Thursday 16 February 2012

நிச்சயமற்ற காலமும் நினைவுகளும்..

யாழ்ப்பாண இடப்பெயர்வின்
துயர் நிறைந்த நாள் ஒன்றில்
ஆளாளைப் பார்த்து
அனுதாபம் சொன்னபடி
மீளேலாத்துயர் தோய்ந்து
மிகும் மாலைப் பொழுதிடையே
வீதிக் கரையோரம்
உனைப் பார்த்தேன் பக்கத்தில்
யாரும் உன் ஆட்கள் இல்லை
நீயோ தனியாக
போகுமிடம் புரியாது நின்றிருந்தாய்
நான் மெதுவாய்
ஏதும் உதவி..? எனக் கேட்க
பேச்சில்லை
சரி நகர்வோம் என எடுக்க
என் சைக்கிள் தனைப் பிடித்தாய்
நான் புரிந்து நின்றேன்
நாலைந்து மணி நேரம்
பேச்சேதுமில்லை
பிறகுன் வீட்டார் வர
அழைத்து வந்தெந்தன்
வீட்டினிலே இருக்க வைத்தேன்
ஆயிரம் நன்றி என்பதுவாய்
உன் கண்ணால்
பாயிரம் ஒன்று பாடாக் குறையாக
சிமிட்டி வைத்தாய்,

மாலைகளில் எல்லாம்
மாமரத்தின் கீழிருந்த
தென்னங் குத்திகளில் இருந்து
தேனீரை என்ன ருசி என்று
குடிப்பதுவும் இடைக்கிடையில்
கண்ணால் கண்ணுண்டு
களித்துருவிப் பார்த்தபடி
பேசிக் கொண்டிருந்தோம்
எத்தனை நாள்..

சைக்கிளிலே டைனமோ சுற்றி
வயரிழுத்து வானொலியில்
பூட்டி பெடல் சுத்த பாட்டு வரும்
நேரடியாய்
பேசேலாச் செய்திகளை
அதனூடு பேசிடுவோம்
செங்குருவி எனும் பாடல்
நான் போட நீ அடுத்து
கொஞ்ச நாள் பொறு தலைவா
எனும் பாடற் பதில் போட
சோகப் புலப்பெயர்வின் சுமை வலியும்
இடைக்கிடையில்
கொஞ்சம் மறந்தோடிப் போனதுவும்
நினைவிருக்கு,

சாமம் தடவி நான்
வீடு வரும் வேளைகளில்
பசிக்கேல்லை அதுதான்
எனப் பெரிய பொய் சொல்லி
என்னோடிருந்தே உணவுண்பாய்
உன் அப்பா
மெல்லச் சிரித்திருமி
திரும்பிப் படுத்ததனை
பல முறை நான் கூர்ந்து
பார்த்திருக்கேன்,

கோயிலுக்கு
ஒன்றாகத்தான் சென்றோம்
பல முறை நாம்
ஒருதடவை
கும்பிட்டுவிட்டு வந்து
பனங்குத்தியினில் இருந்தபடி
பேசிக் கொண்டிருக்க
இடை நடுவால் குரங்கொன்று
பாய்ந்தோட
நீ பயந்தடித்து ஓடிவந்து
பற்றினாய் என் தோளை
அப்போதில் உன் கைகள்
அனலாய்க் கொதித்ததையும்
உடம்பும் வரும் மூச்சும்
தணல் போல வீசித் தகித்ததையும்
பார்த்துவிட்டு
காய்ச்சலோ எனக்கேட்க
நீ சிரித்தாய் கண்ணிரெண்டும்
சிவப்பேறி நீ மாறிப் போயிருந்தாய்
கை மெதுவாய்
நடுங்கிக் கொண்டிருந்ததையும்
கவனித்தேன், மறு திங்கள்

அடுத்த இடப் பெயர்வின்
அரங்கேற்றம் தொடங்கிற்று
வன்னிக்குப் போவதென நீங்களும்
இன்றைக் கேலாதென நாங்களுமாய்
அந்தக் கடைசி மாலையும் வந்தது..!
வாகனம் கூட வந்தாயிற்று
நீங்கள் புறப்பட
பிணமெடுத்த வீட்டின்
பேரமைதி எங்கும்,
எல்லாரும் ஏற நீ மட்டும் ஏறவில்லை..!
‘சொல்லேலா வார்த்தைகளின் சோகத்தை
அப்படியே
அள்ளி அழுதூத்தத் தொடங்கிவிட்டாய்’
என்னாலும் ஒருவார்த்தை
தன்னும் இயலவில்லை முடியாமல்
இறுகிப் போய் நின்றிருந்தான் அசையாமல்
வாய்திறந்தால்
’கண்ணிரெண்டும் சிதறிக்
கதறி அழ வேண்டிவரும்
விண் தின்ற வெவ்வழலை விஞ்சி
என் நெஞ்செரியும்’
என்கின்ற பயத்தில் நான்
இறுகி நின்றேன் அசையவில்லை
நீயோ நிறுத்தவில்லை
அழுதழுது கொண்டிருந்தாய்
ஓமோம் என்பதுவாய்
உன் தந்தை தலை அசைக்க
ஏதோ சொல்லவென வாயெடுத்தாய்
நானுந்தான்,

அதற்கிடையில்
சன்னங்கள் சிதறிவிழ
மாமரத்து இலைகளெல்லாம்
சடசடத்து
பயமுறுத்தத் தொடங்கிற்று!
ஓட்டியுமோ
இனியும் நிக்கேலா
எனக் கத்தத் தொடங்கிவிட்டான்
’வாய் திறந்தும் வார்த்தை
வருவதற்குள்.. முடியாமல்
நீ ஏற வேண்டி ஆயிற்று
வாகனத்துள்,

கை காட்டி விடை சொல்லும்
நெஞ்சழுத்தம் எனக்கில்லை
தலை ஆட்டி மட்டும்
விடை கொடுத்தேன்
நீயுந்தான்
வாகனம் போக வாசல் வரை
ஓடி வந்து
ஒழுங்கையால் அது போய்
திரும்பு மட்டும் படலையிலே
பசு பார்த்த கன்றாய்
நின்றிருந்தேன்,

மறு நாளே
வன்னிக்கும் யாழுக்கும்
தொடர்பறுந்து போயிற்று
இன்றைக்கு பதினாறு
ஆண்டுகளும் ஓடிற்று..!
‘இதுவரையும் எந்தத் தொடர்புமில்லை’
ஆனாலும்
ஏதோ.. நான் இருக்கேன்
எங்கே நீ உள்ளாயோ..?
சூதோ சூழ் வினையோ போகட்டும்

நண்பர்காள்..!
எங்கேனும் என் உறவைக்
காண்பதற்கு நேரிட்டால்
ஒரே ஒரு தகவல் சொல்லிடுங்கள்
எனக்கிப்ப
“மகன் ஒருத்தன் பிறந்திருக்கான்”
என்று மட்டும்.. என்று மட்டும்

No comments:

Post a Comment