Thursday, 26 November 2020

எம் இறைவோரே..

 போற்றியெம் வாழ்முதலாகிய புதல்வீர்

புலரும், பெருமுயிற் கொடைகொண்டு 

ஊற்றினீர் விடிவிற்கு உம் வாழ்வை 

ஒருக்கிலும் மறந்திடோம், இதன் பதிலாய் 

தோற்கிலோம் என்கிற தினவுடை வாக்கினை 

தூயரே வைக்கிறோம் உம் முன்னால் 

ஏற்று நம் கனவதன் துணையாக 

இருந்தொளி காட்டுமெம் இறையோரே..


இன்னமும் நினைவினில் ஏங்குவோர் ஒருபால்

எங்கையோ இருக்கிறீர் எண்ணுவோர் ஒருபால்

முன்செய்த பாவமோ முனகுவோர் ஒருபால் 

முயன்றுமீள் எழவென முயல்பவர் ஒருபால் 

என்ன தான் வந்தினி இயம்புவர் ஒருபால் 

கல்லறை வாழ்கிற கடவுளே நீவிர் 

எம்முடை மனதுக்கு உம்பலந் தருவீர்

எமக்கொளி காட்டுவீர் இறையரே வாழ்வீர்..


கூவிய வானகம் கூவிய காற்று 

குறிதப்பாது வீழ்ந்தன குண்டுகள்

ஏவிய கணையினால் எங்கணும் சிதறல்  

இருப்பினும் தளரலை எமக்கென நின்றீர் 

காவிய வீரராய் ஆகியெம்  கண்முன் 

காட்டினீர் பாதையை காந்தளே நீவிர் 

காயம் விட்டேகினும் கண்களில் நெஞ்சில் 

கண்கண்ட தெய்வமாய் காவலாய் வாழ்வீர்..


Tuesday, 22 September 2020

இருந்தும் நான்..

 உறைந்த மூளை

உடைந்த நெஞ்சம்

அறைந்த வாழ்க்கை

அழிந்த நான் 


அறுந்த தாபம்

அகன்ற மேகம்

திறந்த வானம்

தொலைந்த நான் 


முறிந்த நேசம்

முடிந்த காலம்

தெரிந்த கானல்

தெளிந்த நான்


இருந்த காலை

இழந்த மாலை

புரிந்த வேளை

எரிந்த நான்..Thursday, 6 August 2020

அகாலவெளியின் அசரீரி..

இழுத்து மூச்சிரைக்க ஓடி
இடர் கண்டம்பல தாண்டி
விழுந்தாலும் எழுவனென
வீரியமாய்ச் சொல்லி 
அழ நினைக்கும் கண்ணை
அண்ணாந்து மறைத்தபடி 
தொழாத தோள் நிமிர்தி 
தொடர்ந்து வந்த பாதைவழி
தூளாவும் விழி காணும்
தூசிப் படலம் பின்
எதுவுமே வருவதாய் 
இன்றுவரை தெரியவில்லை

பொதுவில் போனவை
போனவை தான் என்றாச்சு
முன்பின் நினைக்காத
முடக்கொன்றின் குளிர் மேட்டில்
என் பின், பக்கத்தில் 
எவருமுண்டா எனப்பார்த்தால்
சகலதிலும் தோற்றவன் சா
சஞ்சாரம் ஏதுமற்ற 
அகாலவெளி ஒன்றில் 
ஆகுமென்ற அசரீரி 
காதுகளைக் குடைந்து 
கடந்தப்பாற் செல்கிறது.. 


Tuesday, 28 July 2020

விடியலுக்கான விதி..

