Thursday 23 February 2012

பயணத்தின் நாட்கள்..

கண்ணிருட்டி வெண் பூச்சி
பறக்கிறது, கை கால்கள்
பல மற்று நடு நடுங்கித்
துவள்கிறது, மெதுவாக
எழுந்தெழுந்து வரும் மூச்சும்
இடையிடையே நின்று விட்டு
எழுவதுவும் வீழ்வதுமாய்
இருக்கிறது, விறைக்குமிந்த
குளிரினிலும் வேர்த்தொழுகி
நனைகிறது, உள்ளிழுத்து
மூச்சு விட இயலாமல்
எலும்பெல்லாம் விறைத்திறுகி
கொதித்துக் குடைந்தென்னைக்
கொல்கிறது

கால் வலிக்க
இழுத்திழுத்து நடந்தாலும்
எப்பேனும் ஓர் நாளில்
துளிர்ப்பேன் எனுமெண்ணத்
தூவான முகில்களெல்லாம்
கலைந்தென்னைக் கடப்பதனைக்
காணுகிறேன், இல் வாழ்வில்
அன்பும் அறனுமின்னும்
அப்படியே இருந்தாலும்
தெம்பும் திறனும் என்னில்
தீர்வதிப்ப உணருகிறேன்

வதை வீட்டில்
கூரிரும்பை ஆண்மைக்
குறிக்குள்ளால் அடிவயிற்றில்
இழுத்திழுத்துத் தள்ளி
இடிக்கையிலும், வாய் திறந்து
ஓர் வார்த்தை தன்னும் நான்
உதிர்க்காத கோபத்தில்
கன்னப் பூட்டுடைத்து
வாய் கிழித்துக் கேட்கையிலும்
என்னமோ தாங்க முடிந்தது தான்

இப்போது
பட்ட இடமெல்லாம்
பற்றிக் கொதித் துயிரை
வெளியேறு எனக்கெஞ்சி
விம்முவதும், பொறுக்காமல்
உடலின் கால்கள் முன்
உயிர் விழுந்து கும்பிட்டு
போக விடு என்னையென்று
புலம்புவதும் கேட்கிறது

காற்று வீசுவதாய்
கடல் அலைகள் எழுவதுவாய்
வீற்றிருந்த வாழ்வு
மிக இயல்பாய் பூ மலர்வாய்
தூக்கத்தில் என்னைத்
துறந்தால் மகிழ்வுடனே
திருப்பிப் பார்க்காமல்
செல்வதற்கு ஏற்றபடி
எண்ணப் பைகளெல்லாம்
எடுத்தடுக்கி வைத்துவிட்டு
பார்த்துக் கிடக்கின்றேன்
பயணத்தின் நாட்களுக்காய்..

No comments:

Post a Comment