செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

சிறகுதிரும் வேனில்..

யாருடைய விரல்கள் 

என் கைபிடித்து மண்பற்றைச்

சொல்லிக் கொடுத்தன, 

எந்த முற்றத்தில் 

எதற்காக என்பதெல்லாம் 

நினைவில் இருந்து 

மெதுவாக மங்கிப் போகிறது 


விடியும்வரை

பதுங்குகுழியில் எனது 

தலைக்கு அணையாய்  நீண்ட

தோள்கள் எவையென்பதும் நினைவிலில்லை.


ஆயினும் இன்றிரவின் அடைமழையெங்கும்

அழியாத நிழல்கள் அலைகின்றன

அவை என் கதவுகளைத் தட்டி

பெருமூச்சுவிட்டு 

மறுமொழி ஒன்றுக்காய்க் காத்திருக்கின்றன.


வீதியோரம் உருவம் தாங்கி நிற்கும் கைகளில்

நீர் வழிந்துகொண்டே இருக்கிறது

எத்தனை நாள் ? எண்ணிக்கை மறக்கிறது

எண்ணியவர்களும் 

ஒவ்வொருவராய் மறைந்தார்கள். 


சுவரில் எழுதிய பெயர்களை

மழை மெல்ல மெல்லக் கரைத்துவிட்டது. 

பெயர் மறந்துபோன இளையவர்களுக்காக

என் நெஞ்சினுள் ஓர் அமைதியான வலி புரள்கிறது 

நள்ளிரவில் ஒரு சீழ்க்கையோடு

இனி ஒருபோதும் திரும்பிவராதவர்கள்,

அவர்க்கென நட்ட கல்லும் இப்போது இல்லை.


தனிப்பனையொன்று 

வாடைக் காற்றில் தலைகருகி நிற்கிறது 

உதிர்ந்துபோன புள்ளினம் எவையென 

அது அறியாது, ஆனால்

தன் மட்டைகள் முன்னைவிடவும்

பேச்சற்றுக் கிடப்பதை அது நன்குணரும்.


எந்தெந்த நினைவுகளெல்லாம் 

வந்தகன்றனவென்று 

என்னால் இப்போது உரைக்கவியலாது 


நான் அறிவதொன்றே 

ஒரு சிறுபொழுதில் 

என்னுள் வேனில் பாடியது 

இப்போது 

அது என்னுள் பாடுவதில்லை..


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

மென்மழை மீண்டும் வரும்..

மென்தூறல் வந்துவிழும்

காயம்பட்ட செம்மண்ணில் 

உயிர்வாசம் எழும்,


ஒளிரும் சிறகசைவோடு

தகைவிலான்கள் தம்வானில் வட்டமிடும் 

பாழடைந்த குளங்களில் 

இரவெல்லாம் தவளைகள் 

பெருங்குரலெடுக்கும்,


பனிநடுங்கும் வெண்மையில் 

பாலைமரங்கள் பூத்துக்குலுங்கும் 

செந்தீ வண்ணச் சிறகுகளோடு 

செண்பகங்கள்

தரைதாழ்ந்த முள்வேலிகளில் 

வீடுகட்டச்  சுள்ளிபொறுக்கும்


குருதி சிந்திய போரினை அவை அறியா

ஒன்றுகூட அறியா


எல்லாம் எரிந்து முடிந்தபின்னும் 

எவற்றையும் அவை பொருட்படுத்தா

மாந்தர்குலம் முற்றாக வேரற்றுப் போனாலும்

மரங்களும் பறவைகளும் 

அதனைக் குறையெனக் கொள்ளா


புலர்காலையிற் கண்விழிக்கும் 

இளவேனிற் காலம்கூட 

நாம் அற்றுப்போன பெருவெளியை 

ஒருபோதும் அறிந்துகொள்ளாது 


காலம் அத்தனையையும்

ஒரு தாண்டலில் கடக்கும் 


பல்லாயிரம் கோடி 

உயிர் பார்த்த பூமிக்கு 

புல்லாய் கூட நாமிரோம்.. 


திங்கள், 17 ஆகஸ்ட், 2026

கையறு உறைநிலை..

குருதி குடித்து ஓய்ந்த 

நிலத்தின் மீது கவிந்திறங்குகிறது

பாறையென இறுகியதோர் பேரடங்கல்


தலை துண்டிக்கப்பட்ட 

பனைகளின் நிழலிருந்து

கிளம்பும் பெருந்துயர்கூட

இப்போது

நடுகற்களின் விறைப்பைப் பழகிக்கொண்டது


உறைந்துபோன நெஞ்சம்

தன்னைத்தானே வினவுகிறது 

அந்தப் பெருநெருப்பைக் கடந்து வந்தவர்கள்

நாம் தானா ? 

எம் ஊர்கள் எரியுண்டது நேற்றிலா 

அன்றேல்

பல நூறாண்டுகளுக்கு முன்னரா ? 

தம்மையே தொலைத்துவிட்ட பாழ்வழிகளில்

எவ்வுணர்வுமற்றுச் சுழல்கின்றன

உயிரற்று இயங்கும் பாதங்கள்.


மண்ணிலோ மலையிலோ 

சூறையாடப்பட்ட வெறுமையிலோ

எங்கு நடந்தாலும்

முள்வேலிகளுக்குள் சிக்குண்ட

கல்லின் பார்வையற்ற உறைநிறைவு.


இஃது

கொப்பளித்த கொதிநிலையில் 

காய்ச்சி ஊற்றி 

இறுகிப்போன ஈயத்தின் நாழிகை

இருப்பறுந்து போன காரிருட் பொழுது


பேரழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவன்

தன் சுடலை நீற்றை

தானே உதிர்த்துப் பார்ப்பது போல

பழைய நினைவுகளின் மீது

படியும் கனத்த கையறுநிலை.


பனியில் உறைந்த உடலென

எம் நிலம்,

முன்னே பெருநடுக்கம்

பின்னே மரத்தல்

ஈற்றில்

எல்லாமே முடிந்துவிட்டதென

தன்னைத் தானே கையறுத்துச் சரியும்

முடிவிலாப் பேரவலம்

வலிந்து பழக்கப்படுத்திய 

மறதி.. 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

வடுக்களில் துளிர்க்கும் பேரன்பு..

வழுவழுப்பான கருங்கற்பாறையில்

பச்சைப் பாசி படராது, 


பிளந்த மரத்தின் வெடிப்பில்தான்

பறவையின் எச்சம்

வேராகிறது.


குறைகளற்ற முழுமை 

காற்று புகாத

கண்ணாடிப் பேழை.


தழும்புகளும்

உதிர்ந்த சருகுகளும் தான்

காட்டில் காலம் நடந்துச் சென்ற சுவடு.


பிழைகளைச் சீவி அகற்றிவிட்டால்

பின்னர்

தழுவிக்கொள்வதற்கு

எச்சம் ஏதும் இருக்காது.


உடைந்த சிப்பியின் கூர்விளிம்பிற் தான் 

அலை

தன் வெண்ணுரையை அணிவிக்கும்.


நமது வடுக்களின்

மேடு பள்ளங்களிற் தான் 

காதலின் விரல்கள்

தங்கி இளைப்பாறுகின்றன.


களங்கமற்ற தூய்மை 

வெறித்த பனிப்பரப்பு,

அங்கே

அன்பின் ஈரம்

கண்ணாடியாக உறையும்.


முழுமை

யாரையும் தேவைப்படாத

குளிர்ந்த கல்.


நிறைவற்றமை தான் 

மனிதனை 

மனிதனிடம் அழைத்துச் செல்கிறது.


சிறிது உடைந்திருப்பதே

உயிரின் கருணை 

அங்கேதான்

அன்பு

தன் முதற் கூட்டைக் கட்டுகிறது..

புதன், 29 ஜூலை, 2026

முதுமையடைந்த காத்திருப்பு..

பல ஆண்டுகளாக

நான் பூட்டிவைத்திருந்த ஒரு தெருவை

பழைய தாயகப் பாடல் ஒன்று

இரவில் திறந்துவிடுகிறது


அந்தத் தெருவில்

நீங்கள் மீண்டும் நடந்து வருகிறீர்கள்.


ஒருவன் சைக்கிளின் கைப்பிடியில்

ஒரு கையை மட்டும் வைத்தபடி, 

ஒருவன் நண்பனின் தோளில்

தன் சிரிப்பை விட்டபடி, 

இன்னொருவன்

வீட்டிலிருந்து புறப்பட்டபோது

அம்மா சொன்ன கடைசி சொல்லை

இன்னும் முடிக்காத முகத்தோடு, 


அப்போது

உங்களுக்கு வயது இருந்தது, 


அதை நாம் மறந்துவிட்டோம்.


புகைப்படங்கள்

மனிதர்களின் வயதை அழித்துவிடுகின்றன.

அதில் நீங்கள்

எப்போதும் அதே இளைஞர்கள்

நரை வராத தலைகள்,

மகளின் முதல் பள்ளிநாளைக் காணாத கண்கள்,

வீட்டின் சாவியை

ஒருபோதும் சொந்தமாக வைத்திராத கைகள்.


விரைவில் வருவேனென 

அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்ற சிலரை 

வைத்தியசாலையின் வெள்ளை வெளிச்சத்தில்

நான் பார்த்திருக்கிறேன்.


காயத்தின் அருகில்

செவிலியர் வெட்டிய துணி,

படுக்கையின் அடியில்

மண்ணோடு கிடந்த செருப்பு,

தலையணைக்கு அருகே

அரைவாசி குடித்த தண்ணீர்


தேசம் என்ற பெரிய சொல்லைவிட

இப்போது அவைகள்தான்

என்னை அதிகம் கொல்கின்றன.


ஏனெனில்

வரலாறு எப்போதும்

பெரிய சொற்களில் எழுதப்படுகிறது, 


மரணம் மட்டும்

மிகச் சிறிய பொருட்களில்

தன் முகவரியை விட்டுச் செல்கிறது.


சீப்பு, கடிதம்.

திரும்பக் கொடுக்கப்படாத பேனா.

சட்டைப் பையுள் மடிக்கப்பட்ட

வீட்டுப் புகைப்படம்.


எத்தனை ஆயிரம் உயிர்களை

இந்த மண் வாங்கிக்கொண்டது?


அவர்களின் பெயர்களைச்

சொல்லத் தொடங்கினால்

இரவு போதுமா ? 


