Sunday 4 October 2015

உயிர்த்தெழல்..

குண்டு துளைத்துத் தலை பிளந்து
சிதறிக்கிடந்த
நண்பனின் மூளைபோல்
வாசலில் கொட்டிக் கிடக்கும்
இந்தப் பனிக்காலத்திலும் கூட
நினைவுகளை 
நான் பறிகொடுக்கப் போவதில்லை

கால மத்துக் கடைந்த 
மனப்பாலில் திரண்டு பிறப்பது
சித்தப்பிரமை தானென்பதை 
கொத்தாய்க் கொல்லப்பட்ட 
என் மக்களின் காய்ந்த குருதியாய்
பழுத்து இலைகள் வீழும் 
இந்தப் பருவத்திலும்
நான் நம்ப மாட்டேன் 

குளிர் காற்றைக் கிழித்தபடி
கூட்டமாய்த் திரும்புகிறது பறவைகள்
பேச்சறுந்து போகிறது நாள்
ஏழாண்டு கடந்து இன்றிரவும்
என்னருகில் எவருமில்லை
அடிக்கின்ற அனற்காய்ச்சலுக்கு
கழுத்தில் தொட்டுப் பார்க்க
கையொன்று..?, வழமை போல்
வலக்கை இடக்கையைப் பிடித்து
வைத்துப் பார்க்கிறது 
அதிகாலைப்புல் நுனியில்
ஆவியுயிர்த்த துளியை
படம் பிடித்த கண்மணி
இப்போது ஏனதனை  
இமையோரம் உருட்டி விடுகிறது..? 

எச்சில் தொண்டையால் இறங்கொணாது 
இடறுகின்ற வேளையில் தான்    
'உன்னுடைய பாரங்களை 
என்னில் இறக்கி வைத்து இளைப்பாறென'
எங்கிருந்தோ வந்தவோர் தேவதூதன் 
தாளில் எனையேந்தித் தாங்குகிறான்

இப்படித்தான் நிகழ்கிறது
உச்சம் தொடும் பெண்ணின் யோனியாய்
ஈரலிப்பாய், இதழிதழாய் 
கவிதையொன்று அவிழ்கிற போது
உலகு உயிர்த்தெழுகின்ற
அதிசயம்..

Tuesday 23 June 2015

இப்படியாக புத்தன் மறைந்தான்..

சுரக்கின்ற ஊற்றாய் 
இதம் ததும்பும் குளிராய் 
தன்னில் கரைந்துருகி 
உயிராய் இருந்த 
யசோதராவிடமும், மகனிடமும்
ஓர் வார்த்தை சொல்லாமல்
திருட்டுத்தனமாய் இரவில்
வீட்டை விட்டுத் தப்பியோடிய
சித்தார்த்தன்
என்புருக இவனைத் தேடி அவர்கள் 
அழும் பொழுதொன்றில் 
உலகின் முன் 
அன்பைப் போதிக்கும் புத்தனான்

அவனுள் அறுத்துக் கொண்டிருந்த 
அந்த முரண்நகை
ஓர் விதையை பிரசவித்த போது
அது துளிர்த்து வெள்ளரசானது
அவசர அவசரமாய் அதன் 
கிளையொன்றை முறித்துக் கொண்டு 
ஈழத்தீவில் இறங்கினாள் சங்கமித்தை
அவளன்று நட்டுச் சென்றது
அன்பின் கிளையல்ல
ஆற்றொணா வலியின்
முடிவற்ற துயரின் கிளை
காதல் வழியக் காத்திருந்தோரின் 
ஏக்கம் நிறைந்த 
கண்ணீரில் வளர்ந்த கிளை

பாவம் நிறைந்த கிளை
படர்ந்து அரசான போது 
ஒவ்வொரு இலையின்றும் எழுந்த
தாயினதும், மகனினதும் தவிப்போலம்
காதைக்குடைய 
தனியாளாய் வலியை 
தாங்கொணாத புத்தன் 
பூர்வீக மக்களிடம் அதனைப்
பிரித்துக் கொடுத்து விட்டு
காவிக்குள் மறைந்து 
கரைந்தான்... 

