Tuesday 7 February 2012

கொடுப்பனவு..

போகின்ற பாட்டுக்கு
போகட்டும் என வாழ்வை
ஆகின்ற படிக்கு அதன்வழியே
போட்டு விட்டு
வேகமோ எந்த ஒரு விவேகமோ
அணுகலின்றி,
சும்மா நடந்துலகை
சுற்றித்திரிந்த என்னை
பந்தம் ஒன்றில் இட்டுப்பதித்தாய்
நல்லூரா...
வண்டாடிப்பூமலரும் வடிவழகை
மகன் சிரிப்பிற்
கொண்டாடி மகிழ்கின்ற
கொடுப்பனவை எனக்களித்தாய்

சமதரையில் நடத்தலே இனிச்
சாத்தியமிங்கில்லையென
உமலாகிக்கிடந்த என் உள்ளத்தில்
எப்படியும்
வரம்பு பல கடந்தும் வாழோணும்
எனும் பிடிப்பை
மழலைச்சொல் உதிர்ப்பொன்றில்
மலர்வித்தாய், என்மண்ணில்
கால் நூற்றாண்டாகக் கண்டுணர்ந்து
வாழ்வறிந்து
பட்ட அனுபவத்தில் பதப்பட்டு
வாழ்வொன்றை
திட்டமிட்டு அமைப்பமெனத்
தெளிய, பொசிப்பின்றி
உயிர்பிரியும் மிகஅருகில் எனைஉரசி
மண்ணை விட்டு
பெயரளவில் பிணமில்லை என்றாக்கி
இடம் பெயர்த்தாய்,

அந்நிய வாழ்வொழுக்கும்
அணுவளவும் ஒவ்வாத
மண்ணின் வாசனையும் மனிதர்களும்
என்வாழ்வின்
இறுதியினை முடித்து வைக்கும்
வரந்தந்தாய், இருக்கட்டும்
கல்லூரிச் செம்பாடும்
கவிஅரங்க மேடைகளும்
நல்லூரின் ராவீதி நனவுலகும்
குருதியிலே
குளித்துத்தனை வளர்த்த
போர்க்கால வரலாறும்
தெரியாமல் என்பிள்ளை வளர்வானோ...
கதிர்வேலா...!

புரியாத வாழ்வும்
புதிர் நிறைந்து ஓடுகிற
தெரியேலாக்காலத் திருப்பங்களும்
ஒருவேளை
எரியாமல் விட்டுவைக்கும்
ஏழெட்டுக் கவிதைகளில்
என்கவியும் ஒன்றாக எஞ்சுமெனில்
அதன் அர்த்தம்
புரியாது விட்டாலும்
மகன் அதனைத் தன்பெயரின்
மரியாதைக்காகவேனும்
மடித்தெங்கோ வைத்திருப்பான்
உரிய காலம்வர உணர்வான்

அப்போதில்
தெரியவருவேன் நான்
அது போதும் இப்பேற்றை
அருள்வாயா நீ எனக்கு
வேலா..?

No comments:

Post a Comment