ஒவ்வொரு பெயருக்கும் பின்னால்

ஒரு சமையலறை இருந்தது,

தாய் காத்திருந்தாள்,

சகோதரி கதவுச் சத்தத்தைக் கேட்டாள்,

குழந்தை தன் நினைவில் இல்லாத 

ஒருவரின் முகத்தை

பிறர் சொல்லிக் கொடுத்த கதைகளால்

அப்பாவாக அமைத்துக்கொண்டது.


எத்தனை வாழ்க்கைகள்

எதிர்காலத்திற்கென்று செலுத்தப்பட்டன, 


ஆனால் எதிர்காலம்

அந்தக் கடனை

இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை.


என் கண்ணீருக்கு காரணம் 

இது தானே தவிர மரணம் அல்ல 


மரணத்திற்குப் பிறகும்

இன்னும் விடியாதிருப்பதே 

நெஞ்சை அடைக்க வைக்கிறது 


அவர்கள் நடந்த வீதிகள் இருக்கின்றன

ஆனால் அவற்றின் பெயர்கள் மாறியிருக்கலாம்

அவர்கள் தொட்ட மரங்கள் இருக்கின்றன

அவற்றின் கீழ்

இப்போது வேறு குழந்தைகள்

திணிக்கப்பட்ட வரலாறொன்றைக் 

கற்றுக் கொண்டிருக்கலாம்.


நீங்கள் பார்த்த கடல் இருக்கிறது

அது மட்டும்

யாருடைய ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு இரவும் அது கரைக்கு வந்து

உடைந்து விம்முவதை 

நான் தினமும் பார்க்கிறேன் 


என் மண்ணே.. 


உனக்காக இறந்தவர்களை

நான் கல்லாக்க விரும்பவில்லை.

அவர்களை

சிலைகளுக்குள் அடைத்துவிடாதே.


அவர்கள் ஒருகாலத்தில்

சிரித்த மனிதர்கள், 

பசியுற்ற மனிதர்கள்,

காதலித்த மனிதர்கள், 

வீடு திரும்ப விரும்பிய மனிதர்கள்.


அவர்களின் மரணத்தைவிட

அவர்களின் வாழாத வாழ்க்கைகளே

பெரியவை.


நாங்கள் உங்களிடம் 

ஒரு தேசத்தை வாக்குறுதி வாங்கவில்லை.

நீங்கள்தான் எங்களிடம்

ஒரு நாளை ஒப்படைத்துச் சென்றீர்கள்.

அந்த நாள்

இன்னும் வரவில்லை.


அதனால்தான்

உங்கள் படங்களைப் பார்க்கும்போது

என் கண்கள் அழுவதில்லை


என் காலமே அழுகிறது.


நாம் வாழ்ந்த ஆண்டுகள்

ஒன்றன் பின் ஒன்றாக

கண்ணீராக வெளியேறுகின்றன.


இளமை, தெருக்கள்,

நண்பர்களின் குரல்கள்,

அவசரமாக மூடப்பட்ட கதவுகள்,

இரவின் வானில் திடீரென அணைந்த விளக்குகள்

அனைத்தும்

ஒரே புகைப்படத்தின் பின்னால்

நின்றுகொண்டிருக்கின்றன.


அதன் பிறகு 

அவர்கள் திரும்பவில்லை

அவர்கள் முகங்கள் மட்டும்

அந்த இளமையிலேயே நின்றுவிட்டன


நம் காத்திருப்பும் 

முதுமையை எய்தி விட்டது 


பல்லாயிரம் உயிர்கள் கடந்தும்

இந்த மண் இன்னும்

அவர்கள் சென்ற

அந்த இரவின் மறுபுறம்

சேரவே இல்லை.. 


ஞாயிறு, 26 ஜூலை, 2026

நீளும் தண்டவாளங்களாய்..

என்றோ ஒரு நாள் 

எமக்கு மிகவும் வயதாகிய பிறகு இந்தக் கடிதத்தை

உனக்குப் படித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.


ஆனால் சில உரைகளுக்கு மேடை கிடைப்பதில்லை,

சில காதல்களுக்கு வீடு கிடைப்பதில்லை

சில மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையாக இருந்தும்

ஒரே வாழ்க்கைக்குள் சேர முடியாமல் போகிறார்கள்.


அதனால் இன்று இந்த நினைவுப் பதிவை உன்னிடம் அல்ல,

உன்னை ஒருகாலத்தில் விரும்பிய என் வாழ்வின் முன் வாசிக்கிறேன்.


நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது.

உன் தலைமுடியில் நரை வந்துவிட்டதா,

காலையில் எழுந்ததும் கண்ணாடியில் உன் முகத்தை ஒரு கணம் நீயே அடையாளம் காணாமல் நிற்கிறாயா,

உன் வீட்டில் யாருடைய காலடிச் சத்தங்கள் நிரம்பியிருக்கின்றன,

அதே லுமாலா சைக்கிள் தான் இன்னும் ஓடுகிறாயா 

எந்தச் சாளரம் வழியாக மழையைப் பார்க்கிறாய்


எதுவும் எனக்குத் தெரியாது.


ஆனால் ஒரு காலத்தில்

உன் சிரிப்பால் மாலை நேரம் தாமதமாக இருண்டது

என்பது மட்டும் எனக்குத் தெரியும்.


அது மிகச் சிறிய அதிசயம்.


உலகம் தன் வழக்கமான வேலையைச் செய்துகொண்டிருந்தது.

பேருந்துகள் சென்றன. கடைகள் மூடின. பறவைகள் தங்கள் இரவுகளைத் தேடின. கடிகாரங்கள் எந்தக் காதலுக்கும் இரக்கம் காட்டாமல் நகர்ந்தன.


ஆனால் நாம் மட்டும்,


‘போய் வருகிறேன்’


என்ற இரண்டு சொற்களுக்குள்

இன்னும் கொஞ்சம் வாழ முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

மனிதன் எவ்வளவு விசித்திரமான உயிரினம்

அவனுக்குக் கிடைத்திருக்கும் நேரம் குறைவு என்பதை அறிந்தும்

அவன் காதலிக்கிறான்.

பிரிய வேண்டியிருக்கும் என்பதை அறிந்தும்

ஒருவரின் கையைப் பிடிக்கிறான்.


எல்லா உடல்களும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்பும் என்பதை அறிந்தும்

ஒரு குறிப்பிட்ட முகத்தை மட்டும் மரணத்திலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்பதுபோல் நினைவில் வைத்துக்கொள்கிறான்.


நானும் அப்படித்தான் உன்னை வைத்துக்கொண்டேன்.


நினைவில் அல்ல.

இதனைச் சொல்ல நினைவு என்பது மிகச் சிறிய சொல்.


நான் வாழ்ந்த வருடங்களின் உள்ளே

யாரும் திறக்காத ஓர் அறையைப்போல்

உன்னை வைத்துக்கொண்டேன்.


அங்கே காலம் நுழையவில்லை.


அங்கே இன்னும் நீ

நான் கடைசியாகப் பார்த்த வயதில்தான் இருக்கிறாய்.


நான்தான் முதுமையடைகிறேன்.

நீ இல்லை.


இதுதான் இழப்பின் கொடூரமான கருணை.

அது ஒருவரை நம்மிடமிருந்து எடுத்துச் செல்கிறது, 

பிறகு அவர்மீது காலம் கை வைக்க முடியாதபடி செய்துவிடுகிறது.


சில இரவுகளில் நான் யோசித்திருக்கிறேன், 


நீ என்னுடன் இருந்திருந்தால்

இவ்வளவு முழுமையாக என்னுள் இருந்திருப்பாயா ? 


நாம் ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தால் ? 

ஒரே படுக்கையின் இரண்டு பக்கங்களில் தூங்கியிருந்தால் ? 


காலையில் யார் முதலில் எழுவது, யார் கதவைப் பூட்ட மறந்தது,

யார் வாங்க வேண்டியதை வாங்கவில்லை,

எந்தச் செலவை யார் செய்தது, 


இந்தச் சிறிய கற்களால்

நமது காதல் ஒரு சாதாரண வீடாகக் கட்டப்பட்டிருக்குமா ? 

ஒருவேளை அது இன்னும் அழகாக இருந்திருக்கலாம் ? 

ஒருவேளை நாம் குழந்தைகளின் சத்தத்திற்குள் முதுமையடைந்திருப்போம்.

ஒருவேளை உன் நரைத்த தலைமுடியை நான் சீவியிருப்பேன்.

ஒருவேளை என் கைகள் நடுங்கத் தொடங்கியபோது

நீ என் சட்டையின் பொத்தான்களைப் போட்டிருப்பாய்.


அந்த வாழ்க்கையும் காதல்தான்.


அதை நான் குறைவாக எண்ணவில்லை

ஆனால் அது நமக்குக் கிடைக்கவில்லை, 


நமக்குக் கிடைத்தது வேறு ஒன்று, 

முடிவடையாத ஒன்றின் முழுமை.


அதனால்தான் உன்னை இழந்ததற்காக மட்டும் நான் வருந்தவில்லை.

நாம் வாழாத வாழ்க்கைக்காகவும் வருந்துகிறேன்.


ஒரு சமையலறை, இரண்டு கோப்பைகள்

நாற்காலியின் முதுகில் உன் ஆடை

ஞாயிற்றுக்கிழமை மதியம் 

காரணமே இல்லாமல் ஏற்பட்ட சிறிய சண்டை.

பிறகு பேசாமல் வைக்கப்பட்ட ஒரு தேநீர்,

இரவில், தூக்கத்தின் நடுவே, 

அறியாமலேயே ஒருவரை ஒருவர் தேடும் இரண்டு கைகள்.


நடக்காதவற்றிற்கும் நினைவு இருக்கிறது என்பதை

உன்னால்தான் அறிந்தேன்.


நாம் வாழாத நாட்கள்கூட

சில நேரங்களில் என்னுள் வந்து முதுமையடைகின்றன.


நம்மை காலம் பிரித்த நாள் எனக்கு நினைவிருக்கிறது.

அன்று அதை நான் விதி என்று அழைக்கவில்லை.

அது ஒரு நாளங்கிழிந்த குருதிப் பெருக்கு. 


என் வாழ்க்கையின் ஒரு பகுதியை

யாரோ என்னிடம் கேட்காமல் வெட்டி எடுத்துச் சென்றதுபோல் இருந்தது.


ஆண்டுகள் சென்றன, கோபம் சோர்ந்தது 

கேள்விகள் சோர்ந்தன.

ஏன் என்ற சொல்லுக்கே வயதாகிவிட்டது

ஆனால் காயம் மட்டும் போகவில்லை.