Tuesday 5 May 2015

நான்கு விழுப்புண்கள்..

மாவீரனே..
கடலுக்கும் ஆறுக்குமான இடைவெளி
உன் கனவு
மிகுந்த மேடுகளும் அதிகம் பள்ளங்களும்
கட்புலம் மங்கலாயினும்
கடலோசை
காதிற் கேட்ட படியே இருந்தது
இயன்றவரை நீயும் ஏறி இறங்கினாய்
நீ சென்ற வழியெங்குமின்று
திட்டுத் திட்டாய்
தேங்கிக் கிடக்கிறதுன் தீர(ரா)க் கனவு
எட்டமுடியவில்லைக் கடலை, எனினும்
என்றேனும் ஓர்நாள்
இதே வழியில் ஓராறு எட்டலாம்!
அதுவரையில்
நினைப்போர் வாழ்நாளுள்
நீயும் நின் பாதைகளும்

போராளியே..
தலைப்பயணி முன்னில்லாத்
தவிப்பும்
சகபயணி போய்விட்ட
சலிப்பும்
ஏன் பயணம் தொடங்கினாயென
இடிந்து போயிருக்கிறாய்
இப்படித்தான் இந்த உலகு
இலக்கை நீ எட்டினால்
வழிகாட்டியென்றும்
இல்லையேல்
குழிகாட்டியென்றும்
குறிப்பிடும்
இடையில் நீ பட்டதெல்லாம்
என்றைக்கும் எண்ணாது
இப்படித்தான் தோழா உலகு

மக்களே..
பாய்ந்துவரும் வல்லூறு பார்க்காமலிருக்க
குஞ்சுகளை இறக்கையுள் ஒளிக்கும்
கோழியாய்
உட்பாவடையுட் கூட
ஒளித்துவைத்துக் காத்தீர்கள்
நீர்க்கடன் செய்யத்தான்
கடற்கரை போனோமென
எவருந்தான் எண்ணியிருக்கவில்லை
பெற்று நீர் வளர்த்த பெருங்கனவு
தசைத் துண்டங்களாய்
சிதறிப் போய்க்கிடந்தது
கொள்ளிக் கட்டைகளாய்க்
கொட்டுண்டு கிடந்தது
கொள்ளி வைக்க ஆளில்லாக் குறைக்கோ..?
இழந்தும், இழந்தும்
எல்லாமாய் நீர் இருந்தீர்

பூர்வீக தேசமே..
தேசங்களை ஈன்ற தாயின் வயிற்றில்
இந்தா பிறக்கிறேன் என்பதாய்
உப்பித் தெரிந்தாய்
நாமும் பிரசவம் பார்க்க
கொத்தாய் குலையாய்
குடும்பங் குடும்பமாய்
எத்தனை கொடுத்தும்
இன்னுமுன் பிறப்போ
சத்தமே இன்றிக் கிடக்குது
இன்னமும்
ரெத்தங்கண்டு மொண்டு தான் பிறப்பியோ..?
கொடுப்பதெம் பணி
பிறப்பதுன் கடன்

Monday 4 May 2015

பறவையைப் பிரிந்த சிறகு..

எப்படி முகிலே நீ
என் வானந்தனை அகன்றாய்..?

எப்படித் தூரிகையே
என் வண்ணந்தனை மறந்தாய்..?

எப்படி நறுமணமே
இப் பூவின் இதழ் பிரிந்தாய்..?

எப்படி என் பேச்சே
இந்நாவை நீ கழன்றாய்..?

எப்படிச் சிறகே நீ
இடமறியா நடுவானில்
இப்பறவை உடல் விட்டு
எங்கேயோ பறந்து சென்றாய்..?

கருவேப்பிலை..

உரமாக மட்டும் நீ
உண்டுயரும் செடியல்ல
கருவேப்பிலை நீ கறியல்ல என்றுபலர்
அறைந்தறைந்து சொல்லியுமேன்
அறியவில்லை மென் மனசே..?

