Monday, 17 April 2017

போர் தின்ற வாழ்வு..

இப்படியாய் ஆகுமென்று
அறிந்திராத அந்த மாலையில்
திடீரென அறைக்குள் வந்த நீ
காதல் ததும்ப அவனைக்
கட்டி அணைத்தாய்

அணைப்பின் கதகதப்பு ஆறுமுன்னர்
கதவு தட்டும் ஒலி
உள்ளே நுளைந்தவர்கள்
கைத்துப்பாக்கியை அவன்
கழுத்தில் அழுத்திய போது
என்ன செய்யலாமென நீ
எண்ணுவதற்குள்,
தாமதிக்கும் ஆபத்து தவிர்க்க
கடுவனைப் பார்த்துக்கொள் என்றபடி
உன் கையை இறுக்கி அழுத்திவிட்டு
இறங்கிச் சென்றான்

இப்படியாய் போய் மறைந்தோர்
எப்பொழுதும் வந்ததில்லை,
எல்லாம் முடிந்துவிட்டதென
இருந்த நாளொன்றின் நள்ளிரவில்
உயிருள்ள பிணமாயவன் உன் முன்னே!,
அப்போதில் எவரிடமும் இருக்கவில்லை
சொற்களும், நேரமும்,
ஊழைக் காற்றைக் கிழித்தபடி
பறந்ததவனோடு படகு.

பின்னரவன் மீண்டும்
கம்பி வரிந்த இருளறையிலெனவும்
பின்னரும், பின்னரும், மீண்டுமெனவும்
நீ அறிந்தபோது
ஆண்டுகள் சில ஓடிப் போயிருந்தன

முன்னொரு நாள்
நீயும் அவனுமாய் புஸ்பித்த
அந்த அழகிய மலரின் இதழ்கள்
ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு பருவங்களிலும்
ஒவ்வொன்றொவ்வொன்றாய்
உதிரத் தொடங்கியது
இதுவும் ஒரு மாலை நேரம் தான்
விதி சொற்களிற் சுழன்று
பலமாக அடித்த காற்றொன்றில்
காம்பும் கழன்று வீழ
அவனும் களைத்துப் போனான், நீயும் தான்

அத்துணை காதலோடும், கனவுகளோடும்
சந்திப்போமென அவன் உனக்கன்று
சொல்லிச் சென்ற வார்த்தைகளை
மாதங்களும், ஆண்டுகளும், நேரமும்
எப்படிக் குரூரமாய் கொன்று விட்டன?

போர் தின்றவற்றுள் இப்படியாகத்தான்
சந்திப்பதற்கென்றே விடைபெற்றோர்
சந்திக்க முடியாமலும்
சேர்வதற்கென்றே பிரிந்தோர்
சேர முடியாமலும்..


Tuesday, 4 April 2017

நதி தீரம்..

திரும்பிச் செல்ல விரும்பிய போது
மீள் முடியாத் தூரத்தில் வாழ்வு

இலை துளிர்த்த காலம்
செம்மை படர்ந்த பசுமையாய்
காலைச் சூரிய ஒளிக்குத் தளதளத்து
எத்துணை அழகாய் இருந்தது

குருத்தகண்டு இலையாகி
மண்ணுக்கு நிழல் கொடுத்த
பெரு மரத்தின்
ஆயிரமாயிரம் இலைகளுள் ஒன்றாயும்,
அந்தக் காலமும் ஓர் கனவென
பார்த்திருக்க கண் முன்னே
கலைந்து போனது

உயிருக்கு உடற்பாரம் கனப்பதென
காம்புக்கு இலை தோன்றும்
காலமிது,
ஆயிரம் பருவங்கள் மாறினும்
வீழ்ந்த இலை முளைப்பதில்லை
வேறொன்று தான் முளைக்கும்

இந்தக் காற்றுக்கோ இல்லையெனில்
இறங்கி வரும் மழைத்துளிக்கோ
எந்த நேரத்திலும்
காம்பு தன் பிடியைக் கழற்றலாமென
காத்திருக்கும் காலமிது

கண்ணுக்குத் தெரியாத உயிரெனல்
கடைசியாய் அவிழும்
கைப்பிடியளவு காற்றுத் தான்.

வாழ்க்கை கிடைத்த போதில்
வாழ நினைக்கவில்லை
வாழ நினைத்த போதில்
வாழ்க்கை கிடைக்கவில்லை
எனினும்
எண்ணிக் கவலையுற ஏதுமிலை
இது நியதி

கைகாட்டி விடை சொல்லி ஆயிற்றா
திரும்பாதே
அந்தா தெரிகிறதுன் நதி தீரம்
அவ்வளவே..