அதற்குள் உன் மணத்தைத் தாங்கிய வெளிச்சம் இருந்தது

அப்போதுதான் புரிந்தது

சில காயங்கள் ஆறுவதில்லை, 

அவற்றுக்குள் நாம் வாழக் கற்றுக்கொள்கிறோம்.


ஒருகாலத்தில் நெஞ்சு கருகிய இடத்தில்

பின்னர் ஒரு சிறிய விளக்கை ஏற்றுகிறோம்.

அன்று அது கொலை, இன்று அது கோயில்.

அங்கே நான் கடவுளை வணங்கவில்லை.

ஒருகாலத்தில் இரண்டு மனிதர்கள்

ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தார்கள்

என்ற உண்மையை மட்டுமே வணங்குகிறேன்.


நான் காதலைப் பற்றி இப்போது அதிகம் அறிந்தவன் என்று சொல்ல முடியாது.

மாறாக, வயதாக வயதாக அதைப் பற்றி நான் அறிந்ததாக நினைத்த அனைத்தும்

என்னைவிட்டு விலகிக்கொண்டிருக்கின்றன.


இளமையில் காதல் என்றால் அடைதல் என்று நினைத்தேன்

பின்னர் அது ஒன்றாக வாழ்தல் என்று நினைத்தேன்

அதன்பின் ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்வது என்று நினைத்தேன்.


இப்போது


காதல் சில நேரங்களில்

இவற்றில் எதுவுமல்ல என்று தோன்றுகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில்

நாம் இல்லாதபோதும்,

அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று

இன்னும் விரும்ப முடிவதே காதலின் கடினமான வடிவமாக இருக்கலாம்.


அவருடைய மகிழ்ச்சியில் நமக்கு இடமில்லாவிட்டாலும்

அந்த மகிழ்ச்சி அழியக்கூடாது என்று நினைப்பது, 

அவர் நம்மை மறந்திருந்தாலும்

அவருடைய இரவுகள் அமைதியாக இருக்கட்டும் என்று விரும்புவது.


ஒருகாலத்தில் நமக்குச் சொந்தம் என்று நினைத்த கையை

வாழ்க்கை வேறு ஒரு கரையில் வைத்த பிறகும்,

அந்தக் கை குளிரக்கூடாது என்று

தொலைவிலிருந்து வேண்டிக்கொள்வது.


அப்படியானால்,


உன்னை நான் இன்னும் காதலிக்கிறேனா ? 

அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

ஏனெனில் சில உணர்வுகளுக்கு பெயர் வைத்தவுடன்

அவை தங்கள் பரப்பை இழந்துவிடுகின்றன.


இப்போது நீ என் காதலியா, நினைவா,

இழப்பா, ஒரு கடந்த காலமா ? 

எனக்குத் தெரியாது.


ஆனால் உலகில் எங்கோ

நீ இருக்கிறாய் என்ற எண்ணம் மட்டும்

சில இரவுகளில் இந்த உலகத்தை

எனக்கு இன்னும் சிறிது தாங்கக்கூடியதாக மாற்றுகிறது

அது போதும்.


ஒருநாள் ஒரு புகையிரத நிலையத்தில்

இரண்டு தண்டவாளங்களைப் பார்த்தேன்.

அவை ஒன்றையொன்று தொடவில்லை.

ஆனால் விலகவுமில்லை.


மலைகள் வந்தன, பாலங்கள் வந்தன.

மழை அவற்றை நனைத்தது, வெயில் அவற்றை எரித்தது.

ஆயிரக்கணக்கான மனிதர்கள்

அவற்றின் மேல் தங்கள் வருகைகளையும் பிரிவுகளையும் சுமந்து சென்றார்கள்.

ஆனால் அந்த இரண்டு இரும்புக் கோடுகளும்

ஒரே திசையை நோக்கி, ஒரே தொலைவைத் தாங்கி,

தொடாமல், விலகாமல் நீண்டுகொண்டிருந்தன.


அப்போதுதான்

நம்மை நினைத்தேன்.

நாம் சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நாம் சேர்ந்தோம் என்றும் சொல்ல முடியாது.

நாம் பிரிந்துவிட்டோம் என்று சொன்னால்

அதுவும் முழு உண்மை அல்ல.


நாம் ஒரே பயணத்தின் இரண்டு தண்டவாளங்கள்.

காலம் நம்மிடையே தனது புகையிரதங்களை ஓட்டிக்கொண்டே இருந்தது.


நாட்கள் கடந்தன, நகரங்கள் கடந்தன.

பிற மனிதர்கள் கடந்தார்கள், 

நமது இளமை கடந்தது.


ஆனால் எங்கோ,

எந்த வரைபடத்திலும் குறிக்கப்படாத ஒரு இடத்தில்,

நாம் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே

நீண்டுகொண்டிருந்தோம்.


ஒருநாள் நான் இருக்க மாட்டேன் 

நீயும் இருக்க மாட்டாய்

நம்மை அறிந்தவர்கள் இருக்க மாட்டார்கள்.

நாம் ஒருவருக்கொருவர் என்னவாக இருந்தோம் என்பதை

விளக்கக்கூடிய கடைசி மனிதனும்

இந்த பூமியிலிருந்து சென்றுவிடுவான்.


அப்போது நமது காதலுக்கு சாட்சி யார் ? 

புகைப்படங்களா? அவை மங்கும். 

கடிதங்களா ? அவை மக்கும்.

நினைவுகளா ? 

அவற்றைச் சுமந்த மூளைகளும்

ஒருநாள் மண்ணாகும்.


அப்படியானால்

நாம் உண்மையாக ஒருவரை ஒருவர் நேசித்தோம் என்பதற்கு

என்ன மீதமிருக்கும்?


ஒருவேளை….எதுவுமே இல்லை.

அதுவே அதன் அழகாக இருக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலத்திற்கு,

இரண்டு உயிர்கள் ஒருவருக்கொருவர் ஒளியாக இருந்தன.

பிரபஞ்சம் அதை பதிவு செய்யவில்லை.

விண்மீன்கள் தங்கள் வழியை மாற்றவில்லை.

கடல்கள் ஒரு அலையைக்கூட  அதிகமாக எழுப்பவில்லை.

வரலாறு நமது பெயர்களை எழுதவில்லை.


ஆனால் நாம் அறிவோம் 

ஒரு காலத்தில் இந்த அளவற்ற உலகத்தின் நடுவே

நான் உன்னை கண்டேன், நீ என்னைக் கண்டாய்.

அவ்வளவுதான்.

ஒரு மனித வாழ்விற்கு அது மிகச் சிறிய விடையமா ? 

எனக்குத் தெரியாது.


எனக்கு இப்போது தோன்றுவது 

ஒருவேளை அதுதான் எல்லாம்.


ஆகவே 

இந்தக் கடிதம் ஒருநாள் உன்னிடம் சென்றடைந்தால் 

என்னைத் தேடாதே 

நாம் வாழாமல் விட்ட வாழ்க்கையை

மீண்டும் நினைத்துப் கண்கள் பனிக்காதே 


சில அழகுகளை

அவற்றின் தொலைவிலேயே விட்டுவிட வேண்டும்.


நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்

எப்போதாவதொரு நீண்ட பயணத்தில் 

சாளரத்திற்கு வெளியே இரண்டு தண்டவாளங்கள்

மாலை வெளிச்சத்தில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தால்,

ஒரு கணம் மட்டும் அவற்றைப் பார்.


என் பெயரை நினைக்க வேண்டாம் 

நம் கதையையும் நினைக்க வேண்டாம்.

அந்த இரண்டு இரும்புக் கோடுகள்

எவ்வளவு தொலைவு சென்றாலும்

ஒன்றையொன்று தொடாமலும், 

எவ்வளவு பிரிந்திருந்தாலும்

ஒன்றையொன்று விட்டுவிடாமலும் 

ஒரே இரவுக்குள்

நீண்டுகொண்டிருப்பதை மட்டும் பார்.


ஒருவேளை அந்தக் கணத்தில் 

நான் எங்கிருந்தாலும்

அதே தண்டவாளங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

ஒருவேளை இல்லை, அதுவும் பரவாயில்லை.

ஏனெனில் நம்முடைய கதை

நாம் மீண்டும் சந்திப்பதில் முடிவதில்லை.

நாம் சந்தித்தோம் என்பதிலேயே

அது முழுமையாகிவிட்டது.


ஒருநாள்

கடைசிப் புகையிரதமும் கடந்துபோகும், நிலையத்தின் விளக்குகள் அணையும்.

நமது பெயர்களைக் கடைசியாக நினைத்திருந்த மனிதனும்

தூங்கிவிடுவான், மழை பெய்து ஓயும்.

இரவு ஈரமான இரும்பின் மீது தன் கையை வைக்கும்.


அப்போது

யாருடைய வருகையையும் எதிர்பார்க்காமல், 

யாருடைய பிரிவையும் தடுக்காமல்,

ஒன்றையொன்று நோக்கியபடி,தொடாமல்,விலகாமல்,

இரண்டு தண்டவாளங்கள் மட்டும்

இருளுக்குள் தொடர்ந்து செல்லும்…



வெள்ளி, 10 ஜூலை, 2026

காலம் மட்டுமே அறியுமோ..

இந்தப் பிரபஞ்சம்
யாரையும் வெறுமனே 
அறிமுகம் செய்வதில்லை

கடல்
ஒரு சிப்பியை கரைக்கு எறியு முன்
ஆயிரம் இரவுகள்
அதனுள்ளே உப்பைச் சேர்க்கிறது.

அப்படித்தான்
சில மனிதர்கள் நம்முள் நுழைகிறார்கள் 
மழை போல அல்ல
மழைக்கு முன் 
மண்ணின் உடலில் எழும்
அந்த இரகசிய மணம் போல, 

சிலர்
கர்மாவின் கரிய விரல்களுடன் வருகிறார்கள்
நம் பழைய தோலை உரித்து
நம்மை நமக்கே தெரியாத 
உருவமாக்கிச் செல்கிறார்கள்.

அவர்கள் சென்றபின் தான் தெரியும், 
அது காதல் அல்ல, உலை.
நாம் எரிய வேண்டும் என்பதற்காகவே
அவர்கள் நம் வாழ்வில் 
தீயாக வந்தார்கள்.

சிலர்
நம் கடன் மிச்சமுள்ள உயிரில்
ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைக்கிறார்கள்.
அவர்களின் குரல்
கிணற்றின் அடியில் விழுந்த வானம் போல
நீண்ட நாட்களுக்குப் பின்
நம்முள் நீலமாகத் திறக்கிறது, 

நாம் கேட்கிறோம் 
ஏன் இவர் ? 
ஏன் இப்போது ? 
ஏன் இந்தக் காயத்தின் வாசலில்
இந்த முகம் வந்து நின்றது ? 

பதில் சொல்லாமல்
காலம் தன் கருவறையில்
நட்சத்திரங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

என்றோ ஒரு நாள்,
பழைய துயரத்தின் 
கதவைத் திறக்கும் போது
அங்கே கிடப்பது 
மனிதன் அல்ல 
பாடம், 
பிரிவு அல்ல
பிறப்பு, 
இழப்பு அல்ல,
நம்மை நம்மிடம் திருப்பி அனுப்பிய
பிரபஞ்சத்தின் கையெழுத்து.

அதுவரை
வந்தவர்களை வெறுக்காதே
சென்றவர்களைச் சபிக்காதே..

சந்திக்கும் ஒவ்வொருவரும்
நம் உயிரின் 
இருண்ட தோட்டத்தில்
தங்கள் விதையை 
புதைத்துச் செல்கிறார்கள்.

யார் மலராகிறார்
யார் விழுதாகிறார் 
யார் மணமாக மட்டுமே 
மீந்திருப்பார் என்பதையெல்லாம் 
இன்றுவரை 
காலம் மட்டுமே அறிந்து 
வைத்திருக்கிறது.. 


செவ்வாய், 23 ஜூன், 2026

மறமெனும் அறம்..

நீதியென்பது

வெறும் மன்றங்களின் மரமேசைகளில்

முத்திரை விழுந்த பத்திரமன்று, 

மண்ணை இழந்த மக்களின்

மூச்சுக்குள் இன்னும் அணையாத

சூடான சாம்பல்.


ஓரினத்தின்  தேசம்

வரைபடக்காரனின் கருநிறக் கோட்டால் மட்டும்

பிறப்பதில்லை,

அதன் முதுகெலும்பில்

நூற்றாண்டுகள் நடந்த காயங்கள்,

அதன் மொழியின் பற்களுக்குள்

கடித்துப் பிடிக்கப்பட்ட நினைவுகள்,

அதன் இறந்தவர்களின் பெயர்களை

மறக்க மறுக்கும் குழந்தைகளின் நாக்கு 

இவற்றால்தான் அது கருவுறுகிறது.


“இனிச் சாத்தியமில்லை” என்றார்கள், 

உலகம் தன் 

இரும்புக் கணக்குப் புத்தகத்தைத் திறந்து

தேசிய இனங்களின் கனவுகளை

எண்ணிக்கைக்கு வெளியே தள்ளியது, 

விடுதலை என்பது 

பெரிய அரசுகளின் அனுமதிச் சீட்டு, 

தேசம் என்பது

வல்லரசுகளின் மேசையில் 

மீதமிருக்கும் உப்பு.


ஆனால் வரலாறு

அதிகாரத்தின் வாயால் மட்டும் பேசுவதில்லை, 

சில வேளைகளில் அது 

அடக்கப்பட்ட ஒரு தாயின்

அடுப்புச் சாம்பலில் கையெழுத்திடுகிறது, 

சில வேளைகளில்

சிறைக்கதவின் இரும்பில்

ஒரு நகத்தின் கீறலாய்த் தொடங்குகிறது, 

சில வேளைகளில்

மரணத்தைக் கடந்துபோன இளைஞர்களது

என்பின் அமைதியிலிருந்து

மின்னலாக எழுகிறது.


நியாயம் மட்டுமே வெற்றியாய் ஆகாது 

காலத்தையும் கணக்கையும்

புவியின் குளிர்ந்த அரசியலையும் கடக்க வேண்டும்.

மண்ணின் உண்மைக்குக் குரல் வேண்டும்,

குரலுக்குத் தொடர்ச்சி,

தொடர்ச்சிக்கு உடைக்க முடியாத உள்ளெரி.

அந்த உள்ளெரியே

மாவீரர்களின் ஆன்மா.

அவர்கள் இறந்தவர்கள் அல்ல, 

மண்ணுக்குள் வைத்துவிடப்பட்ட

தீக்கற்கள்.

ஒரு தலைமுறை தடுமாறும் பொழுது

அவர்கள் அடியிலிருந்து வெப்பம் தருவார்கள்.

ஒரு மொழி பயத்தில் நடுங்கும் பொழுது

அவர்கள் எழுத்துகளுக்குள் இரும்பு சேர்ப்பார்கள்.

ஒரு கொடி காற்றில்லாமல் தொங்கும் பொழுது

அவர்கள் காணாத மூச்சால்

அதை மீண்டும் அசைப்பார்கள்.

அரசியல் பலம் படைகளை எண்ணும்,

ஆன்ம பலமோ

எந்தத் தராசிலும் நிறுக்க முடியாதது 

மண்ணில் புதைந்த பெயர்களின் உறங்காத ஒளி.


தமிழீழம் 

தோல்வியின் பெயரல்ல, 

அது இன்னும் நிறைவேறாத

அறத்தின் நிலப்பெயர்.

கடல் அதைச் சூழ்ந்திருக்கலாம்

முள்வேலிகள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

ஒப்பந்தங்களின் காகிதம்

அதன் குருதியை உலர்த்த முயன்றிருக்கலாம்.

ஆனால் ஒரு தேசம்

முதலில் நிலத்தில் அல்ல 

நினைவில் உயிர்வாழ்கிறது.

நினைவில் உயிர்வாழும் தேசத்தை

எந்த ஆட்சியும் முழுதாய் வெல்ல முடியாது.


மறமென்பது வெறும் சினமன்று 

அநீதியின் கழுத்தில் வைக்கப்படும்

அறத்தின் சூடான கை.

மண் மறுக்கப்பட்ட மக்களுக்கு

மறமும் ஓர் அறம்தான், 

மீண்டும் மனிதராய் நிமிரும்

முதற் பிரார்த்தனை.


ஆகவே,

நாம் காத்திருப்பதில்லை

குருதியை கொள்கையாக்கி,

இழப்பை மொழியாக்கி,

மரணத்தை மண்ணின் உரிமைச் சான்றாக மாற்றி

தொடர்கிறோம்


ஒரு நாள்

அரசியல் தன் குளிர்ந்த கைகளைப் பின்வாங்கும், 

ஒரு நாள்

வரைபடம் தன் பொய்யைத் திருத்தும், 

ஒரு நாள்

மண்ணின் கீழெழும் 

பல்லாயிரம் அமைதிக் குரல்கள்

ஒரே ஓசையாகி

உலகின் செவிப்பறையைத் திறக்கும்.

அந்நாள்

விடுதலை வெறும் கொடியாய் ஏறாது , 

தேசிய இனங்களின் திறவு கோலாய்

பட்டொளி வீசிப் பறக்கும்..


திங்கள், 15 ஜூன், 2026

மலையென எழுக..

வேர்கள் இருளில் துடிக்க 

வீழ்ந்த பெருமரம் 

பெருங்காற்றால் சாய்ந்ததல்ல, 

மண்ணுக்குள் பதுங்கிய 

கரையான்களின் சூழ்ச்சியால்

உட்குடைந்து சரிந்த மூச்சு


நிழலருந்திப் பசியாறிய சிறகுகள் 

வீழ்ந்த மரத்தின் வேர்களை 

பழுதென்று பழித்துச் செல்லும், 

முளைத்தால் மட்டுமே 

விதையெனக் கொண்டாடும்,

பனியில் கருகிய முளையைப் 

பிழையெனத் தூற்றும். 


சந்தை மனிதர்களின் 

துருப்பிடித்த தராசுகளில் 

உன் காயங்களில் வழியும் 

செங்குருதியை நிறுக்க முயலாதே, 


வெற்றிக்கு மலர்தூவும் 

குருட்டு விழிகள் 

தோல்வியின் கையறு விம்மலை 

மரணமென்று சுட்டும் 


இது பொதுமனத்தின் பெருவியாதி


வரண்ட நிலம் பிளந்து பூத்த 

செங்குருதிப் பூவே 

அவர்கள் உன் வியர்வையை 

பிழையென அளக்கட்டும்,

நீ அதை அடுத்த பெருங்காட்டின் 

மழைநீர் என நம்பு,


இழப்பின் சாம்பலை 

நெற்றியில் பூசாதே,

அது உன் வேர்களைக் காக்கும் 

கவசப் படலம்.


காட்டுமகன் எறிந்த கூர்வேல் 

இலக்கைத் தவறவிட்டால் 

வேலின் கூரே பிழையாகாது 

திசையை வளைத்த 

பெருங்காற்றின் சூழ்ச்சி அது


முறிந்த வாளின் எஃகினை

உன் மார்புக்குள் 

நீயே குத்திச் சிதைக்காதே, 


கூட்டுமனத்தின் கூச்சல்களைப் புறந்தள்ளு, 


நெருப்பு அணைவதில்லை 

அது கனன்று உறங்குகிறது

மீண்டும் பெருநெருப்பாய் 

வெடித்தெழக் காத்திருக்கிறது, 


நீ இழந்தது விடுதலையையல்ல,

வெறும் காலத்தின் ஒரு துளியை மட்டுமே

உன் பாதங்களில் படிந்த 

செம்மண்ணின் மீது ஆணையாய் 

உன் குருதியின் திசை பிழையற்றது 

மலையென எழுக.. 


வியாழன், 11 ஜூன், 2026

விண்மீனுக்கான பதில்..

உன் கடிதம்

இன்றிரவுதான் வந்து சேர்ந்தது

நீ அணைந்து

எத்தனை ஊழிகளோ…

இருந்தும் வாசிக்கிறேன் 

ஒளியின் கையெழுத்தில்

ஒரு பிழையும் இல்லை 


நான் ஒன்றும் பெரியவன் இல்லை 

கடற்கரையில் நின்று

அலைகளை எண்ணத் தொடங்கி

இடையிலே மறந்தவன்

உலகம் என்னும் ஏட்டை

ஒருமுறை புரட்டி,

மொழி தெரியவில்லை என்று

மூடி வைத்தவன்.


என்றாலும் சொல்கிறேன் 

புரியாததால்தான்

இத்தனை அழகு, 

விடை தெரிந்த புதிரை

யார் மறுமுறை கேட்பார்?


