Friday 10 February 2012

வாழத்தெரியாதவன்..

ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்
ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்
அன்று நீ காணாமற் போனாய்..
சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்
சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்தது
நீ இறந்திருக்கலாமென
பலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்
காலமும் ஓடிப்போயிற்று
வழமை போலவே தியாகங்களும்
நினைவுகளும் எமக்குள்
மங்கிப்போயின..

சுரணை அற்ற வாழ்வுக்காக
தொலை தேசத்திற்கு நான்
வந்திருந்தபோது
பனிப் பொழிவினிடையே
உன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!
அது நிச்சயமாக நீதான்
அதே கூர் மூக்கு,தெத்திப்பல்
ஆயின்..
நீ இறக்கவில்லை..!
ஆனால் இறந்திருந்தாய்
நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்
காலைச் சவட்டியபடி,

கல்லூரிக் காலங்களில்
எப்படி எல்லாம் கலகலப்பாய்
இருந்தாய்..! இப்போதோ
பேச்சுக் கொடுத்தாலும்
பெரும் மெளனம் காக்கின்றாய்..
முட்கம்பிகள் உன் குதத்தைக்
கிழித்த போதும்
மின்சாரம் உன் குறியை
எரித்த போதும்
கேள்விகளாலும் கம்பிகளாலும் நீ
துளையிடப்பட்ட போதும்
நீ காட்டிய அதே மெளனம்
இது கூட நல்லது தான் நண்பனே

ஒருவேளை
வதையின் போது நீ
வாய் திறந்திருந்தால்
ஐம்பது குடும்பமாவது
அலறி இருக்காதா..?
தேவை அற்ற இடங்களில்
நீ அதிகம் பேசி இருந்தாலும்
தேவையான இடத்தில் நீ
மெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்
நல்லது
போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!

இனி நீ காணப்போகிற உலகும்
கடக்கப்போகிற மனிதர்களும்
ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்
இப்போது
பேசத்தொடங்கி இருப்பதைப் போலவே
உன்னைக் கடந்து செல்கின்ற போதும்
அவர்கள் பேசிக்கொள்வார்கள்

இவன்
வேறு வேலை அற்றவன்
வாழத் தெரியாதவன்
என்றும்...

No comments:

Post a Comment