Tuesday, 17 December 2013

நினைவிலெழல்..

இத்தனை ஆண்டாய்
நினைவில் வராமலும்
இருக்கிறாய் தானா
எதுவும் தெரியாமலும்
எங்கோ மனத்தின்
குகையில் இருந்த நீ
எதிரே தாண்டும் குழந்தையின்
கண்களில்
எந்தக் கபடமும் இல்லாச் சிரிப்பில்
மின்னல் போல தோன்றி மறையலாம்

அதனின் நீட்சி
உதட்டில் மெல்லிய சிரிப்பாய்,
வயிற்றை உப்பி
ஆழவிட்டிடும் மூச்சாய் அமையலாம்
சிலர்க்கு
கண்களில் லேசாய் ஈரம் கசியலாம்
நொடிகள் வானில்
நிலைக்குத்தியும் கூட
நிற்கலாம் விழிகள்
முடிந்தால்
சமூக இணையத் தளங்களில்
இருப்பை
தட்டிப் பார்க்கவும் செய்யலாம்
கண்டால்
எங்கே இப்ப? சுகமா?, கேட்க
தயங்கி விரல்கள்
தளர்ந்து பின்வாங்கலாம்
பொம்மை கேட்டுக் குழந்தை அழைக்க
அந்த வேளையும் மறையலாம்
ஆனால்

யாருமே இன்றி
ஆழ்ந்த வெறுமையாய்
அகன்று கிடக்கும் வெளியிடை
சட்டென
எங்கோ இருந்து பறந்து சென்றிடும்
ஒற்றைப் பறவை, சூன்ய வெளியை
உயிர்ப்புடைக் கவியாய் மாற்றுதல் போல

எந்தக் கண்டத் தகட்டின் மூலையில்
இருப்பினும் மண்ணை
தழுவிப் புணர முன்விளையாட்டை
மழை செய்திடும் போது
எழுந்திடும் கலவி வாசம் ஊரின்
மண் மணந்தன்னை
உருகும் படியாய் நாசியில்
மீண்டும் ஊட்டுதல் போல

எங்கே இருக்கிறாய் தெரியாதிருப்பினும்
எந்தத் தொடர்புமே இல்லாதிருப்பினும்
இத்தனை நாட்களாய் நினையாதிருப்பினும்
ஏதோ கணத்தில்
உந்தன் நினைவு எங்கோ யார்க்கோ
எழலாம், நீயும்
உயிரின் மனசால் நொடிகளெனினும்
நினைக்கப்படலாம்
ஆதலால்
ஒருவரிலேனும் ஒருகணம் தன்னும்
உருகும் நினைவாய்ப் பழகி
விடைபெறு
எதிர்வரும் சாவெனல்
ஓர் வெறுங்கனவே..

Sunday, 1 December 2013

முகிலாய் நினைவும்..

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது

இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

இன்றிருளும் வரைதான்
இது கூட,
அண்ணாந்த விழிகளும்
அசையும் முகில்களும்
அப்படியே நாளை
அவை வேறு

வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள்
வாழும் வரைதான் நினைவு

ஆயின்
வரலாற்றினூடுணர்தலென்றால்..
பிணத்தைப் புணர்தல்
அல்லது
கோமா உடலுடன் முன்விளையாட்டு

இதனாற் தான்
நாலுபேரின்று நையாண்டி செய்யினும்
அவர்களோடொன்றாய்
களத்தில் கேட்ட கானங்களை
வெறிச்சோடிப் போயிருக்கும்
இற்றை வேளையில்
கேட்க நேருகின்ற போது

எச்சில் விழுங்க முடியாமல்
தொண்டை இறுகியும்
கண்ணை இமைக்க முடியாமல்
குளமாய் பெருகியும்
நெஞ்சுக்குள் ஓடும் நரம்புகளெல்லாம்
அறுந்த பல்லிவாலாய்
ஆகி விடுகிறது..