தெருவில் நடக்கிறேன்:

ஒவ்வொரு முகமும்

எழுதி முடிக்காத கடிதம், 

எவரும் இங்கே

முழுமையாய் வாசிக்கப்படவில்லை, 


உனக்குத் தெரியுமா விண்மீனே 

இங்கும் உன்னைப் போல் 

எத்தனையோ பேர்..


வலை பின்னிய கைகளில்

சிலை தூங்கியது

சோறு வடித்த விரல்களில்

யாழ் மறந்து கிடந்தது

எவரும் அறிந்திலர் 

தாமுமே அறிந்திலர்.


ஆதலால்,

உன் காலங்கடந்த ஒளியை

முகம் நிமிர்த்தி ஏற்கிறேன்.

நான் மறையும்போது

எங்கோ ஓர் இருண்ட கண்ணை நோக்கி

என்னிடமிருந்தும் ஏதோ ஒன்று

புறப்படும் 


புரிதல் எனக்கு வாய்க்கவில்லை

அன்பு செய்யத்தான் தெரியும்.

இதோ 

உன் ஒளி விழுந்த இடத்தில்

என் கண்களின் ஓரத்தில் 

ஒரு துளி உப்பு..


சனி, 6 ஜூன், 2026

இரெத்தம் தோய்ந்த செஞ்சட்டை

அவர்கள் அணிந்த செஞ்சட்டை 

விடியலின் நிறமன்று,

எங்கள் வீதிகளில் உறைந்த   

பழைய குருதியின் 

காய்ந்த செதில்.


எங்களின் 

துயரப் பாடல்களைத் திருடி

தமக்கான மகுடத்தின் இசையை 

மீட்டிக்கொண்டார்கள்.


அரியணை ஏறியதும்,

செம்போர்வையைக் கிழித்து 

பழைய நச்சுப்பற்களை நீட்டுகிறார்கள்.


துக்கத்தின் சுவடுகளுக்கு 

விலங்கிடுகிறார்கள்

எங்கள் நடுகற்களின் மேல் 

தார் ஊற்றி 

பெருவீதி சமைக்கிறார்கள்.


உதடுகளை இரும்புக் 

கம்பியால் தைக்கலாம்

ஆனால் குரல்வளைக்குள் புதைக்கப்படும் 

பாடல் அழிவதில்லை.


அது குருதிக்குள் இறங்கி,

எலும்புகளைக் கூராக்கும் 

உப்பாய் உறைகிறது,


தொண்டையை நெரிக்கும் 

உங்கள் அதே விரல்கள்தான்

பாறையைப் பிளக்கும்

வேர்களின் தீராச் சினத்தையும் 

மண்ணுக்குள் மூட்டுகின்றன.


எங்கள் அமைதி 

ஓய்ந்துபோன மூச்சல்ல

அது உங்களின் 

இரும்புச் சங்கிலிகளைத் தின்னக் காத்திருக்கும்

கூர்மையான துரு..



சனி, 16 மே, 2026

மறம் துயிலும் நிலம்..

உப்பங்காற்றில் தேய்ந்து கரைகிறது 

பெருங்காலம் 

நந்திக்கடலின் உவர்ச்சேற்றில் 

புதைந்த எம் வேர்களின் என்புகள் 

ஊழியின் சுழற்சியில் 

சிதைந்து சுண்ணமாகிவிட்டன.


வையத்தின் நடுவண் மன்றங்களில் 

நடுவுநிலையை நிறுக்கும் 

தராசுத் தட்டுகள்

துருப்பிடித்து அறுந்து வீழ்ந்து 

பல பருவங்கள் ஆகிவிட்டன

வல்லாதிக்கத்தின் செவிகளில் 

உறைந்து கிடப்பது 

பாறையினும் இறுகிய 

பெருஞ்செவிடு, 


கருகிப்போன பனைமரங்களின் 

பட்டையான நெஞ்சில் 

தன் தலையையடித்து 

முட்டி அழுகிறது நாதியற்ற காற்று 

அது கடந்து செல்லும் 

பாழடைந்த முற்றங்களில் 

எம் பிதாக்களின் பெருமூச்சு மட்டுமே 

புழுதியாய்ப் படிந்திருக்கிறது.


எல்லாவற்றையும் இழந்து

எரியுண்ட சுள்ளிகளாய் 

உலகப் பெருவெளியில் வீசப்பட்டுவிட்டோம்


நாக்கு அறுபட்டவர்களின் 

மௌனப் பெருவலியோடு

வெறுமையின் சாம்பலைத் தின்றுகொண்டிருக்கிறது 

எஞ்சிய தலைமுறை,


எம் குருதியின் 

ஈரம் காய்ந்த நிலத்தில் 

அறம் கேட்டு முளைத்த 

பசும்புற்களும் பட்டுப்போயின.

கேட்பாரற்றுக் கிடக்கும் 

எம் ஏதிலி நிலையைப் பார்த்து 

இந்த அண்டவெளியின் கண்கள் 

குருடாகியிருக்கக்கூடும் 

இல்லையேல்

எம் துயரத்தின் எடையைத் தாங்க 

இந்த ஒற்றைக் கடலின் ஆழம் 

எங்ஙனம் காணும்… ? 




திங்கள், 4 மே, 2026

மைபடு விரல்..

மைபடு விரலால் முறியாது இரும்பு

பொய்ப்பெட்டி ஓலையில் 

பிறக்காது புயல்,

தாள்எண்ணித் தளையறுத்த 

இனம் உண்டோ வையத்தில் ? 

எண்ணிக்கை அவையில் 

எரியாது விடுதலை, 

எஃகுரசு, அனல்விதை, தளையறு

இரப்போர் வழியே பிழை 

வீணவை விடுத்து வெளிவா 

களமே வழி, குருதியே விதை

காண்..


திங்கள், 13 ஏப்ரல், 2026

என்னுயிர் நிலை..

முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து

நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்

உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை 

இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை 

அறுத்த வேரொன் றடிமண் விழைந்து

துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்

செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய

நல்குவை யாயின் நன்றென நலியும்

எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..



புதன், 8 ஏப்ரல், 2026

ஈரானே தொன் நிலமே..

நந்திக்கடலின் 

குருதியுறைந்த அலைகளிலிருந்து 

நின் சாக்ரோசு மலைகளின் 

தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன் 


ஈரானே..


அயலாரின் உதடுகளில் விரியும் 

புன்னகையை நம்பாய் என நம்புகிறேன் 

அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும் 

உளுத்தலின் மென்மை.

அமைதி என்னும் வெள்ளைத் தாளை 

அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில் 

உன் பின்னறைகளில் 

அவர்கள் இரும்பைத் தீட்டும்

அரத்தின் ஓசை 

நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும் 


இந்த உரையாடல் நினக்கானதில்லை 

தம் எஃகு நுரையீரல்களில் 

பெருமூச்சை நிரப்பிக் கொள்ள

அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட 

கால நீட்சியென்பதை 

நீயும் அறியாமல் இராய்


உன் நிலவியலின் 

அடுக்குகளுக்குக் கீழே

தொடர்பற்றுப் புதைந்துகிடந்த 

அவர்களின் ஒற்றர்களான

பாலைவனத் தேள்களுக்கு 

மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட

இருட்டுப் பாதையே 

இந்த இணக்கப் பேச்சென்பதை 

நீயும் அறிவாய்


நெஞ்சின் உரத்தை 

உள்ளிருந்து அரிக்கும்

வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.


அவர்கள் நினக்கு நீட்டும் 

அப்பத்தில் கலந்திருப்பது

நம்பிக்கையைச் சிதைக்கும் 

இரும்புத் துகள்கள், 


எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட 

அதே வஞ்சம்.., 

ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை

தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே 

அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.


அவர்கள் போரை நிறுத்தவில்லை 

தொன் நிலமே..! 

தம் படைக்கலன்களின் 

குழல்களைக் குளிரவைக்கவும் 

நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்

நின் மக்களின் எலும்புகளின் 

திண்மையை அளக்கவுமே

இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.


இது பெருங்காற்றின் ஓய்வன்று 

சுழலின் மையத்தில் இறுகிப்போன

மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.


வானிறங்கும் 

எஃகுப் பறவையின் சிறகை

அமைதிப் புறாவென எண்ணி 

ஏமாறாய் என்பதை அறிவேன் 

இருப்பினும் 

எம் கழுத்தை அறுத்த 

அதே பட்டுநூலோடு அவர்கள் 

வரும்போது வாயடக்க முடியவில்லை 


இணக்கப் பேச்செனும் 

அந்த இனிக்கும் நஞ்சை 

உமிழ்ந்துவிடு 


எம் பனைவேர்களில் 

உறைந்திருக்கும் மெய்மையைப்போல் 

நின் அடிமண்ணின் ஆழத்தில் 

முளைத்த நெருப்பையும்,

அவர்களின் வழவழப்பான பொய்களால் 

எக்காலத்தும் அழித்துவிட முடியாது.. 


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சுடப்படாத செங்கற்களின் அழுகுரல்..

பனிபடர்ந்த அந்நிய நிலக்கூரையின்கீழ்

உறக்கம் தொலைத்த தோழனொருவன் 

பறிக்கப்பட்ட நம் நாட்காட்டியின் 

கிழிந்த தாள்களை 

அன்றாடம் அனுப்புகிறான், 

அவை வெறும் நிழற்படங்கள் அல்ல 

களத்தில் வீழ்ந்த பெருவீரர்களின்

உறைந்துபோன மூச்சுக்காற்று.


அவர்களின் சுருண்ட முடிக்குள்

நமது ஊர்க் காற்றாடியின் சுழற்சி 

இன்னும் நிற்கவில்லை, 

விரிந்த மார்புகளில் 

எதிர்காலக் குழந்தைகளின் தொட்டிற் கயிறுகள் 

அறுபட்டுத் தொங்குகின்றன.


சிமிட்டாத அந்த அழகிய இமைகளுக்குள்

சுடப்படாத செங்கற்களைக் கொண்ட

கட்டப்படாத வீடுகளின் ஈரம் 

காயாமல் கிடக்கின்றது, 


பல்லாயிரம் இளம்பூக்களைப் பிழிந்து

நிலத்திற்கு உதிரம் ஊட்டியும்

இன்னும் சிவக்கவில்லையே 

நம் வைகறை?


தமது வேர்களை மறந்துவிட்டு 

நினைவுகளைத் தின்று செரித்த

பொருளற்ற வெற்றுடல்களின் 

ஊர்வலத்தைப் பார்க்கையில் 

வெறுப்பின் கூரிய நகங்கள் 

என் விலா எலும்புகளைக் கீறுகின்றன.