இருள் விலகும் காலமதில் விலகும்
மிகையொலியில்
பூ அவிழும் பொழுதிலது அவிழும்
வானிருண்டு
மழைபொழியும் நேரமதிற் பொழியும்
உயிர்க் கொடையால்
மண்விடியும் பொழுதிலது விடியும்

தேசப் பிறப்பு என்றோ
தீர்மானிக்கப்பட்ட ஒன்று
ஆசீவகம் சொல்லும்
அழிக்கேலா நியதியது

உயிர் வார்த்த கனவு நிலம்
உருத்தோன்றும் வேளைவரத்
தோன்றும், இதன் பூப்பை
எதிரியே அறியாமல்
எம் பொருட்டு வடிவமைப்பான்
உதிரத்தை ஊற்றி
உயிர் கொடுத்த கனாவுக்கு
விதியென்னும் நியதி
வேண்டியதை வழங்கிடல் தான்
விதியாய் ஆகட்டும் என்பதென்
வேண்டுதல்
எந்தனின் ஆயுட் காலத்துள்
அந்த வரம் வருமோ அறியேன்
அதால்

விதியே அவ் விதிதன்னை
என்று நீ விதித்துள்ளாய்..?

Sunday, 12 July 2020

இவன் சாகான்..

பட்டியலுள் அகப்பட்டு
பரிதாபமாக்கப்படும்
முட்டாளாய் இருக்க அவன் விரும்பவில்லை
அவன் படைப்பு
அண்ணாந்து பார்த்துச் சும்மா
அலங்கரிக்கப் பட்டதல்ல
மண்ணில் புரண்டெழுந்து
மார்கொடுத்து முடிந்தவரை
தன்னைக் கொடுத்து
தான் எரித்து வனைந்ததடா

உண்மையும் உயிர்ச் செறிவும்
ஒருங்குவரும் ஓசைகளும்
என்ன,அதை எப்படிப் படிப்பதென்றே
இன்னும் அறியார் இந்த
இடிமாட்டு விமர்சகர்கள்

பாசாங்கறியாத
பட்டவனின் பாட்டுக்கு
படிமந்தெரியாது
பட்டதொன்றே தெரியுமடா
வீசுங்காலம் அவன்
வேண்டியதை விடுதலையின்
பேசுபொருளாக்கும் அன்றும்
விண்ணாண விமர்சனங்கள்
தூசாய்க் கூட எங்கும்
தொங்காது அறிந்திடுக..


Wednesday, 8 July 2020

பரமசுகம்..

பூத்து நாளாகியும்
பொலிவொழுகும் முகத்தோடு
முட்டைக் கண் சுழன்றழைக்கும்
முன்னிரவுக் கனா

வனத்தியவள் கையில் வாளோடு
முட்டு ஆனால் பட்டுதென்றால்
வெட்டென்றாள்

கொட்டும் பெருமழைநான்
நீயோ குடையின்றி
சொட்டும் நனையாமல் செல்லோணும்
மீறியொரு
எட்டு நான் வைத்தாலும்
இரேன் கனவிலென்றாள்

பட்டுத் தெளிந்தவன் நான் பெளவியமே
அறிவாயா..
படாமல் முட்டுகின்ற பதமும்
பரம சுகம்..


Monday, 22 June 2020

காடு..

பசியாறும்
ஒவ்வொரு யானையின் வயிற்றிலும்
துளிர்த்துவிடுகிறது
நாளைக்கான அடர்காடு..


Thursday, 18 June 2020

அழகென்பது...

பூக்களும், தேனீக்களும், வெம்மையுமாய்
பூரித்துப் போய்க் கிடக்கிறது
வசந்த காலம்

இன்னும் சில போழ்தில்
இளங்காற்றுக் குளிர்காவ
அழகாகிச் சிவந்து
வாழ்ந்திருந்த கிளை விட்டு வழுக்கி
பொன்னிலைகள் பூமியெங்கும் புரளும்
அதை ரசிக்க
நிர்வாணமாய் மரங்கொள்ளும் நிலை
தனி அழகு

