Sunday, 12 April 2015

ஒற்றைப்பனையாய் வாழ்க்கை..

ஊரின்கோடி மயானத் தீயே
உள்ளே மனசைக் குடையும்
ஊரே எரிந்து மயானமானால்
உறக்கம் எப்படி முடியும்?

வாழ்வினிற் சோகம் வந்திடை போனால்
வலிகள் தாங்கிட முடியும்
வாழ்வே சோகம் என்பதாய் ஆனால்
வாசல் எப்படி விடியும்?

வறண்ட நிலத்தில் வாழும் உயிர்கள்
வானைப் பார்த்தே ஏங்கும்
வானும் பொய்த்துப் போனால் அவையும்
வாழ்வினை எப்படித் தாங்கும்?

எல்லாம் தீய்ந்தும் எஞ்சி நிற்கிற
ஒற்றைப் பனையாய் வாழ்க்கை
இழந்தாய் எல்லாம், தெரிந்தும் இன்னுமேன்
அணைக்கலை என்னை சாக் கை..?

Tuesday, 7 April 2015

நினைவெனும் நெருஞ்சி..

பின்னி மடித்துக் கட்டிய
நெளி முடியும், இடுப்பிற் பட்டியும்
கானக நிறத்தில் ஆடையுமாய்
கடைசியாக உன்னைப் கண்டிருந்தேன்

மீனைக் குறிபார்க்கும்
கொக்கின் கவனத்தோடு
வரைபடமொன்றில் மூழ்கி இருந்தாய்
அதிர்வு வந்த திசைநோக்கி
வெடுக்கெனக் கழுத்தைத் திருப்பும்
மரங்கொத்தியாய்
அருகே கடந்த என்னை
பாதாதி கேசமாய்
அவ்வளவு வேகமாய் அளந்தாய்

பூமலரும் ஓசையை
பூவுலகு உணர்வதில்லை ஆனால்
மெல்லென மூடித்திறந்து
ஆம்பல் மலராய்
உன் விழி அவிழ்ந்த ஓசை
என் செவிகளுக்குக் கேட்டிருந்தது

இரு வழியாய் பிரியுமுன்னான
காட்டிடை  வெளியில்
யானை லத்தி விலக்கி
குளத்தில் நீரள்ளக் குனிந்த போது
விரல் பட்டு
விரிந்தகன்ற நீர் வளையங்களில்
உன் முகந்தான் எனக்குப்
பூத்து மறைந்தது

மாலை விழுந்து மங்க
உதட்டை அவிழ்க்காத
ஒரு விதச் சிரிப்போடு
காட்டைக் கிழித்தபடி
ஒரு புறமாய் நீயும்
அருகப்பால் நானும் அணிகளோடு,
சில நாட்களின் பின்
திரும்பியவர்களில் நீயிருக்கவில்லை
காயப்பட்டிருந்தவரிலும்
காணவில்லையென்றானபோது
வங்கக்கடலில் மிதந்த கண்களுக்கு
வலுக்கட்டாயமாய் அணைகள் போட்டேன்

எதுவுமே நடவாதது போல்
அத்தனை வேகமாய் ஓடிப்போய் விட்டன
ஆண்டுகள்
ஆயினும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
திரும்பி வராத நீ வெள்ளியாயும்
திரும்பி வந்த நான் பிணமாயும்..


Thursday, 2 April 2015

நினைவோர் இறகு..

பனிக்காலம் கரைந்தொழுகும்
வசந்தமுன் மழைக்காலம்
இருள்வானத் தூவானம்
ஓர் மனங்கரைப்பான்
ஊசி இலைநுனிகளில்
தொங்கித் துமிக்கும் நீரை
என் இமைகளும் அப்படியே
பிரதி செய்கிறதா..?

வாழ்வோர் பறவைச் சிறகு
அதன் ஒவ்வோர் இறகும்
நினைவுகள்
நீண்ட பறப்பின் இடைவெளியில்
கழன்று வீழ்ந்தவை
மீண்டுமோர் இடைவெளியில்
முளைத்து விடுகின்றன

களைத்தோய்ந்த வேளையில்
ஆசுவாசமாய்
இறகுகளைக் கோதிவிடும்
பறவைச் சொண்டாய்
மனசு
நினைவுகளைக் கோதிவிடுகிறது

சாளரத்தின் இடைவெளியால்
கைகாட்டும் மரக்கிளையில்
சொண்டாற் சொண்டை
நீவிவிட்டபடி சோடிப் புறாக்கள்
விழி அந்தக் காட்சியை
விழுங்கவும்,
புகைத்தலை நிறுத்திய
முதல்நாள் வாயாய்
தவிக்கிறது ஏக்கத் தாபம்

பனி விழுந்தும் அது கரைந்தும்
மழை பொழிந்தும் அது வடிந்தும்
வெயிலடித்தும் அது தணிந்தும்
நீயின்றி வெறிதாய்
எத்தனை பருவங்கள்
எனைக் கடந்து போயிற்று
ஆயினுமின்னும் வானவில்லாய்
நாடியும் நரம்பாயும்
நாமிருந்த மழைக்காலம்
கூடிக் கிடக்குதடி வானில்..