அறம் என்பது 

எரியும் காட்டின் மீது பறந்து செல்லும்

செவிடான பறவையின் சிறகசைப்புத் தானா ? 


மீண்டும்

அந்த ஒளிரும் முகங்களை 

உற்று நோக்குகிறேன், 

அவர்களின் கருமணிகளின் ஆழத்தில்

பழங்காலக் கிணறொன்றின் 

குளிர்ந்த அமைதி குடிகொண்டிருக்கிறது, 


அந்த இருளில் இருந்து வழியும்

ஒளியின் மெல்லிய நூலிழையைப் 

பற்றிக்கொள்கிறேன், 

அந்தப் பார்வையின் துவாரத்தினூடாக 

ஒரு பாதை திறக்கிறது 

அது, சாவு என்ற சொல்லே இல்லாத 

நிலத்திற்குச் செல்லும்

இரகசியப் பாதை..

சனி, 4 ஏப்ரல், 2026

பேருயிராய் வந்தாள்..

விண் வறள கண் சுருள 

வெம்மையிலொடுங்க 

மண் நெகிழ மெய்தழுவ 

மென்மழைய தாகி 

மென்நரம்பில் செம்புனலும் 

மெல்லலையாய் மீள 

பெண்ணுருவாய் விண்மழையாய் 

பேருயிராய் வந்தாள்..


மண்ணடியில் மரவேரும் 

மென்வலையைப் பின்னி

மென்னதிர்வில் நெடுநிலமும் 

இன்னுயிரைப் பகிர 

புண்ணுளத்தில் மின்நரம்பு 

புல்முனையாய் முளைக்க 

கண்ணுருவாய் வான்மழையாய் 

பேருயிராய் வந்தாள்..


உள்ளெலும்பில் உறைபனியும் 

மென்தழலில் உருக 

மண்சுவரில் மென்விரிசல் 

வேர்முனையும் நுழைய 

விண்பளுவாய் கண்ணிறுகும் 

வன்சுமையும் விழவே

பெண்ணுருவாய் பெருஞ்சுடராய் 

பேருயிராய் வந்தாள்..


மண்பளுவில் நின்றவுடல் 

மென்மிதப்பாய் எழும்ப 

உள்நரம்பில் நின்றசுழல் 

இன்னொலியாய் இயங்க 

கண்முனையில் தேங்குநிறம் 

மென்னொளியாய் முயங்க 

பெண்ணுருவாய் பெருவிசையாய் 

பேருயிராய் வந்தாள்..


உள்ளறையில் ஓய்ந்தவொலி 

உள்ளதிர்வாய் முழங்க 

மென்செவியில் ஊமைவலை 

மென்னொலியாய் புழங்க 

விண்ணதிரும் வன்மழையும் 

மென்பனியாய் இறங்க 

பெண்ணுருவாய் பெருமிதமாய் 

பேருயிராய் வந்தாள்..


புதன், 25 மார்ச், 2026

சிறகுகள் சுமக்கும் நிலம்..

உதிர்ந்த சிறகுகளின் குருதியில்

நனைந்து கிடக்கிறது நிலம்

வண்ணங்களின் சித்திரங்களுக்குப் பின்னால்

யாரும் வாசிக்காத ஒரு பழைய கதை

மண்ணின் மடிப்புகளில் 

நெளிந்து கொண்டிருக்கிறது.


​ஆகாயத்தின் நீலத்தை 

நீ இப்போது  குடிக்கிறாய்

ஆனால் உன் கால்களில் 

இன்னமும் ஒட்டியிருக்கிறது

புழுதியோடு மல்லுக்கட்டிய அந்தக்

கடின உழைப்பின் ஈரம்.


தசைகள் கிழிபட்டு

முதுகெலும்புகள் நொருங்கி

உன் மெல்லிய சிறகுகள் 

ஒரு கூண்டுக்குள் ஒடுங்கியது

திசைகளை அளப்பதற்காக அல்லவா?, 


‘​மறதி ஒரு துரோகம்’ என

உன் சிறகின் ஓரத்திலிருக்கும் 

கரும்புள்ளி சொல்லாமல் சொல்கிறது.


நீ பூக்களில் தேன் தேடித் திரிகிறாய்

அந்தப் பூக்களோ

உனக்காகத் தன்னுயிர் ஈந்த 

ஒரு கம்பளிப்பூச்சியின்

கல்லறையிலிருந்து முளைத்தவை


​சிறகடிப்பின் ஒவ்வொரு அதிர்விலும்

மண்ணுக்குள் புதையுண்டவர்களின் 

மூச்சுக்காற்று இருக்கிறது

வானம் உனக்குச் சொந்தமாகலாம்

ஆனால் உன் அடியில் ஓடும் 

நிலத்தின் நரம்புகளில்

உன் பழைய வடிவத்தின் 

தழும்புகள் இன்னும் ஆறவில்லை.


​விடுதலை என்பது 

வெறும் பறத்தல் மட்டுமல்ல 

பறக்கும் திசையெங்கும் 

தான் ஊர்ந்து திரிந்த பாதையையும்

உதிர்ந்து போன வாழ்வையும் 

நெஞ்சில் ஏந்திச் சுமப்பதே


​நினைவிருத்தல் என்பது சுமையல்ல

அதுவே சிறகுகளுக்கு 

வலிமையைத் தரும் காற்று,


பட்டாம்பூச்சி ஒருபோதும் 

கம்பளிப்பூச்சியை மறப்பதில்லை

ஏனெனில்,

அந்த மரணத்தின் சாம்பலிலிருந்துதான்

இந்த வாழ்வின் 

வண்ணங்கள் உயிர்த்தெழுந்தன..



புதன், 18 மார்ச், 2026

உடைந்த பிரார்த்தனை..

காலை

உடைந்த ஒரு கடிகாரத்தின் உள்ளே

இன்னொரு நாளாக விழித்துக்கொள்கிறது


நகரம்

ஆன்மா அகற்றப்பட்ட உடல், 

அங்கங்கள் இயங்குகின்றன

இதயம் நினைவாக மட்டுமே துடிக்கிறது.


சாலைகளின் ஓரங்களில்

கேள்விகள் காத்திருக்கின்றன

பதில் என்பது

இன்னொரு அடைபட்ட கதவின் பெயர்.


கோயில்களின் மாடங்களில்

மழை பெய்கிறது,

ஆனால்

பிரார்த்தனைகளின் தொண்டை 

உலர்ந்தே கிடக்கிறது.


நாம் கடவுளை நோக்கிக் கூவுகிறோம்

எதிரொலி மட்டும் திரும்புகிறது 

அதுவும்

நம் குரலின் சிதைந்த வடிவமாக.


வரலாறு

நொருங்கிய எலும்புகளைப் போல

காலத்தின் மூலையில் கொட்டப்பட்டுள்ளது

அவற்றிலிருந்து

எதிர்காலம் கட்ட முயல்கிறோம்.


மனிதர்கள்

ஒருவரையொருவர் கடந்து செல்கிறார்கள்

முகங்கள் நிறைய முகமூடிகள்

கண்கள் தப்பிக்க வழிகள்.


நாம் கேட்கிறோம்

ஏன் இருக்கிறோம்? 

உலகம் பதிலளிக்கிறது 

‘இருப்பதற்கான காரணம்

இருப்பதே’ 


இந்த வெறுமையில்தான்

என் உயிர்

ஒரு சிறிய தீப்பொறியைப் போல

அர்த்தத்தைத் தேடித் தேடித்

தன்னை எரித்து விட முயல்கிறது.


உலகம் கவனிக்காமல்

அபத்தத்தின்

மிகவும் ஒழுங்கான இயந்திரமாக

தன் சுழற்சியைத் தொடர்கிறது


நான் மட்டும்

அந்த இயந்திரத்தின் நடுவில்

ஓர் உடைந்த பிரார்த்தனையாக

நின்றுகொண்டிருக்கிறேன்..

சனி, 14 மார்ச், 2026

மூச்சின் தூர்வை..

வாழ்வென்பது 

நேர்ப்பட்ட பெருவழியன்று, 

அஃது உவர்காற்று 

அலைக்கழித்துச் சிதைத்த

கிழிந்த பாய்மரம், 


நினைவுகளின் தையல்களொவ்வொன்றும் 

உடம்பின் வடுக்களோடு 

உரசிக்கொண்டு

புதிர்ததும்ப திசையற்று நிலைகொள்கிறது, 


துணையெனத் தொடர்ந்த முகங்கள்

பெருவெள்ளம் வடிந்தபின்

எஞ்சிநிற்கும் மணல் திட்டுகளாய்

ஈரமிலா நிலத்தில் புதைந்து மறைந்தன, 

சந்திக்கவே இயலாதெனக்

கருதிய உறவுகள் 

முன்னறியாத் திசையின் காற்றாய்

வேற்று நகரின் நிழலில்

தோல் தீண்டித் திகைக்க வைக்கிறது 


இவ்வுடல் 

இப்போது வெறும் ஊனன்று

சிதைந்து கிடக்கும் நிலத்தின் 

வரைபடம், 

இதில் தழும்பாய் எஞ்சிக் கிடக்கும் 

நினைவுகளென்பது 

ஆறிய காயமல்ல,

உறக்கமற்ற இரவுகள் 

கடித்துக் குதறிய

காலத்தின் தடம் அழிந்த 

நிலப்பரப்பு, 

மெல்ல மெல்ல உட்கசிந்து 

உவர் நீர் நிலத்தை அரிப்பதாய் 

நினைவுகள் உள்ளிருந்தென் 

இருப்பின் ஆழத்தைத் தின்னுகின்றன 


தொடர் சங்கிலியாய் நீளும் 

வாழ்வின் இந்த வளையத்தை

நினைவின் இரைச்சலற்று,

துயரத்தின் கறை படிந்த நிழலற்று,

வலி இன்றி மெல்லக் கழற்றிவிட

இப்போதோர் ஆசை எழுகிறது 


வாழ்க்கை இப்போது 

கேள்வியாகத் தெரியவில்லை 

அது கரை தேடாத மெதுவான

உயிப்பு அலையாய்… 


திங்கள், 2 மார்ச், 2026

அரை மீசையின் தீர்க்கதரிசனம்

செதுக்கிச் சீராக்கிய 

அந்தச் சிறு மீசையின் ஓரத்தில்

தாய் நிலத்தின் நடுக்கம் குடியிருந்தது 

அவன் தனது சொந்த மண்ணின் 

வேர்களைத் தடவுகிறான் 

ஆனால் அங்கே ஈரம் இல்லை 

வங்கியின் இரும்புக் கதவுகளும் 

மை படிந்த காகிதங்களும்

அவன் காற்றைத் திருடிச் சென்றிருந்தன.


