Thursday 23 February 2012

இருக்கின்றான் என்பதுவே..

வாழ்வே சோர்ந்தொடுங்கி
வதங்கிப் போய்க் கிடக்கிறது!

வாசலிலே வரும் போதே
வயிறு தட்டிப் பசிக்குதென்று
ஆசையாய்க் கேட்கின்ற
அருமை மகன் நேற்றிரவு
வீடு வரவில்லை!
ஏனென்றே புரியாமல்
வீதி எல்லாம் அழுதபடி
திரிகையிலே மூலை ஒன்றில்
சைக்கிளும்  செரும்பும் அவன்
கைவார் அறுந்த மணிக்கூடும்
கண்டெடுத்தோம் மற்றபடி
ஓர் முடிவும் தெரியாமல்
உறைந்திருந்தோம்..

போக்கறுந்த
சாத்திரத்தின், சகுனத்தின்
சாப்பிழைப்பு வாழ்விடையே
நெஞ்சினிக்கும் சேதி ஒன்று
நிகழ்ந்த தின்று!

பற்றை ஒன்றில்
உருக்குலைக்கப்பட்டு
உயிராடிக் கொண்டிருக்கும்
இருதயம் மட்டும்
இழுத்திழுத்துத் துடிக்கின்ற
இன்னும் உணர்வறுக்கா
இளம் பெடியன் சாட்சியத்தில்

இரண்டு நாள் முன்பாக
இன்னாரின் வதை வீட்டில்
காற் குதிகள் வெட்டுண்டும்
கை முறிந்தும் மூக்காலே
கொப்பளித்துக் குருதி வர
குளறி விழும் என் மகனை
தப்பிக்க முன்னர்
தான் கண்டதுண்மை
உண்மையென
ஒப்பித்தான் என்னிடத்தில்
உயிர் சிலிர்த்தேன்
உலகமெலாம்
என் வசமென்றானதுவாய்
உணர்ந்தேன்,

வேங்கடவா!
வைத்த நேத்தி வீண் போகவில்லை
வருடங்கள்
பொய்த்தோடி நான்கைந்தாய்ப்
போனாலும், புத்திரனை
கண் முன்னாற் காணாத
கவலை எனைச் சுட்டாலும்
தலை பிடித்து மூக்கிழுத்து
எண்ணைக்குள் தோய்த்தெடுத்து
பார்த்துப் பார்த்து நான்
வளர்த்து விட்ட மகன் உடலம்
கீலம் கீலமாய் கிழிந்து
சிதைவடைந்து
அம்மா! என அவன் அலறும்
குரல் உணர்ந்து என் வயிறு
உள்ளுக்குள் சிதறி
ஒன்று மற்றுப் போனாலும்

யாரேனும் எங்கும்
என் மகனை
அவர்கள் இன்னும்
நார் நாராய்க் கிழித்துப்
போடுகின்ற செய்தியினை
எந்தனுக்குச் சொல்லுங்கள்
மகிழ்ந்திடுவேன்! ஏனென்றால்

’இருக்கின்றான்’ என்பதுவே
இப் பிறப்பில் எந்தனுக்கு
அப்பாவித்தனமான
ஆறுதலாய் ஆகட்டும்..

No comments:

Post a Comment