வேண்டாமல் விலகுகின்ற கால்களையும்
நாய்க்குட்டி
விளையாட்டென எண்ணி
விருப்போடு பின் தொடரும்
பாலக உள்ளமேன் பெற்றாய்
பால் மனசே...?

என்புருகிக் கரைந்து
இரு கையும் நிறைய உன்னை
அப்படியே அள்ளி
அனைத்தயுமே கொடுத்து விட்டு
பாற்தாகம் வந்த கன்று
பசு முகத்தைப் பார்ப்பது போல்
ஏற்காத ஒன்றுக்காய்
ஏங்கிடுதல் ஏன் மனசே..?


சிறகை ஒடுக்கும் பறவை..

வானம் புரியாத
வறள் நிலமாய் வாழ்க்கை
வலுவிழந்தும் வளையாக் கற்றாளைத் திமிராக
மானம்,
மனசோ கற்பாறைதானெனினும்
மலர்ப்பிஞ்சு வேர்விரல்கள்
மார்தடவ பிளக்கிறது

பருவம்மாறத் திரும்புதற்கு
பறந்துவந்த
பறவைக்கும் உடல்
பலமிழந்து போகிறது
உருவமும்,உளக்கட்டும்
உடைந்து நரைக்கிறது
உற்றிருந்த உறவுகளும் ஒன்றுமின்றி விலக
தெரிவுகளும் இல்லை
திரும்பியேனும் செல்வதற்கு
தெருக்களும் இல்லை, தெளிவில்லை
தெரியவில்லை

தெரிகிறது
பறப்பினிமேல் முடியாத
பாரமுணர் பறவையொன்று
கற்பாறைகள் உள்ள
ககனத்தின் மேற்பறந்து
இயன்றவரை மேலே
ஏறி உயர்ந்து விட்டு
அடிக்காமல் சிறகுகளை
அத்தோடு ஒடுக்கிற்று..

எவருக்கும் நோகாமல் அனுப்பு..

கண்கள் செருகிக் காட்சியும் மங்கிக்
கால் குளிர்ந்து
எண்ணம் மூச்சு எழுதல் திணறி
இறுக்கமுற்று
மண்ணை விட்டு நீங்கும் நேரம்
மனசு சொல்லும்
'உன்னாலெவரும் வாழ்வை இழந்து
உடைந்ததில்லை
உன்னுள் எந்தக் குற்ற உணர்வும்
இருந்ததில்லை'
என்னும் செய்தி செவியிற் கேட்க
எனை அனுப்பு
என்னைச் சிதைத்தும் நகர்த்திச் செலுத்தும்
என் முருகா..

Sunday 12 April 2015

ஒற்றைப்பனையாய் வாழ்க்கை..

ஊரின்கோடி மயானத் தீயே
உள்ளே மனசைக் குடையும்
ஊரே எரிந்து மயானமானால்
உறக்கம் எப்படி முடியும்?

வாழ்வினிற் சோகம் வந்திடை போனால்
வலிகள் தாங்கிட முடியும்
வாழ்வே சோகம் என்பதாய் ஆனால்
வாசல் எப்படி விடியும்?

வறண்ட நிலத்தில் வாழும் உயிர்கள்
வானைப் பார்த்தே ஏங்கும்
வானும் பொய்த்துப் போனால் அவையும்
வாழ்வினை எப்படித் தாங்கும்?

எல்லாம் தீய்ந்தும் எஞ்சி நிற்கிற
ஒற்றைப் பனையாய் வாழ்க்கை
இழந்தாய் எல்லாம், தெரிந்தும் இன்னுமேன்
அணைக்கலை என்னை சாக் கை..?

Tuesday 7 April 2015

நினைவெனும் நெருஞ்சி..

