அம்மாவின் முந்தானைக்குள்
புகும் குழந்தையென
பசுமையில் நுழைந்தேன்.
இன்றைய விடியலில் இதழவிழ்ந்த பூ
ஆயிரம் மாரியில் நனைந்த தண்டின்
பாசியேறிய தோளில் சாய்கிறது.
அடர்கிளைகள் போர்த்திய இருள்
அகல்விளக்கில் பிடித்த
கண்மையாய்க் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது,
தொட்டேன்
ஊழிகளாய் உறைந்த அமைதி
விரல்நுனியில் ஒட்டிக்கொண்டது.
இலைகளின் உள்ளங்கைகளில்
எண்ணற்ற நுண்வாய்கள்
இப்போதுதான் சரிந்த வேங்கையின்
இறுதி மூச்சை உறிஞ்சி
சினைமானின் வயிற்றில்
சுருண்ட மறிக்கு
உயிர்ப்பாய் ஊதுகின்றன.
இலுப்பைப் பொந்தில்
சேற்றால் சுவரெழுப்பித் தானே அடைபட்ட
இருவாச்சிப் பேடைக்கு
ஒற்றை வெடிப்பினூடே
அத்திக்கனி ஊட்டுகிறது சேவல்.
வலசைப் பறவைகள் குடிக்கூலியாய்
வைத்துப்போன பாடல்கள்
தரையிறங்காமல் காற்றில் அலைகின்றன.
கணக்கிலாப் பின்பனிகள் விரித்த
சருகுப் படுக்கையில்
அழையா விருந்தினனாய் அமிழ்கிறேன்,
ஆழத்தில் நொதிக்கிறது காலம்,
புளித்த பனங்கள்ளின் மணம்
மூக்கை அறைகிறது.
ஆற்றின் மணிக்கட்டைப் பற்றி
சித்தனாய் நாடி பார்த்தேன்,
வளியாய், அழலாய், ஐயமாய்
அதிர்கிறது மலைகளின் நெஞ்சு.
கதிரெட்டா ஈரத்தில் முதிய தாய்மரம்
காளான் இழைகளின் வழியே
கன்றுக்கு முலைசுரக்கிறது.
முதற் துளி புழுதியை முத்தமிட்டதும்
புதையுண்டோரை உச்சரித்தபடி
மண் கமழ்கிறது,
வீழ்ந்த தேக்கின் பிணத்தில்
நூறு முளைகள் சோம்பல் முறிக்கின்றன.
பாட்டி யானையின்
நினைவு வரைந்த தடத்தில்
பேத்திகள் அடிபிசகாமற் செல்கின்றன,
அந்தச் சுவடுகளில் தேங்கிய மழைநீரில்
குட்டி வானம்
தலைப்பிரட்டைகளை ஈனுகிறது.
முகிலின் நிழல் தழைக்கூரையின் மேல்
தொல்விலங்காய் மேய்கிறது,
கொம்பிடுக்குகளில் கசியும் வெயில்
பொற்காசுகளாய்ச் சிதறுகிறது
மறக்கப்பட்ட யவன வேந்தனின்
முகம் பொறித்தவை.
மூங்கில்கள் உரசி மோதும் ஒலியில்
தினைப்புனம் காத்த குறமகளின் தட்டை
இன்னும் கிளி ஓட்டுகிறது.
அவள் சுற்றத்தின் பெயர்களை
எந்தப் பதிவேடும் அறியாது,
எனினும் தேனீக்கள்
அவர்களின் புகையை இனங்காணும்.
காக்கையின் எச்சம் சுமந்து வந்த
அரசம் விதை
கற்றளியின் கீறலில் பொறுத்திருக்கிறது,
என்றாவது அதன் வேர்கள்
கோபுரத்தை மடியிலேந்தித் தாலாட்டும்.
சல்லிகள் இறுகத் தழுவிய
சுடுகளிக் கருப்பையில்
முழந்தாள்களை மார்போடு ஒடுக்கிய எலும்புகள்
பிறவாத மகவின் தோரணை.
அவற்றின் சுண்ணத்தைப் பருகி
உச்சியில் மஞ்சட்சரம் சூடுகிறது கொன்றை.
நாவைத் திறந்தேன்,
சொல் துளிர்க்கவில்லை.
படர்கொடியின் சுழித்த முனையில்
ழகரம் மட்டும் ஊசலாடுகிறது.
நெடுங்கோடு கிழிக்குமென்று
எம் எழுத்துகளை
வளைந்து நெளியப் பழக்கியது
ஓலையல்லவா !
காட்டின் சரசரப்பில்
உலகின் மொழிகள் அனைத்தும்
அகரத்துக்கு முந்திய
ஆவியாய்க் கரைகின்றன.
ஆலின் கீழ் மல்லாந்தேன்,
விழுதுகள் என்னை
அசைபிரித்துப் படிக்கின்றன
நேராய்க் கார்
நிரையாய் நிலா
துயிலில் கிழங்காய்ப் புரள்கிறேன்,
விழிப்பில் குருத்தாய் நிமிர்கிறேன்..