Sunday 26 February 2012

ஓடிப் பறக்கிறது காலம்..

கண் முன்னே காலம்
ஓடிப் பறக்கிறது
நேற்றுத்தான் பள்ளியால்
வந்தது போல் இருந்தாலும்
பதினைந்து வருடங்கள்
பறந்தோடிப் போயிற்று,

துப்பாக்கிக் குண்டாயும்
ஷெல்லாயும் எமைக் கடந்தும்
நிக்காமல் வீசும் நிகழ் காற்றில்
எம்மோடு
ஒன்றாய் உடன் வந்த
எத்தனையோ தோழர்கள்
விடை கூடச் சொல்லாமல்
விதையாகிப் போனார்கள்
காற்றுக்குள் சிக்காத காற்றாக
எப்படியோ
கூற்றுவனைச் சுழித்தோடித்
திரிந்தோம், இதற்குள்ளே

நீர்வேலி அரியாலை மீசாலை இப்படியே
ஊர் வேலி எல்லாம் உரஞ்சிக்
கை நிறைய
காதல் வழிந்தோடத் திரிந்திருந்த
காலமெல்லாம்
கைகளுக்குள் சிக்காத காற்றாகப்
போயிருச்சு

மண்ணுக்காய் இப்படியோர்
மல்லாட்டம் நடக்கையிலே
சிண்ணுக்காய் வாழ்ந்து
சிதழூறிச் சாகாமல்
புண்ணாகிப் போயெங்கும்
புரையோடிப் போய்க்கிடக்கும்
மண்ணுக்கு நாமும்
மருந்திடுவோம் என எண்ணி
அவன் கண்ணுக்குள் அகப்பட்டு
கதி கலங்கிப் பொறி சிதறி
விண்ணுக்கு அவன் என்னை
அனுப்பியும் விண்ணோர்கள்
உள்ளே விட என்னை ஏற்காத
காரணத்தால் தமிழ் நாட்டு
மண்ணுக்கு வந்து
தவண்டோடிச் சிறை இருந்து
எப்படியோ..
அரை றாத்தல் பாண் வாங்க
ஆறு கிலோ ஆடையினை
சிரைச்சிழுத்துக் கட்டிப் போம்
சிங்கார தேசமொன்றின்
நரை பிடித்த தீவொன்றில்
நானொதுங்கிக் கிடக்கின்றேன்..

விறைக்கக் காற்றடிக்கும்
அட்லாண்டிக் கடலலை போல்
விறைத்துத் தலை இறுக
அடிக்கிறது நினைவலைகள்

ஐந்தாண்டோ இல்லை அதன் பிறகும்
ஐந்தாண்டோ
எப்போது ஊர் போவேன்
என்பதுவே எனக்கிருக்கும்
இப்போதைக்கான ஓர் கேள்வி
என்றாலும்
எப்பேனும் ஓர் நாளில் நான்
போகையிலே ஓடி வந்து
வா தம்பி என்று வாசலிலே
கொஞ்சுதற்கு
அப்போது யார் இருப்பார்
என்பதனை எண்ணுகையில்
மூச்சுத் தீப்பற்றி முட்டி உள்ளே
மூசுகுது..!

விமான நிலையத்தில்
விடை சொல்ல வாயெடுக்க
அம்மா அழுதழுது சொல்லிற்று!
சரி தம்பி
எனக்கும் நல்ல வயசாச்சு அப்பாவும்
தனக்கும் ஏலாம இருக்கெண்டு
சொல்லுகிறார்
இனி எப்ப பாப்பேனோ தெரியாது
ஏதுமெண்டால்
கொள்ளியினை வைப்பதற்கும்
கூட யாரும் இல்லையடா..!
பிள்ளையப் பாப்பம்
நாம் இருக்கு மட்டும், நீ கவனம்!
போய் வாடா என்றன்று
போதித்த வார்த்தை எந்தன்
தொண்டைக்குள் முள்ளாக
இன்னும் துளைக்கிறது,

இனி மேலின் ஓர் நாளில்
ஊர் போனால் அப்போது
பணப்பையைப் பார்க்காமல்
பசிக்கிறதா எனக்கேட்டு
பிடரியினை வருடிவிடும்
பேரன்பு இருக்காது

இருந்திருந்து பார்த்தவளும்
இளைத்திளைத்து மனம் களைத்து
இவனோடு வாழ்வில்லை
என்றெண்ணிப் போயிருப்பாள்
செழித்து வளர்ந்திருக்கும்
மகனுக்கும் என் நினைவு
புழித்துப்போய் மெல்ல
மறைந்திருக்கும்!

மற்றபடி
நண்பர்கள் பெரும்பாலும்
திக்கொன்றும் திசைக்கொன்றும்
கண் பார்த்துப் பேசேலாக்
காலத்தில் இருப்பார்கள்
நல்லூர் நம்முடைய செனற் இன்றி
வெறித்திருக்கும்
எங்கேனும் கள நண்பர்
வீடென்று கண்டு விட்டால்
அங்கேயும் படமும் மாலையுந்தான்
மீந்திருக்கும்
பெற்றோரின் துணையின்
பிள்ளைகளின் பெரு மூச்சே
சுற்றி வந்து என்னைச் சூழும்
சூக்குமமாய்
அவனோடு நான் நின்ற
அழகான காலங்கள்
எனைச் சுற்றி அப்போது ஓடும்
இயலாமல்
தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழ்வேன்
சொல்லேலா..!

காதலியோ
பிள்ளை குட்டிகளைப்
பெற்றாலும் ஊனுடம்பு
பெருத்துத் தசை போட்டுக்
கொழுத்தாலும் அப்பொழுதும்
அழுத்தம் நிறைந்த மனசோடு
இப்பொழுதும்
முகம் கூடக் காட்டமுடியாது
என்றிடுவாள்

பேரின்றி
கல்லாலும் மண்ணாலும்
கட்டி இருந்தாலும்
கனிவோடும் வாழ்கையினால்
உயிர் பெற்ற வீடின்று
சொல்வதற்கும் சுகிப்பதற்கும்
யாருமின்றி வெறித்திருக்கும்

சொல்லாத கவி ஒன்றின் சுவையாய்
ஊர் நினைவை
என்னுள்ளே எக்கி வைத்தபடி
போய்ப் பார்த்தால்
நில்லாத நீள நதியாய் எல்லாமே
சொல்லாமல் நெடுந்தூரம் ஓடி
மறைந்திருக்கும்!

எல்லாமே இழந்தாலும் இறைவ!
எந்தனுக்கு
பிறந்த இடத்திலே இறந்திடக்
கிடைக்குமோர்
அருந்தவ வாழ்வினை
அருளிடக் கேட்பேன்
அதையும் ஆண்டவன் விதி என
மறுத்தால்
ஏது தான் செய்குவேன்
என்னுயிர்த் தோழா..?

No comments:

Post a Comment