பின்னி மடித்துக் கட்டிய
நெளி முடியும், இடுப்பிற் பட்டியும்
கானக நிறத்தில் ஆடையுமாய்
கடைசியாக உன்னைப் கண்டிருந்தேன்

மீனைக் குறிபார்க்கும்
கொக்கின் கவனத்தோடு
வரைபடமொன்றில் மூழ்கி இருந்தாய்
அதிர்வு வந்த திசைநோக்கி
வெடுக்கெனக் கழுத்தைத் திருப்பும்
மரங்கொத்தியாய்
அருகே கடந்த என்னை
பாதாதி கேசமாய்
அவ்வளவு வேகமாய் அளந்தாய்

பூமலரும் ஓசையை
பூவுலகு உணர்வதில்லை ஆனால்
மெல்லென மூடித்திறந்து
ஆம்பல் மலராய்
உன் விழி அவிழ்ந்த ஓசை
என் செவிகளுக்குக் கேட்டிருந்தது

இரு வழியாய் பிரியுமுன்னான
காட்டிடை  வெளியில்
யானை லத்தி விலக்கி
குளத்தில் நீரள்ளக் குனிந்த போது
விரல் பட்டு
விரிந்தகன்ற நீர் வளையங்களில்
உன் முகந்தான் எனக்குப்
பூத்து மறைந்தது

மாலை விழுந்து மங்க
உதட்டை அவிழ்க்காத
ஒரு விதச் சிரிப்போடு
காட்டைக் கிழித்தபடி
ஒரு புறமாய் நீயும்
அருகப்பால் நானும் அணிகளோடு,
சில நாட்களின் பின்
திரும்பியவர்களில் நீயிருக்கவில்லை
காயப்பட்டிருந்தவரிலும்
காணவில்லையென்றானபோது
வங்கக்கடலில் மிதந்த கண்களுக்கு
வலுக்கட்டாயமாய் அணைகள் போட்டேன்

எதுவுமே நடவாதது போல்
அத்தனை வேகமாய் ஓடிப்போய் விட்டன
ஆண்டுகள்
ஆயினும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
திரும்பி வராத நீ வெள்ளியாயும்
திரும்பி வந்த நான் பிணமாயும்..


Thursday 2 April 2015

நினைவோர் இறகு..

பனிக்காலம் கரைந்தொழுகும்
வசந்தமுன் மழைக்காலம்
இருள்வானத் தூவானம்
ஓர் மனங்கரைப்பான்
ஊசி இலைநுனிகளில்
தொங்கித் துமிக்கும் நீரை
என் இமைகளும் அப்படியே
பிரதி செய்கிறதா..?

வாழ்வோர் பறவைச் சிறகு
அதன் ஒவ்வோர் இறகும்
நினைவுகள்
நீண்ட பறப்பின் இடைவெளியில்
கழன்று வீழ்ந்தவை
மீண்டுமோர் இடைவெளியில்
முளைத்து விடுகின்றன

களைத்தோய்ந்த வேளையில்
ஆசுவாசமாய்
இறகுகளைக் கோதிவிடும்
பறவைச் சொண்டாய்
மனசு
நினைவுகளைக் கோதிவிடுகிறது

சாளரத்தின் இடைவெளியால்
கைகாட்டும் மரக்கிளையில்
சொண்டாற் சொண்டை
நீவிவிட்டபடி சோடிப் புறாக்கள்
விழி அந்தக் காட்சியை
விழுங்கவும்,
புகைத்தலை நிறுத்திய
முதல்நாள் வாயாய்
தவிக்கிறது ஏக்கத் தாபம்

பனி விழுந்தும் அது கரைந்தும்
மழை பொழிந்தும் அது வடிந்தும்
வெயிலடித்தும் அது தணிந்தும்
நீயின்றி வெறிதாய்
எத்தனை பருவங்கள்
எனைக் கடந்து போயிற்று
ஆயினுமின்னும் வானவில்லாய்
நாடியும் நரம்பாயும்
நாமிருந்த மழைக்காலம்
கூடிக் கிடக்குதடி வானில்..

Monday 9 March 2015

உறைந்த காலம்..

