Tuesday 23 September 2014

ஒவ்வொரு குழந்தையிலும் நீ..

இம்முறையும் வெயில்
விளாசி அடித்தது
இலைகள் பழுத்து விழுந்தன
புற்கள் கருகிப் போயின
பின்னர் மழை
குருத்துகளும், பூக்களுமாய்
மரங்கள்
புற்களும் பசுமையாய்,
காற்றோடு குளிர் ஆரம்பிக்கிறது
மறுபடியும் குளிராடையைப்
போர்த்தத் துவங்கி இருக்கிறேன்
இப்படியாய்
பருவங்கள் மாறி மாறி
பல ஆண்டுகள்
ஆனால்
நீ தான் இன்னும் என்னிடம் வரவில்லை

இன்றும் கூட என்னைப் பார்த்து
கை காட்டிச் சிரித்துப் போன
அந்தக் குழந்தையின்
கண்களிலும் உன்னைக் கண்டேன்
இங்கு நான் காண்கிற
ஒவ்வொரு குழந்தையிலும்
ஏதோ ஒரு வடிவத்தில்
எப்படியோ நீ இருந்து விடுகிறாய்

அயர்லாந்தின்
லிவி நதி பாய்கின்ற கரையின்
நடைபாதையில் ஒரு கடுவன் குட்டி
தன் தந்தையின் தோள்களில் ஏறியிருந்து
எண் திசைகளுக்கும் கை காட்டி
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்
பேசும் கண்களோ சிரிப்போ
ஏதோ உன் சாங்கம் அவனிலும்

என்னையே அறியாமல்
என் தோள்களையும் நெஞ்சையும்
தடவிப் பார்த்த போது
நீயும் என் தோள்களில் இருந்தாய்
நிறையக் கேள்விகள் கேட்டாய்
எல்லாவற்றுக்கும்
நீண்ட நேரம் ஆசையாய்ப்
பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்
உன்னிடம் பேசி விட்டுத் திரும்பிய போது
அருகே நின்றிருந்த ஒருவர்
தன் அறிமுக அட்டையை என்னிடம் கொடுத்தார்
திருப்பிப் பார்த்தேன்
மிக நல்ல மனிதர் போல
ம்.. மனநல மருத்துவர்

நதி பாலத்தைக் கடந்து
நுரைத்துப் பாய்கிற சந்திக்கருகில்
வீதிக் கலைஞனொருவன்
பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்
அருகே அவனது சின்ன மகன்
அவ்வளவு அழகாகத் தலையாட்டி
ரசித்தபடி,
அந்தக் குழந்தையின்
உதடுகளும், இமைகளும்
உன்னதைப் போலவே இருந்தது
அந்த வேளையில் நான்
அவனுடைய தந்தையானேன்

அடம் பிடித்தபடியும்
துள்ளிக் குதித்தபடியும்
தன் தந்தையுடன் செல்கின்ற
ஒவ்வொரு
செல்லக்குட்டி மகனின் கண்களும்
என்னைப் பார்த்துச் சொல்கிறது
இந்தக் கணத்திலே
நீ தான் என் அப்பாவாக இருக்கிறாய்..