Friday 9 November 2018

கணச்சூடு..

காலத்தின் கைபட்டுக்
கரைந்துவிடாப் பொருளேதும்
ஞாலத்தில் இருக்கிறதா? காயத்தில்
கணப்பாய் இருக்கின்ற வெப்பம் போல்
உலகிலுள்ள
அத்தனை பொருள்களிலும்
அதனளவுக்கேற்ற படி
பற்றி இருக்கிறதா வெப்பம்?
ஆயின் காலமெனல்
உள்ளேறி வெப்பம் வெளியேறும்
இடைவெளியா..?
தகிக்கிற தேகம் தணிகிற போது
முடிந்து விடுவதா காலம்?

கணச்சூடா காலத்தின் அளவு கோல்..?

எதுவுமில்லை கேளடா..

ஆண்டு என்பதேதடா
அடுத்த நாளும் ஏதடா
நீண்டு செல்லும் நினைவு என்னும்
நீளவீதி தன்னிலே
நேரம் காலம் அற்று வீழ
நித்தியம் பிறந்த பின்
மாண்டுபோதல் ஏதடா
மலர்ந்து தோன்றல் ஏதடா

வாழ்க்கை என்பதேதடா
வசந்தமென்பதேதடா
பாழும் காலம் பாதி நாளை
பற்றியே எரித்த பின்
மாளும் போதும் மனதுரைக்க
மனிதரற்றுப் போன பின்
நாளை என்பதேதடா
நடக்கும் என்பதேதடா..


வைரம்..

உருவாகும் வரை
மறைவாக இருக்கும் கரிமம்
வைரமாகும்..


தான் தோன்றி..

மகன்
மீனை மட்டுமே வரைந்தான்
கடல்
அதுவாகப் பெருகியது

அவன்
இலையை மட்டுமே வரைந்தான்
வனம்
தானாக வளர்ந்தது..

தேசத்தின் விதி..

உயிர்கொடுத்து முயன்றாலும் உரியநாள் வாராமல்
பயிர் நிலத்தைப் பிளக்காது - எயிலேறி
கொடியேற்றினாலும் குறித்துள்ள நாளுக்கே
விடியுமாம் தேசத்தின் விதி


ஏன் வாழ்தல் இன்னும்..?

கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனிலும் கொடிது
அன்புக்கேங்கல்
அதனிலும் கொடிது
அதை உறவெள்ளல்
அதனிலும் கொடிது
இழக்க எதுவுமே இல்லையென்றான பின்
இன்னும் மூச்செழுந்திறங்குதல் தானே..

பலம்..

பலமே உலகத்தின் ஒழுங்கும், நீதியுமாம்
பலமே ஓரினத்தின் வரலாறும், வெற்றியுமாம்
பலமே எமக்கான சூரியனாம், எழுகதிராம்
பலமே என்றைக்கும் எம்முடைய விடுதலையாம்..


உணர்த்தல்..

பூக்கள் நிறைந்த வனத்தையும்
இலைகள் உதிர்ந்த மரத்தையும்
பசுமை செழிக்கும் நிலத்தையும்
காய்ந்து வெடித்த குளத்தையும்
பார்வைக் கதிரில் பட்டுத் தெரியும்
உலகின் அத்தனை படைப்பையும்
எப்படிப் பார்ப்பது என்கிற படிப்பை
வாழ்க்கை அனுபவம் மட்டுமே அல்ல
ஓர் சிலவேளை
ஒற்றைக் கவிதையின் ஓரிரு வரிகளே
உணர்த்தி விட்டுச் செல்லுது நண்ப..

எழுதி வைக்கப்பட்டவை..

மேட்டிலும் பள்ளத்திலும்,
எழுந்திறங்கி வளைந்து செல்லும் விரைவோட்டத்திலும்,
எதுவுமே ஆகாமல்
நதியில் நீண்டு  பயணித்த நீர்க்குமிழி
ஓர் திருப்பத்தின் மூலையில்
மென்மையாய் வீசிய குளிர் தென்றலுக்கு
படாரென உடைந்து போவதில்லையா

அப்படித்தான் எல்லாமும்..


அடைவேன்..

கையில் மின்மினி
திசைதெரியா அடரிருட் காடு
ஓர்நாள் இலக்கடைவேன்..

புல்லாங்குழல்..

உதட்டில் உதட்டைப் பொருத்தி
நாத வளைவுகளில்
எங்கெங்கு எது தேவையோ
அங்கங்கு விரலை ஊர விட்டு
உயிர் மூச்சை ஊத
உன்மத்தமாகி உருகி
அமுத இசை சொட்டி சிலிர்க்கிறது

புல்லாங்குழல்..