Monday, 9 March 2015

உறைந்த காலம்..

தொடுவானக் கரையைத்
தொட்டுவிட எத்தனித்து
எட்டியெட்டித் தினமும்
ஏங்குகின்ற கடலலையாய்
தாபம்,

உடைந்திறந்த காலத்தில்
உடைந்தறுந்த முகங்களுடன்
மேலெழுந்து வரமுடியா
மிகு ஆழக் கிணற்றுக்குள்
ஆசை,

வரவே வராத
மழைக்காலம் பார்த்தேங்கி
கடைசி நீர்த்துளியைக்
கைகளுக்குள் பொத்தியுள்ள
கற்றாளைப் பெருமூச்சாய்
காமம்,

வாழ்வே கனவான வலியில்
புலன் சிதறி
கீறலை மறந்து விட்டோன்
கிறுக்கலில் சாம்பலாய்
ஊறி வந்ததிந்த உரு..

அந்தியேட்டி ஏவறை..

வந்தான் வாழ்ந்திருந்தான் அவ்வளவே
போன பின்னும்
வாழ்வான் என்பதெல்லாம்
வாய்குதப்பும் வெற்றிலை தான்
அந்தியேட்டி ஏவறையாய் அதுவும் போம்
பின்னரென்றோ
பிள்ளை ஒருவேளை
பின்னுள்ள பெயருக்காய்
எண்ணலாம், அதுவும்
மழைப்பாட்டம் ஓய்ந்த பின்னால்
குழையாலே வடிகின்ற நீர்..

காத்திருந்து பழகல்..

காலம் எனக்குக் கற்பித்ததொன்றே தான்
காத்திருத்தல், மூச்சு
கைகாட்டி எனை விட்டு
பார்த்துக்கொள் உனையென்று
படலையைச் சாத்தி விட்டு
போகின்ற வேளைவரை
பொறுமையாய்க் காத்திருத்தல்

கையறு நிலையும்
கை விரித்து பிடரியிலே
விரலூர வருடி
விடைபெற்றுச் செல்கையிலும்,
எச்சிலைக் கூட
இறங்கவிட ஒண்ணாமல்
இறுகிப்போய்த் தொண்டை
இரும்பாய்க் கிடக்கையிலும்,
காட்சிகள் மெதுவாய்க்
கலங்கி, ஊற்று வழி
நீர்கரைந்து இமை தாண்டி
நெஞ்சில் விழுகையிலும்
காத்திருத்தல், ஏனென்றால்
என்றைக்கும் இவ்வுலகில்
மெய்ம்மை காத்திருக்க வேண்டும்..

பட்டவனே அறிவான்..

உயிர் கருகித் துடிதுடித்தும்
உடல் சிதைந்து தடதடத்தும்
ஓர் வார்த்தை சொல்லாமல்
உள்ளுக்குள் விழுங்கியது
பனி கொட்டும் தீவொன்றில்
பரதேசி ஆவதற்கா?

வாழ்வதற்கு வழி இருந்தும்
வாசல்கள் பல திறந்தும்
சலுகைக்குத் தலைசரியேன்
என்றன்று நடந்ததெல்லாம்
ஏன் நடந்தாய் வீணென்று
இன்றிவர்கள் கேட்பதற்கா?

என்னை விடு போகட்டும்..,
எத்தனை பேர் தம் வாழ்வை
அப்பிடியே கையிலள்ளி
ஆகுதியாய் வார்த்ததெல்லாம்
அழித்தவனோடு கூடி
ஆரத் தழுவுதற்கா?

வென்றால் மட்டுந்தான்
விடுதலைப் போராட்டம்
நன்றென்ற உந்தன்
ஞாயம், நியாயமில்லை
கன்றுகளை இழந்தலறும்
கண்களினைக் கண்ட பின்னும்
பசு தேடிப்பரிதவிக்கும்
பாலகவாய் பார்த்த பின்னும்
அசையாத உன்னெஞ்சின்
அழுத்தம், அழித்தோர் முன்
மசிவதன் மர்மந்தான்
மயிரளவும் புரியவில்லை..!

உன் வீட்டில் நடந்திருந்தால்
நீ பட்டுச் சிதைந்திருந்தால்
இன்றைக்கு நீ பேசாய் இணக்கமென,
ஏற்கின்றேன்
மறதியும் வாழ மாமருந்து தான்
அதற்காய்
அறணையாய் எப்படி
ஆகலாம் தோழனே..