Monday 20 February 2012

மனைவி எழுதிய கடிதங்கள்..

வாழ்க்கைப் பயணத்தில்
ஒரு
வாழ்க்கையில் பயணம்.

விமான நிலைய விடை கூறலில்
இறுதியாக
கை காட்டும் தினவற்று
மகனின் கையைப் பிடித்து காட்டி
உன்னை வழி அனுப்பியது
எனக்கின்னும்
ஞாபகம் இருக்கிறது.

வீடு திரும்பிய போது
நீ நாளாந்தம்
போட்டுத் திரிகிற செருப்பு
அப்படியே இன்னும்
வாசலில் கிடந்தது
போடக் கால்கள் இன்றிப்
போனதை எண்ணுகையில்
வாடிச் சொரிகிறதென் கண்ணீர்.

இப்போது
உங்கள் மகன் அதை
கொண்டோடித் திரிகிறான்
மேசையில் வைக்கிறான்
கட்டிலில் வைக்கிறான்
சாமித் தட்டில் கூட
ஒரு நாள் வைத்திருந்தான்
செருப்பை ஏன் இங்கெல்லாம்
வைக்கிறாய் எனக் கையோங்கினால்
அப்பா எனக் காட்டி
அழவைத்து விடுகிறான்.
வாழ்ந்து சென்ற தடங்களின்
வெறுமையை வீசும்
கொடுமையைச் சொன்ன
பரதன் என்கிற
பாத்திரத்தைக் கூட
இவன் மூலம் தான்
நான்
இன்னுமின்னும் விளங்குகிறேன்.

உள்ளிருக்கும் உன்னுயிரின்
நினைவெண்ணி
எனக்கு நானே ஊட்டிக் கொண்டிருக்கும்
சோறிலும்
மார்பிலும் கழுத்திலும்
முகம் தேய்த்து
குறுகுறுக்கும் உன் மகனின்
கணகணப்பிலும் தான்
இன்னமும் கூட
என்னுடைய காலங்கள்
ஏதோ.. தவறி விழாமல்
தன்னுடைய காலத்தைக்
கடக்கிறது.

உனைப் பற்றிய நினைவுகளோடு
உறங்கப் போகையில்
சாமம் தாண்ட, வழமை போலவே
என்புகள் உடையும் படியாய்
என்னை
இறுகக் கட்டி அணைப்பாய்!
நானும் உன் மீது
காலைத் தூக்கிப் போடுவேன்
கட்டிலின் மீது
படாரெனக் கால் விழும்.
திடுக்குற் றெழுந்தால்
வெறிச் சோடிப் போய்க் கிடக்கும்
வெறுமையைப் பார்த்தெந்தன்
விரகப் பிரமை வீறிட்டழும்!

இனியும் வரா விட்டால்
”முலைகளைக் கிழங்கோடு பிடுங்கி
உன் மார்பில் பட வீசி எறிந்து
என் வெம்மையைத் தீர்ப்பேன்
முடியா விட்டால்
அவன் கட்டி இருக்கும் கோவணத்தை
கணச்சூட்டோடே கழற்றி வாருங்கள்
அதை ஒற்றியாவது
என் அழலைத் தீர்க்கிறேன்”
என்று
வாழ்ந்துணரா ஆண்டாளே
வாய் விட்டுக் கதற முடியுமென்றால்
ஒவ்வொரு அணு அணுவாய்
உணர்ந்துணர்ந் துன்னோடு
எவ்வளவு வாழ்ந்து பழகிய நான்
எத்தனை எத்தனை
கேட்டுக் கேட்டென்னுள்
'பித்தேறித் தாபம் பிதுங்க
வெடித்திருப்பேன்
செத்துயிர்த்து சாகின்ற வாழ்வு!
எனினும்
அத்தனையும் உனக்காக
அடைகாத்து வைத்துள்ளேன்'

நேற்றைக்கும் கூட
வழி அனுப்பல் ஒன்றுக்காய்
போயிருந்தேன்
நீ இருந்து போன
நீலக் கதிரை எல்லாம்
வேண்டுமென்றே எனக்காக
வெறிச் சோடிக் கிடந்ததடா !
துயர் நிறைந்த
பிரிவின் சொற்களைக் கொண்டு தான்
விமான நிலையத்தை
கட்டித் தொலைத்திருக்கிறார்கள் போல!
வந்து கொண்டிருக்கும்
ஆயிரமாயிரம் பயணிகளில்
நீ ஏன் ஒருவனாய்
இருந்திருக்கக் கூடாது..?

பூசை, பரிகாரம், விரதங்கள்
என்றெல்லாம்
ஓடித் திரிந்தலைந்து
அலுத்து விட்டேன் இதுவரையில்
சொன்ன கதை ஒன்றும்
சுவறவில்லை..
ஆனாலும்

நீ
வந்து போன பாதைகளின்
தடயங்களைப் பார்த்த வண்ணம்
ஏங்கிக் கிடக்கிறேன் நான்
இங்கு.

2 comments:

  1. //தடயங்களைப் பார்த்த வண்ணம்
    ஏங்கிக் கிடக்கிறேன் நான்
    இங்கு.//
    super..vaalththukkla..

    ReplyDelete