நாளுருள
பூவாகிப் பனி பொழியும்
எந்தக் கறையுமற்ற வெண்விரிப்பாய்
பாலாறாய், மலை ஒளிரும்
பனிக்கால அழகே
பாரழகு

குளிர் கரைய
மென்வெம்மை அதைக் குலவி
இதமான கணப்பாய் மெல்ல நகும்
இளவேனில்,
எங்கு பார்த்தாலும்
இதழவிழும் மொட்டுக்கள்
புத்துணர்ச்சி நிறைந்த புதுக்காற்று
தம்பளப்பூச்சிகளும்
தவழ்ந்தோடும் குருளைகளும்
அப்பப்பா..,
இளவேனில் அழகோ என்றைக்கும் மறக்காத
பதின்மத்தில் முதற்பார்த்த பருவத்தின்
மாரழகு.

என் இனிய பிரியமே

பாலுக்கு முட்டும்
குழந்தையின் முகமாய்
பருவங்கள் எப்போதுமே
அழகானவை தான்

ஆதலால் புரிந்துகொள்
அழகென்பது பருவத்தில் மட்டுமில்லை
மனத்திலும்..


Saturday, 2 May 2020

முடிந்த இடத்தில் தொடங்கும்..


இழப்பும், எது செய்தும் மீண்டெழலும் இன்றுவரை
தழலாய், நினைவுகளாய் தகிக்கிறது கண்களுக்குள்

கண்களை மூடினும், திறப்பினும் கண்மணிக்குள்
மண்ணின் விடுதலையே மனக்கொழுந்தாய் ஒளிர்கிறது

ஒளிரும் கொழுந்துக்குள் ஓராயிரங் கதைகள்,
களித்திருந்த வாழ்வும் கந்தகப் புகையாக

புகையும் மேகமாய் கலைந்தெங்கோ போயின்று
பகை மறந்து அறணையாய் போனோமா.?

போனோர் கனவென்ன? போனோரேன் போனார்கள் ?
ஏனவர் மனதுவந்து இத்தனையும் கொடுத்தார்கள்?

கொடுத்ததில் இருந்த கொள்கை இந்நாளில்
எடுத்தாளப் படுகிறதா எவராலும்? விடையுண்டா..?

விடையைக் காண்கின்ற வெளிச்சமுண்டா கைகளிலே?
தடை இருக்கும் அதைத் தாண்டாமல் விடுதலையா..?

விடுதலைப் பயணமென்றும் நெடிதுதான் நாளைக்கே
சடுதியாய் எண்ணுதல் போல் சாளரத்தால் மலராது

மலர்வதற் கென்றுமோர் நாளுண்டு அந்நாளில்
பலர் வந்து தடுத்தாலும் பாரே பிளந்தாலும்

பிளந்து நிலஞ்சிவக்க பிறக்குமெம் தேசத்தில்
கலந்துகொள் ஒரு கையும் கொடு, விடியுமடா..


ஐம்புலனும் மறவாத அந்நாள்..


இன்றும் பூக்கள் மலர்கிறது
வாசம் காற்றில் அவிழ்கிறது
ஆனாலெம்
சுவாசத்தில் மட்டும் இன்னமும் மாறவேயில்லை
நாசிக்குள் நின்று விட்ட
கந்தக வாசம்

நிறையப் பாடல்களும், பேச்சுகளுமாய்
அறை நிறையக் கிடக்கிறது இற்றை,
ஆயினுமெம்
செவிப்பறை கிழிந்து வழிந்த
குண்டின் ஓசைகளோ
காலவெளிகளைத் தாண்டி
இன்னமும் காதுகளில்

கட்டிடம் மேவினாலும்
காட்சிகள் மாறினாலும்
சாட்சியாய் இன்றும் கண்ணில்
காட்சிகள் உண்டு, வெண்மண்
செம்மண்ணாகி ரெத்தச் சேறாகி
புகையாயெம்
கனவு மேலெழுந்து கலைந்த காட்சி ஒன்றே
என்றைக்கும் கண்முன்னால் எப்பொழுதும்..