வந்தேறிப் பறவைகளின் சிறகுகள்

அவன் வானத்தை மறைத்து நின்றன 

அவன் காலடியில் இருந்த மண்

அவனுக்கே அந்நியமானதை எண்ணியபோது 

அவனது நரம்புகளில்

அடக்கப்பட்ட ஆவேசத்தின் கசப்பு

கரும்பாறையெனத் திரண்டது.


கடல் அலைகளின் ஓசையை விட

அவர்களின் கூச்சல்கள் 

தனியாக உரக்கக் கேட்கின்றன 

வெள்ளித் திரைகளில் அவர்கள் 

காயங்கள் மட்டும் 

மினுமினுக்கும் வைரங்களாய் 

விற்கப்படுகின்றன, 


ஆனால் உலகப் போர்களில் 

மடிந்து போன பெயரற்ற மனிதர்கள்

எங்கே போனார்கள் ? 

மண்ணோடு மண்ணாய் போன

கோடிக்கணக்கான எளியவர்களின்

குருதி காய்ந்த சுவடுகள் எங்கே ? 


இவர்கள் கொல்லப்பட்டதாய் 

காட்டப்படும் கழிவிரக்கக் கணக்கில் 

எண்ணிக்கையின் நீளம் 

உண்மையானது தானா ? 


அடிக்கப்பட்ட முத்திரைகளும் 

அடகு வைக்கப்பட்ட துயரங்களும்

அவர்கள் வலியை மட்டும் 

புனிதமாக்கிச் சிரிக்கின்றன 

மற்றவர்களின் கண்ணீர்

உப்புக் கடலில் கலந்த 

வெறும் நீர் தானா ? 


அந்தப் பாதி மீசைக்காரன்

இவர்களை நான் 

ஏன் கொன்றேனென

இனி வரும் உலகு அறிவதற்காக 

மீதமிருந்த சிலரை விட்டுச் சென்றான் 


ஏன் அவன்  இவர்களை மட்டும்

மரணத்தின் பள்ளத்தாக்கிற்கு

துரத்தினானென்ற 

கேள்விக்கான விடை.., 


பாலஸ்தீனக் குழந்தைகளின் 

அப்பாவிக் கண்களில் 

திட்டமிட்ட போர்களால் 

அழிக்கப்படும் ஏதுமறியா மக்களின்

வழிந்தோடும் குருதியில் 

உலகின் ஒவ்வொரு மூலையிலும்

இடம்பெறும் சகல வகையான

சதிகளிலுமென 

அறமற்ற அத்துணையிலும் 

நிறைந்து போய்க் கிடக்கிறது 


வரப்போகும் காலத்தின் கைகளில்

அது குருதி தோய்ந்த சாட்சியமாய் 

இருக்கட்டும்.. 



வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கரைதலின் வரைபடம்..

பார்வை மட்டத்தில் மட்டும் 
காதலைப் பயில்பவர்கள்
பொருட்களின் விளிம்புகளை மட்டுமே 
தொட்டுச் செல்கிறார்கள்.

அவர்களுக்கு முகமென்பது 
ஒளியின் திசைமாற்றத்தால் 
திரையில் விழும் தற்காலிக நிழல்.
விளக்கு அணைந்ததும்
நிழல் சுருங்கி 
சுவரோடு மறைவதைப் போல
பிரிவென்பது அவர்களுக்கு 
இருண்ட முடிவு.

ஆனால் 
வேதிவினையில் பிணைந்த 
இரண்டு தனிமங்களைப் போல
உள்ளுற உறைந்து போனவர்களுக்கு 
தொலைவு என்பது தர்க்கமற்றது.

கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டாலும்
அதன் உப்புத்தன்மை 
அலைகளின் மடியிலேயே தங்கிவிடுகிறது.
வெப்பம் நீரைப் பிரித்தாலும்
உப்பை அதனிடமிருந்து 
எப்படிக் கழுவ முடியும் ? 

வெளியேறும் ஒருவனைப் பின்தொடர 
கண்களுக்குத் தூரம் தேவை
ஆனால் குருதிக்குள் கலந்துவிட்ட துளிக்கு
உடலில் எங்கோ ஓடிக்கொண்டிருக்க 
திசைகள் தேவையில்லை.

நீயும் நானும் இப்போது 
ஒரே மரக்கட்டையில் கசிந்து படிந்த 
இரண்டு நிறங்கள்.
ஒன்றன் மீது ஒன்று படிந்துவிட்ட பிறகு
யார் எவரை வழிஅனுப்பி வைப்பது ? 

இங்கே பிரிவென்பது 
தன் நிழலைத் தானே கழற்றி எறிய முயலும் 
வீண் முயற்சி,
பொருட்கள் வேண்டுமானால் 
தூரம் நகரலாம் 
ஆனால் செறிந்துவிட்ட பிணைப்புக்கு
வெளியெங்கும் இடமில்லை 
அது முழுவதுமாய் 
அகத்திலேயே நிரம்பிவிட்டது..

வியாழன், 12 பிப்ரவரி, 2026

நத்தின் கூடு..

புத்தன் ஏகினான் 

அவனகன்ற திசை இப்போது

பாரமான ஒளியால் நிறைந்திருக்கிறது.


காலம் தன் 

பருப்பொருட் போர்வையைக் களைந்துவிட்டு 

சிறு நத்தையின் சுரிவளைக்குள்

நிர்வாணமாய் நுழைந்து கொண்டது.


இந்தச் சிறு சுண்ணச் சுருள்

வெறும் ஓடல்ல,

அண்டத்தின் பேரிரைச்சல் வடிகட்டப்பட்டு

மௌனமாக உறைந்துபோனதோர் 

உள்வெளி, 


புற உலகைத் தின்று தீர்த்த 

மகா தாகம் இப்போது 

இச்சிறு ஈரப்பதத்துள் 

தன்னைத் தானே கண்டடைந்து 

அடங்கியிருக்கிறது.


இப்போதில் 

நத்தையின் கூட்டுக்குள் இருப்பது 

அமைதியல்ல,

அஃதோர் உருவம் இழந்த பிரபஞ்சத்தின்

மீள முடியாத் தியானம்.


யாரும் அற்ற அந்தப் பீடத்தில்

இன்மை முடிசூடிக் கொள்கிறது..


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

நிழற்கரங்கள் ஆட்டும் நிலம்..

வறண்ட நிலத்தின் வெடிப்புகளுக்குள்

இரத்தம் கசிவதைச் செதுக்கிச் செதுக்கி

ஒளித்து வைத்திருக்கிறது 

வணிகப் பேனா.

-

வரைபடத்தில் விழும் ஒவ்வொரு கோடும்

கூர்வாளின் நுனியால் 

வரையப்பட்டதல்ல,

பங்குச் சந்தையின் 

புள்ளிகளால் இழுக்கப்பட்டவை.

-

மகுடங்கள் இங்கே மரத்தாலானவை

அவற்றைச் சுமக்கும் தலைவர்களோ

நூல் பிடித்து ஆட்டப்படும் 

நிழல் உருவங்கள்.

-

யார் எப்போது 

அழ வேண்டும் என்பதையும்

யார் எப்போது 

எரிய வேண்டும் என்பதையும்

கடலுக்கப்பால் அமர்ந்திருக்கும்

தங்க நகங்களை உடைய 

அந்த மாயக்கரங்கள்

ஏற்கனவே எழுதி மூடிவிட்டன.

-

அமைதிப் புறாக்கள்

ஆயுதத் தொழிற்சாலையின்

புகைபோக்கிகளாக மாற்றப்பட்டுவிட்டன,

குண்டுகள் விழுமுன்னரே

சிதைந்த சுவர்களைக் கட்டியெழுப்பும்

ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விடுகின்றன.

-

இங்கே 

வெற்றியும் தோல்வியும் 

ஒரே நாணயத்தின் இருபுறங்கள் 

அந்த நாணயம் மட்டும்

எப்போதும் அதிகாரத்தின் 

பையிலேயே இருக்கும் 

-

தனித்தொரு மனிதனின் கண்ணீர்

இங்கே ஒரு புள்ளிவிவரம் மட்டுமே, 

உலகெனும் பெரும் பலகையில்

நாம் காய்கள் கூட அல்ல

காய்கள் நகரும் போது

தெறித்து விழும் தூசிகள்

இல்லை அது கூட இல்லை, 

-

வரலாறு என்பது இங்கே

நடந்தவற்றின் தொகுப்பல்ல

நடத்தப்பட வேண்டியவற்றின்

முன்கூட்டிய வரைபடம்

-

துப்பாக்கிக் குழல்கள்

நிதியைத் துப்புகின்றன

சிதறும் சதைத்துண்டுகள்

யாரோ ஒருவனின் வங்கிக் கணக்கில்

இலாப இலக்கங்களாய் மாறுகின்றன.

-

அவர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்

ஏனெனில் 

தோல்வியையும் அவர்களே

கட்டமைத்திருக்கிறார்கள்..


புதன், 28 ஜனவரி, 2026

இருளின் தையற்காரனும் எரியும் நரம்பும்..

வதைப்பவன் கைகளில்

இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது

ஒவ்வொரு அடியிலும் அவன்

தனது அகத்தின் சாளரங்களை

நிலக்கரி பூசி அடைக்கிறான்.

-

அவன் ஆன்மா 

ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு

வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட

வெளியே விடாத கருங்குழி

அவன் குருதியில் இப்போது

நிழல்கள் உறைகின்றன

அவன் தொடும் இடமெல்லாம்

காலம் தன் நிறத்தை இழக்கிறது.

-

வதைப்பவன் என்பவன்

தனது விதியால் கைவிடப்பட்ட

ஒரு தையற்காரன் 

பிறர் வலிகளால் அவன் தைப்பது

தனக்கான சவக்கோடியை மட்டுமே

-

ஆனால், வதைபடுபவன் 

அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்

இப்போது ஒரு சுடரின் வாசல்

தசைகளைக் கிழிக்கும்போது

வெளியேறுவது குருதியல்ல

காலங்காலமாகத் தேங்கியிருந்த

ஆழ்மன இசை.

