Friday 26 July 2019

நேரமுள்ளை நிறுத்து

எங்காவதென்னை
ஏந்திச்செல் காற்றே
தங்கித் தங்கித்
தவமிருந்து காத்தும்
எங்கும் விரிந்த இருள்
இறங்குவதாய்த் தோன்றவில்லை
மங்கிய விழியிலொளி
மலர இனி வாய்ப்புமிலை

ஆண்டாண்டோட
அடர்ந்தடர்ந்து வெறுமையது
தோண்டித் தன் கனமென்
தோள் மீது வைக்கிறது
நீண்ட தூரமெந்தன்
நிலைமீறிச் சுமந்து விட்டேன்
பாரமினித் தாங்குகிலேன் பரமே
சீக்கிரமென்
நேரமுள் தன்னை நிறுத்து..


Sunday 14 July 2019

மர வளையம்..

வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும்
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
தியாகத்தாலும், உழைப்பாலும்
கட்டப்பட்டும் ஏனோ வீழ்ந்துகிடக்கும்
எம் கனவு தேசமே கண் முன் வரும்

காட்டாற்று வேகத்தை
கடும் வறட்சியை
பூட்டிக் கிடக்கின்ற கற்தரையை
வெட்டிப் பிளந்து வெளிவந்தும்
சுற்றி நிற்கின்ற
சூழ்ச்சிகளைத் தாண்டி
உயர்ந்து கிளையகட்டி
நிமிர் விருட்சமாகும் வரை
எத்தனை கதைகளினை
காலக் குறிப்புகளை
ஏந்தி வந்திருக்கும் அந்த மரம்

அறுக்கப்பட்ட குறுக்கு வெட்டில்
தெரியும் ஒவ்வோர் வளையமும்
அதன் பாதச் சுவடென்பர்
பார்க்கத் தெரிந்தோர்
ஒவ்வோர் வட்டத்துள்ளும் வாழும்
ஓராயிரம் கதைகளை
எவரேனும் என்றேனும்
எழுதியதுண்டா..?

இடையனாய் இருந்த
கவிஞனொருவனின் காதுகளுக்கு
கன்றைக் கண்டவுடன்
பசு மடிக்கு பாய்ந்தோடி வரும்
பாலாற்றின் இனிய
சங்கீதம் கேட்குமாம்

கற்காலக் குறியீட்டை
கண்காணாக் காலத்தில்
விண்வெளியில் அசையும்
விந்தைகளை எல்லாம்
கற்றுக் கொள்ள எண்ணும்
மனிதன் ஏனின்னும்
தன்னோடு வாழும்
தனக்கின்னும் மூச்சுத் தரும்
மர வளையம் சொல்லும்
வரி எழுத்தைக் கற்கவில்லை ?
படியெடுக்க முயலவில்லை..?

என்றைக்கு எவனால்
இதையறிய முடிகிறதோ
அன்றைகே அவிழும்
ஆதி நீரூற்றின்
அவிழாத புதிர் முடிச்சும்
அதன் பின் எழுந்தவற்றின்
அத்தனையும்..


Friday 5 July 2019

எப்போது பூத்ததிந்த ஒற்றைப் பூ..

காய்ந்து கிடந்த இருள் வனத்தில்
எப்போது பூத்ததிந்த
ஒற்றைப் பூ?
வான் பார்த்து ஏங்கி இருந்த
வரண்ட நிலத்தில்
எங்கிருந்து விழுந்ததிந்த
மழைத்துளி?
ஆண்டுகளாய் புழுதி பறந்த
ஆற்றுத் தடத்தில்
என்றைக்கு ஓடத்தொடங்கிற்று
இந்தக் குளிராறு?
காம்பு முறிந்து தொங்கிய
காய்ந்த மொட்டு
எப்போதிந்த ஈரக்காற்றுப் பட்டு
இதழ்களை அவிழ்த்தது?
இத்தனை கோடி ஊசித்துவாரங்கள்
எனக்கும் கூட உண்டா உடலில்?
அத்தனையிலும் ஆர் நட்டார்
இத்தனை ஆயிரம் குத்திட்ட பயிர்களை?
தகிப்பதனாற் தான் இதனை
தேகம் என்று சொன்னாரோ?
உப்புக்காற்றை ஊதுகின்ற
அடரிரவின் ஊழையில்
ஆழ்கடலில் வழிதொலைந்தவனுக்கு
எங்கோ தூரத்தில் மின்னி மறையும்
வெள்ளியா இந்த
உயிர் விளக்கு..