சுவை நரம்பறுந்ததா, சுவையிலா அமுதிதா?
எதுவும் தெரியாத உணவு, கரை நெடுக
பேச்சறுந்து போய் பெரும் மெளனம்
வெறும் வாயால்
ஆச்சரியம் ஏதும் ஆகாதென்றறிவு
வீச்சாக நின்றவர் விடைதந்து
வேகமாய் நாட்களும் ஓடிற்று
ஆனாலும் கூட அறிக, உமையென்றோ
நான் மறந்தாலும் கூட
‘நா’ மறக்காது  நாயகரே

தெய்வத்தால் ஆகாத தீராத கவலையிற் தான்
மெய்யிலும் உணர்வுற்று
மெய் வருந்த வழி அமைத்தோம்
உய்வோம் என்றெண்ணித்தான்
உயிரையும் கொடுத்து நின்றோம்
கை நழுவிப் போய்விடுமா கனவு?
எதுவெனினும்
பொய்யில்லை எங்கள் போராட்டம்
என்றைக்கோ
மெய்யுணர்வே மெய்யாகி மீண்டெழுவோம்

ஐந்து புலனும் அவிந்து அடங்கி
சிந்தை மரிக்கும் நேரம் வரைக்கும்
அந்தா நிகழ்ந்த இனப்படுகொலையை
வெந்து எரியும் போதிலும் மறவோம்
எந்த நாளில் எம்முடை விடுதலை
எந்தையர்  மண்ணில் பரணியியைப் பாடுதோ
அந்த நாள் வரும்வரை ஆவியில் கூட
சொந்தமண் வாசமே சுற்றி வருமடா..


Friday, 1 May 2020

உயிரால் எழுதல்..

என்ன தானென் எதிரி ஆகிலும்
கண்ணநீர் கசி கலைவடிவொன்றை நீ
என்புருகும் படி இயம்புவாயெனில்
என்னை மறந்துதுனை ஏற்றிப் புகழுமோர்
தன்மை கொண்டதென் மனசடா,
கலையிலே
உண்மை உண்டெனில் எதுவோ மூளையின்
கண்ணை மறைத்துக் கட்டவும், மனசது
உன்படைப்பதன் மார்பிலே உருளுதல்
என்னை மீறிய ஏதோ உணர்வினால்
உன்னப்பட்டு நடக்குது, ஆகையால்

உயிரை எழுது உந்தன் உயிரால் எழுது,
என்னுடை
அரசியல் வேறென்றும் அறி..


Friday, 28 February 2020

திருவை அழை உந்தன் திருவடிக்கே..

ஆற்றங்கரை மரம் போல் வாழ்வின்
அடுத்த நொடி அறியா அச்சம்
கூற்றுவனாய் என்னைக் கொல்லும்
கொடுமையினின்றென்னை மீட்டு
தேற்றி உளமாற்றி கரை மேல்
ஏற்றுவையோ நல்லூர் வேலா..?

காற்றிடையில் பட்டுலையும்
கலவரின் மனமாய் ஆன
நேற்றையும், இன்றும் இன்னும்
நீளுமோ வேலா? மேலும்
சாற்றவோர் வார்த்தை இல்லை
சக்தியும் இல்லை, பாராய்..

இருபாடும் எரிகின்ற கொள்ளியின்
இடைமாட்டி
எதுசெய்வதறியாது எரிகின்ற
எறும்பைப் போல்
ஒருதிக்கும் அறியாது உடைந்து
நொய்ந்துள்ளே
உருக்குலைந்து போகின்றேன்
வாழ்வு நாளைக்கு
தெருக்கிடந்துலையுமோ தெரிகிலேன்
அதன் முன்னர்
திருவை அழை உந்தன் திருவடிக்கே
என் வேலா..