட வந்த பறவைக்கு
ஒரு மரம் மட்டுமல்ல
பெரிய கானகமும் ஊருமே
இப்படியாகத்தான் தோழர்களே..!
சொந்தமாக்கப்பட்டது..

No comments:

Post a Comment