Wednesday, 26 June 2013

அந்தராத்மா..

எல்லாம் முடிந்துவிட்டதென்று
தெரிந்த பின்னர்
இத்தனை வருடப் போராட்டத்தின்
இறுதி ஆசையாக
குண்டுகளால் துளைக்கப்பட்டு
இந்த மண்ணில்
தன்னுடலம் விழும் போது
வாழ்ந்த மண்ணை
இரு கைகளுக்குள்ளும்
ஒவ்வொரு பிடி இறுகப்பற்றிய படியும்
அகலக் கண் விரித்து
ஆசை தீர
தன் தேசத்தின் வானத்தைப் பார்த்தபடியும்
வீரச்சாவு நிகழ
அவன் விரும்பியிருந்தான்

ஆனால்
கைகள் பின்புறமாகவும்
கண்கள் துணியினாலும்
இறுக்கமாகக் கட்டப்பட்ட படி
கடைசி வரை
அவன் ஆசைகள் எதுவும்
நடக்கவே இல்லை..
தன்னிலை அறுதல்..

விலங்கு, இருட்டறை
உயிர் குதறும் வதை
அவனால் தாங்க முடிந்தது

ரோந்துக் கப்பல், சுடுகலன்,சிதைந்த உடல்
சிதையாத மனம்
கடலைத் தாண்டி இருந்தான்

மீண்டும் விலங்கு, வதை, சிறை
உயிரில் தினவு
கண்டம் கடந்தான்

அடர்ந்த பனி, அறியாத தேசம்
அடரிருட் சிறை, எப்படித்தானோ?
ஆனால் எழுந்து வந்தான்

தனித்த தீவு, முடியாத் தடுப்பு
நீளும் காலம், தொடரும் பிரிவு
நீண்ட தனிமை ஆமாம் மிக நீண்ட,
வெறுமையுந்தான்.

எதிலும் தடுமாற்றம்
எழுத்துகள் மறந்து போகிறது
கத்தியைப் பார்த்தால்
கழுத்தை அறுக்கவும்
கடலைப் பார்த்தால்
பாய்ந்து குதிக்கவும்
ஒருவேளை
மனதும் சிதையத் தொடங்கி இருக்கலாம்
எவ்வளவைக் கடந்திருந்தாலென்ன
திடீரென ஒருநாள் நிகழலாம்
தன்னிலை அறுந்து
தற்கொலை..Tuesday, 11 June 2013

வேண்டாம் போகாதே..

இறந்தே தான் போனாலும்
ஏனென்று கேட்பதற்கு
மருந்துக்கும் கூட ஒரு
மனிதரில்லா இத்தீவின்
எங்கோ ஓர் மூலையில்
இருட்டறையில் உன்னுடைய
அங்கங்களைப் புனைந்து
அளைந்தளைந்துயிர் கொடுத்து
வாழ்ந்திருந்த காலத்தை
வாழுகிறேன், இத்தருணம்
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அடரிருளை மெளனம்
அணைத்துக் குலவுகையில்
தடவியபடி மார்பில்
தவழ்ந்து முடிகோதும்
உன்னுடைய விரல்களுக்குள்
ஊர்ந்து, விரல் கோர்த்து
என்னுடைய விழிகளினை
ஏறிச்செருக வைக்க
என்னாலே முடிகின்ற
இவ்வேளை எனை விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

காதின் மடற்கரையைக்
கவ்வியுன் இதழிழுக்க
மோதி வெள்ளம் போல்
மூண்டுவரும் கூச்சமொன்றில்
ஆதிக் காதலின்
அடையுள்ளிருந்து சொட்டும்
வேதியற் தேனின்
வெப்பத்தில் மயிர்க்கால்கள்
ஓதி விட்டவை போல்
உடல் விறைத்து எழுந்து நிற்க
பாதியிலே உதறியெனைப்
பரிதவிக்க வைத்து விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அரூபக் காலத்தை
அறுத்தறுத்து உட்குடைந்து
சொரூபத்தைக் கண்டடைந்தேன்
சுகவலியே! என்னுடைய
விழிக்கடலில் உன்னுடைய
விம்பத்தை நீந்தவைக்க
வழிவேறறியேனென் வாழ்வே!
என் மூச்சு
உன்மூச்சை உரைபெயர்க்கும்
உச்சத்தில் எனை நீங்கி
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே..