Thursday 23 February 2012

காற்றுக்களும் காலமும்..

காற்றாகி நெஞ்சக் கனவுக்குள்
பல பூக்கள்
நேற்றோடு சருகாகிப் போச்சு
வரலாறு
தேற்றிக் கொள்ளவெனத்
திசை காட்டும் இடை வெளியில்
ஆற்றுப்படுத்தி
மன ஆறுதலை நாளைக்கும்
வான் பாய்ந்துடைக்கா
வழி சமைப்போம்
ஏனெனிலோ
எம் மண்ணில் பருவங்கள்
பல காற்றை உற்பவிக்கும்

தெற்கின் மேலிருந்தும்
வடக்கின் கீழிருந்த
கிழக்கிருந்தும் தேவை எனில்
வங்காள விரிகுடா தாண்டி
வலுப் பெற்றும்
காலச் சுழல் காற்று
எம் வாழ்வுக் காலத்தின்
கோலத்தையே மாற்றி
ஆச்சரியம் கேள்வி என
குறிகளென்ற அளவினிலே
குறித்திருக்கு, மனசொன்றி
வசனத்தைப் போட்டு
வரி வடிவம் தருவதுவும்
பந்திகளாய் ஆக்கி
பக்கங்கள் கூட்டுவதும்
காற்றடித்த இடம் காலம்
சரி பிழைகள் பற்றி எல்லாம்
விதி என்ற சொல்லாலே
விலகாமல் அளப்பதுவும்
போடுவதைப் போடுவதும்
இடுவதனை இட்டு நிரப்புவதும்
வரலாற்றை
வடிவான ஓர் நூலாய்
வார்ப்பதுவும் எம் கடமை.

ஆனாலும் ஓர் கவலை
உரைப்பன் யான்!

நேற்றெல்லாம்
வீட்டுக்கு வீடு வந்து
விடுதலைக்காய் பா பாடி
சாப்பாட்டுப் பாசல் பெற்று
சரிக்குச் சரி எம்முடனே
ஒன்றாய் இருந்து, உறவுணர்ந்து
மென்காற்றாய்
வேர்வைக் குரு குளிர வீசி
ஆழ் மனதுள்
அசைக்கேலா இடம் பெற்றமர்ந்து
அன்புச் சோலையினில்
கிளியாய்  மாங்குயிலாய்
மனசு தொட்ட காலமெல்லாம்
இன்றைக்கு
இருக்கின்றார், இல்லையென்ற
பேச்சிடையே இடறுண்டு
வியாபாரக் காற்றாக வீசும்
கொடுமையினை
கண் முன்னால் கண்டு
கலங்கலன்றி என் செய்வோம்!

ஆற்றுப்படுத்த இங்கு
யாருமற்ற வேளையிலே
சோழகம் எழ
உங்கள் சுய ரூபம் மேலெழுந்து
காலெழுந்த படிக்குக் கடக்கிறது
நில்லுங்கள்..!

தேசத்துக் காற்றின்
திசைக்கன்று ஏற்றபடி
கட்டி அமைத்திட்ட
பாய் மரங்கள் மேலெழும்பும்
உலகத்துக் காற்று
ஒழுங்கின் மாறலுக்கு
ஈடு கொடுத்திழுத்தோடும்
இயல் வலுவை அடைந்திடு முன்
சூறைக் காற்றொன்று
சுழன்றடித்து எம்முடைய
வீடும் நாடும்
வெறிச்சோடிப் போயிற்று!

பாய் மரம் அறுந்தாலும்
படகெல்லாம் மூழ்கவில்லை
தோணிகள் அங்கங்கே
துணை அற்றுக் கிடந்தாலும்
துறை இன்றும் மூழ்காமல்
துடிப்புடனே இருக்கிறது!

எல்லோரும் கை கொடுத்தால்
வசம் இழுத்துக் காற்றொழுக்கை
வேராக மட்டும் மீந்திருக்கும்
மண்ணுயிர்க்கு
நீராக ஊற்றி நிறைப்போம்
விருட்சம் எழும்!
பிறகென்ன
தென்றல் தெருத் தெருவாய்
வீசும்!

No comments:

Post a Comment