தொடுவானக் கரையைத்
தொட்டுவிட எத்தனித்து
எட்டியெட்டித் தினமும்
ஏங்குகின்ற கடலலையாய்
தாபம்,

உடைந்திறந்த காலத்தில்
உடைந்தறுந்த முகங்களுடன்
மேலெழுந்து வரமுடியா
மிகு ஆழக் கிணற்றுக்குள்
ஆசை,

வரவே வராத
மழைக்காலம் பார்த்தேங்கி
கடைசி நீர்த்துளியைக்
கைகளுக்குள் பொத்தியுள்ள
கற்றாளைப் பெருமூச்சாய்
காமம்,

வாழ்வே கனவான வலியில்
புலன் சிதறி
கீறலை மறந்து விட்டோன்
கிறுக்கலில் சாம்பலாய்
ஊறி வந்ததிந்த உரு..

அந்தியேட்டி ஏவறை..

வந்தான் வாழ்ந்திருந்தான் அவ்வளவே
போன பின்னும்
வாழ்வான் என்பதெல்லாம்
வாய்குதப்பும் வெற்றிலை தான்
அந்தியேட்டி ஏவறையாய் அதுவும் போம்
பின்னரென்றோ
பிள்ளை ஒருவேளை
பின்னுள்ள பெயருக்காய்
எண்ணலாம், அதுவும்
மழைப்பாட்டம் ஓய்ந்த பின்னால்
குழையாலே வடிகின்ற நீர்..

காத்திருந்து பழகல்..

காலம் எனக்குக் கற்பித்ததொன்றே தான்
காத்திருத்தல், மூச்சு
கைகாட்டி எனை விட்டு
பார்த்துக்கொள் உனையென்று
படலையைச் சாத்தி விட்டு
போகின்ற வேளைவரை
பொறுமையாய்க் காத்திருத்தல்

கையறு நிலையும்
கை விரித்து பிடரியிலே
விரலூர வருடி
விடைபெற்றுச் செல்கையிலும்,
எச்சிலைக் கூட
இறங்கவிட ஒண்ணாமல்
இறுகிப்போய்த் தொண்டை
இரும்பாய்க் கிடக்கையிலும்,
காட்சிகள் மெதுவாய்க்
கலங்கி, ஊற்று வழி
நீர்கரைந்து இமை தாண்டி
நெஞ்சில் விழுகையிலும்
காத்திருத்தல், ஏனென்றால்
என்றைக்கும் இவ்வுலகில்
மெய்ம்மை காத்திருக்க வேண்டும்..

பட்டவனே அறிவான்..

உயிர் கருகித் துடிதுடித்தும்
உடல் சிதைந்து தடதடத்தும்
ஓர் வார்த்தை சொல்லாமல்
உள்ளுக்குள் விழுங்கியது
பனி கொட்டும் தீவொன்றில்
பரதேசி ஆவதற்கா?

வாழ்வதற்கு வழி இருந்தும்
வாசல்கள் பல திறந்தும்
சலுகைக்குத் தலைசரியேன்
என்றன்று நடந்ததெல்லாம்
ஏன் நடந்தாய் வீணென்று
இன்றிவர்கள் கேட்பதற்கா?

என்னை விடு போகட்டும்..,
எத்தனை பேர் தம் வாழ்வை
அப்பிடியே கையிலள்ளி
ஆகுதியாய் வார்த்ததெல்லாம்
அழித்தவனோடு கூடி
ஆரத் தழுவுதற்கா?

வென்றால் மட்டுந்தான்
விடுதலைப் போராட்டம்
நன்றென்ற உந்தன்
ஞாயம், நியாயமில்லை
கன்றுகளை இழந்தலறும்
கண்களினைக் கண்ட பின்னும்
பசு தேடிப்பரிதவிக்கும்
பாலகவாய் பார்த்த பின்னும்
அசையாத உன்னெஞ்சின்
அழுத்தம், அழித்தோர் முன்
மசிவதன் மர்மந்தான்
மயிரளவும் புரியவில்லை..!

உன் வீட்டில் நடந்திருந்தால்
நீ பட்டுச் சிதைந்திருந்தால்
இன்றைக்கு நீ பேசாய் இணக்கமென,
ஏற்கின்றேன்
மறதியும் வாழ மாமருந்து தான்
அதற்காய்
அறணையாய் எப்படி
ஆகலாம் தோழனே..