-

நரம்புகள் அறுபடும் கணத்தில்

அவை நரம்புகளாக இருப்பதில்லை

யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன

வலியில் துடிக்கும்போது 

அவன் ஆன்மா 

தன் கூட்டைத் துறந்து

வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.

அங்கே சொற்கள் இல்லை

அங்கே வதைப்பவன் இல்லை.

-

தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட

ஒரு பறவையின் சிறகசைப்பாய்

வதைபடுபவனின் உள்ளொளி

தன் சிறைநீங்கி விளிக்கிறது.

-

இருள் என்பது வதைப்பவனின் முகவரி

ஒளி என்பது வதைபடுபவன்

கண்டடைந்த ஒரு புதிய திசை..


செவ்வாய், 27 ஜனவரி, 2026

மீதமுள்ள பொருட்கள்..


மேசையின் மேல் ஒரு உடைந்த திசைமானி,

அதன் முள்

எந்தத் திசையையும் காட்டாமல்

தன்னையே சுற்றிக்கொள்கிறது.

-

சுவரில் தொங்கும் வரைபடத்தில்

கடல்கள் காய்ந்து கறை படிந்திருக்கின்றன,

நாடுகள்

பெயர்களற்ற வெறும் கோடுகளாகச் சுருங்கிவிட்டன.

-

இழப்பதைக் கற்றுக்கொள்வது

ஒரு கலைதான் என நாம் அறிவோம்

முதலில் சாவிகளைத் தொலைத்தோம்

பிறகு அந்தப் பெயர்களை,

இப்போது

நாமாகவே உருவாக்கிய

அர்த்தத்தின் கடைசி இழை அறுந்து விழுகிறது.

-

துருவேறிய ஒரு சாவி

எந்தப் பூட்டையும் திறக்கப்போவதில்லை 

ஆயினும் அதனை நாம்

கவனமாக மெருகேற்றுகிறோம்,

-

தூசு படிந்த அலமாரியில்

பயன்படுத்தப்படாத கோப்பைகள்

ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம்

வெறுமையின் துல்லியமான இசை.

-

வெளியே,

பறவை ஒன்று

அடையாளம் தெரியாத ஒரு மரத்தில் அமர்ந்து

தன்னுடைய பழைய பாடலை

மறந்துபோன தொனியில் இசைக்கிறது

அதன் அலகுகளில்

ஈரம் எதுவுமில்லை 

வெறும் உலர்ந்த காற்றை அது

தன் சுவாசமாக மாற்றிக்கொள்கிறது.

-

இந்தக் குடிமையின் சிதைவு

ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை

ஒவ்வொரு கல்லாக நகர்ந்து

இறுதியில்

எதுவும் தாங்காத ஒரு அத்திவாரமாய்

வெற்றுத் தரை மட்டும் எஞ்சியுள்ளது.

-

முற்றத்தில் கிடக்கின்றன

சிதைந்த பொம்மைகளும்

திறக்கப்படாத கடிதங்களும்,

அவற்றின் மேல் பெய்யும் மழை

மண்ணை நனைக்கவில்லை,

மாறாக,

இருக்கின்ற கொஞ்ச ஈரத்தையும்

உறிஞ்சி எடுத்துச் செல்கிறது.

-

நாம் எதையோ தேடுகிறோம்

ஒருவேளை,

தொலைந்துபோதொரு

சிறுதுளிப் பொருளை அல்ல,

பொருள் எதுவுமே இல்லை என்கிற உண்மையை

எளிதாக ஒப்புக்கொள்ளும்

அந்த ஒரு கணத்தை..


வியாழன், 22 ஜனவரி, 2026

உதிரத்தின் திணை விழிப்பு..

எங்கிருந்தோ எழும் பேரோலம்

உன் செவிப்பறையைக் கிழிக்கையில் 

உன் உண்ணாக்கு அதிர்ந்து 

முள்ளந்தண்டு சில்லிடுகிறதா 

ஆயின் 

அயல் நிலத்தில் பெயரற்று வீழ்ந்தவன்

உன் குருதி வழி உறவு


எங்கோ ஓர் எளியவனின்

பசிநரம்பு தெறிக்கையில் 

உன் வயிற்றுச் சுவர்கள்

உள்நோக்கிச் சுருங்கிப் புலம்புகிறதா 

வா.. 

என் கைகளைப் பிடித்துக்கொள்

நீயும் என் உடன் பிறப்பு


விழிப்பு என்பது

தூக்கம் கலைந்த விழிகளின் வரவு அல்ல

அது 

அநீதி எரியும் திசையெல்லாம்

தன் சதையைப் பிய்த்து

நெருப்பாய் வீசும் 

ஒரு ‘திணைத் துளக்கம்’


பனந்தோப்புக் காற்றினூடே

பாயும் தோட்டாக்களின் ஈனச் சிரிப்பு

முள்வேலிக் காடுகளில்

தொங்கி நிற்கும் 

எம் மக்களின் கிழிந்த கனவுகள் 

இவை உன்னைத் தூங்க விடாமல்

உள்நின்று உலுக்குமெனில் 

உன் அரசியல் என்பது 

வெறும் சொல்லல்ல

அது சூல் கொண்ட நிலத்தின்

பேரெழுச்சி


நூறு நதிகள்

வெவ்வேறு திசைகளில் ஓடினாலும்

அநீதியின் உவர் நிலத்தில்

அவை சங்கமிக்கும் பெருங்கடலே 

நம் தோழமை..

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

நிலமெனும் உயிர்மூச்சு..

ஏதிலாளனே..!

நிலைகொள்ளாச் சொற்களுக்கிடையே

கடந்து செல்வோயே 

இதனை எழுதுக 


எம் உடலென்பது 

இம் மண்ணின் நுண்துகள்

எம் உயிர்ப்பென்பது 

இக் கடற்காற்றின் சீற்றம் 


யார் நல்கியது இவ்வுரிமை 

யாரும் ஈந்ததல்ல இது

கருவறைக் குருதியோடு கலந்துயிர்த்து 

தொப்பூள் கொடியால் 

இந்நிலத்துள் வேரூன்றி

பிறப்பொடு வந்த பெரும்பொருள்


வேரூன்றிய பனையின் செம்மாப்பில்

கருகிய மடல் சுமந்த 

தீயெனக் கொதிக்கிறது 

எம் முன்னோர் புதைத்த 

ஈமப் பெருங்கற்கள்

இந்நிலத்தின் உரிமையைப் 

பேசாப் பெருமொழியால்

எக்காலத்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்


அமைதி என்பது 

எம் நாவறுந்த நிலையும் அன்று 

அஃதெம் 

புதைக்கப்பட்ட சாம்பலினின்று

மீளத் துளிர்க்கும் ஆதி விதையின்

ஆழத்து அடக்கம்


எழுதுக..! 

நாங்கள் நிலமற்ற நிழல்கள் அல்லர்

சிதைக்கப்பட்ட நிலத்தின் 

மாறாச் சான்றுகள் 

எம் குருதி தோய்ந்த இந்நிலவரைபடம் 

கடலலைகள் தீண்டத் தீண்ட

கூர்மைபெறும் பெரும்வாள்


எங்கள் விடுதலை என்பது

வேறெங்கும் உளதன்று 

அதுவே எம்மூச்சின் முதலசைவு 

எம் வாழ்வின் 

முடிவிலாத் தொடர்ச்சி.. 



வியாழன், 8 ஜனவரி, 2026

ஏலோர் எம்பாவாய்..


காரிருள் போழ்ந்து கதிரவன் வந்துதித்தான்
போர்முரசம் கொட்டப் புவியெல்லாம் கேட்குது காண்
பார்முழுதும் ஆண்ட பழங்குடிநாம், இன்றோ
வேரிழந்த கொம்பாய் வெம்பியே நிற்கின்றோம்
ஊரறிய வாழ்ந்த உயர்வை நாம் மீட்டெடுக்க
பேரறிவும் வீறாப்பும் பேணித் துயிலெழாய்
வார்செறி கூந்தல் வாரி முடித்து நீ
ஏருடைய தேசம் எய்திடாய்  
எம்பாவாய்…

ஆழி சூழ் வையகத்தில் ஆளுரிமை அற்றோமாய்
கூலிக்கும் கீழாய்க் குன்றிப்போய் நிற்கின்றோம் 
வாழி எம் வையகம் வாராய் எம் விடுதலை 
ஊழித் தீ போலேநீ உற்று எழுந்து வா 
தாழ்விலா எம்இனத்தின் தாகம் தணித்திட
யாழின் இசைபோல இன்பம் பொழிந்திட
கோழைமை நீக்கி எமைக் காக்க வல்லதோர்
சூழல் அமைத்திடத் தோன்றாய் நீ  
எம்பாவாய்…

மானம் பெரிதென்று வாழ்ந்த மறக்குடியீர்
தானம் இழந்ததோர் தாயில்லாக் கன்றுபோல்
ஈனப் பிறவியாய் இங்கிருக்கப் போமோ நாம் ? 
வானம் பிளக்கவே வன்முரசம் கொட்டாதோ
தேனத் தமிழ்ப்பண் திசையெங்கும் கேட்காதோ
ஊனம் தவிர்த்தே உயர்ந்திட வாரீரோ
ஞானத் தலைவன் நல்வழி காட்டவே
யானை பல்கொண்டெழும் ஏலோர்  
எம்பாவாய்..

பூங்குழல் மங்கையீர் பொழுது புலர்ந்ததுகாண்
ஈங்கு நம் இல்லம் இடிபட்டுக் கிடக்கையிலே
தேங்கிய கண்ணீரில் திக்கற்று நிற்போமோ
ஓங்கிய குன்றில் ஒருகொடி ஏறாதோ
தாங்கிய தாயெம் தமிழ்நிலம் மீளாதோ
ஏங்கிய நெஞ்சம் இனிது இளைப்பாற
பாங்குடை நன்னாடு படைத்திட வாரீரோ 
தாங்கரும் துயர் தீர்க்கத் தாராய்  
எம்பாவாய்

புள்ளினம் ஆர்த்தன பொழுது புலர்ந்தது காண் 
அள்ளல் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கையிலே
விள்ளத் தெரியா விழுமங்கள் போனதென்ன
கள்ளர் கவர்ந்த எம் காணி நிலம் மீட்க
வெள்ளமெனத் திரண்டு வீறுடன் வாரீரோ
பள்ளம் மேடெலாம் பார்த்துக் களைந்தெறிய
உள்ளம் ஒருங்கே உறுதிகொள் வாரீரோ
எல்லை வகுப்போம்நாம் ஏலோர் 
எம்பாவாய்….