Monday, 22 October 2012

நீயில்லாத மழைக்காலம்..


கண்ணைத் திறந்திருந்தால்
காணாத காட்சி எல்லாம்
கண்ணையிமை மூடிக்
கதவடைக்கக் காணுகிறேன்

எண்ணங்களெல்லாம்
எழுந்தெழுந்து சிறகடித்து
வண்ணமாய் எமைக் கடந்த
வழிகளிலே பறக்க வைக்கும்
தன்மை இம்மழைக்குத்
தானுண்டு, உன்னிமையை
என்னிமையால் மூடி
இதழ் கண்ட இழுத்துறிஞ்சி
பொன்னுடலிற் பூந்தளிரின்
பூரிப்புச் சிவப்பூற
என்னடி.! என நகைக்க
இழுத்தணைத்துக் கழுத்துக்குள்
புரியாத மொழி முனகிப்
புதைப்பாயுன் புன்சிரிப்பை

அறிவேன் நான் ஆனாலும்
அறியேனாய் அடம்பிடிக்க
பொறுக்கி! என மார்பில்
பூத்திடுவாய்!,மழை வீழ்ந்து
தெறிக்கின்ற துளியில்
தெரியுதடி அக்காலம்
விரியுதடி காட்சி வெறும் அறைக்குள்
முடியாமல்
எரியுதடி தாபம் என்பெல்லாம்
விழி ததும்பிச்
சொரியுதடி கண்ணீர் சுட்டபடி
இதையந்த

அப்பாவி மழை பாவம்
அறியாமல் பொழிகிறது
எப்பாடும் அறிந்த என்
இதயத்தின் ஆண்டவரே
இப்பாவியை நீவிர்
ஏதேனும் செய்து கொள்ளும்
தப்பேதும் தெரியாத மழைக்குத்
தயை கூர்ந்து
அப்பம் கொடுத்து அருள் சொரிந்து
மனம் நிறைய
பாவ மன்னிப்பருளும்
பரமே..!

Wednesday, 17 October 2012

வடலிகளின் வாழ்வெண்ணி..


எம் மண்ணின் குறியீடே
எப்படி நாம் மெதுமெதுவாய்
இம் மண்ணில் இடிபட்டும்
எழுந்தம் எனச் சொல்லுகின்ற
கம்பீர வரலாற்றின் காட்சி உரு வடிவே!

பறந்தடித்த ஷெல்லுக்கும்
பாய்ந்து வந்த குண்டுக்கும்
அறுத்து உன்னுடலை
அரணாகக் கொடுத்தாய் நீ
கறுத்த உன்னுடலுக்குள்
கசிகின்ற கனிவை நாம்
கள்ளாய், கிழங்காக
கண் போன்ற நுங்காக
அள்ளிக் குடித்தும் அடங்காமல்
உனை மேலும்
பணியாரம், பினாட்டென்று
பசி போகத் தின்றிருப்போம்
உனிலொடியற் புட்டாக்கி
உயிர்ச் சத்தைச் சேர்த்திருப்போம்

உயிர்த் தினவின் ஓர்மத்தை
உரமாகக் கொண்ட மண்ணில்
உயிராக, உடலாக
உனை முழுதாய்க் காப்பகமாய்
தாரை வார்த்த எங்கள்
தருவே! போர் மேகம்
ஆரைத்தான் இம் மண்ணில்
அழிக்காமல் விடவில்லை
பொழிந்தடித்த போர் மழையில்
பொசுங்கித் துடி துடித்து
அழிவடைந்த சனத்துக்குள்
அடங்குதடா உன் சனமும்

இழிவாய் எமையின்று
எல்லோரும் பார்த்தாலும்
அழிவின் சாம்பலினை
அப்பியபடி மெல்ல
வளருதற்கு எத்தனிக்கும்
வடலிகளின் வாழ்வுக்கு
உளமாரக் கை கொடுப்போம்
ஓர் விதையை நட்டிடுவோம்
எழுவோம் நாம் என்பதனை
எண்ணி...

Monday, 1 October 2012

அழிக்கப்படும் சாட்சியங்கள்..


அலைக் கரங்களை
மார்பில் அடித்தடித்து
உரக்க அலறியது கடல்
அதன் குரலில்
இத்துணை ஆண்டுகாலக் கனவுகளும்
கண் முன்னே கலைந்து போய்
கந்தகப் புகையான ஏக்கம்
கப்பிப் போய்க்கிடந்தது

தட்டிக் கேட்க யாருமற்ற தைரியத்தில்
அதன் கறுத்த மேனியில்
சன்னங்களைக் கொட்டிப் பொழிந்து
கூத்தாடியது நிலவு

வான வல்லாதிக்கமோ
தன்னால் தீட்டப்பட்ட திட்டம்
தீரும் வரைக்கும்
ஏனிதென்று கேட்க எவரையும் விடாமலுக்கு
அடர்மெளன ஒலியால்
அனைத்தையும் மூடியது

இரவுப் படுகொலைகளின்
சாட்சிகளும், எச்சங்களும்
வெண் நுரைகளாய் அடைந்து போய்க்கிடக்கிறது
கரை முழுவதும்

மாபெரும் அவலப் பிரளயம்
அடங்கிய அதிகாலையில்
எதுவுமே தெரியாதது போல்
எழுகின்ற வெய்யோனால்
தேடி அழிக்கப் படுகின்றன
அத்தனை சாட்சியங்களும்

மீண்டும்
இருளத்  தொடர்கிறது
இரவுப் படுகொலைகள்
புலர
அழிக்கப் படுகின்றன சாட்சியங்கள்

ஆனாலும்
கடல் வற்றிப் போகாதென்ற
காலப் படிப்பினையில்
உடலைச் சுமக்கிறது
உயிர்..