Wednesday 8 February 2012

வாழ்தலுக்கான ஆசை..

ஊரடங்கு பிறப்பித்த
உரத்த மெளனத்தைக் கலைத்தபடி
கந்தக வாசனை அடிக்கும்
எம் வளவுப் பதுங்குகுளிக்குள்
மறு பிறப்பை அண்மித்த
அலறலுக்கு மத்தியில்
அவன் பிறந்தான்,

வளர்ப்பதற்கென எமக்கு
வழங்கப்பட்டிருந்த சூழல்
மெல்லிய காற்று மேனியை வருட
ஏகாந்தமாய் இசையை முணுமுணுத்தபடி
கை வீசிச்செல்லும் காலமாய்
இருக்கவில்லை,

கிரந்தி எண்ணை சளித்தொல்லை என
ஒவ்வொரு வகுப்பாய்
பல்கலை வரைக்கும்
சும்மா அவனைக்கொண்டுவர
முடிந்ததில்லை

ஆட்டாத தலை பார்த்தும்
ஆட்கடத்தாத்தெரு பார்த்தும்
கோட்டைச் சமருள்ளும்
கொடிய இடப்பெயர்வுள்ளும்
மாட்டாது காப்பாற்றி வளர்த்து
அவன் வாழ்வு
மலர்கின்ற காலக்கனிவை
கொடுப்பனவை
தாகம் நிறைந்த தவிப்போடு
பார்த்திருக்க..
எங்கிருந்துவந்தீரோ வந்தீர்
மிக இயல்பாய்
பெயர் சொல்லிப் பிள்ளையினை
அழைத்து சிரித்தபடி
கன்னா மண்டையிலே வைத்து
விசை அழுத்திவிட்டு
என்ன பெரிதாய் நடந்து விட்டதென்பதுவாய்
உம் பாட்டில் போய்விட்டீர் கொடியவரே..

எங்கள் இத்தனை காலக்கனவுகளும்
காத்திருப்பும்
அணுஅணுவாய்ப்பார்த்து
ஆக்கிவைத்த அத்தனையும்
ஓர்குண்டில் உடைந்து சிதறி
பிடரி வழி
பெருங்குருதிப்பெருக்காக ஓட
கண் முன்னே
பிரண்டுகிடக்கிறான் பிள்ளை

வாழ்வின் ஒவ்வொரு அடியையும்
தூக்கி வைக்க
எத்துணை விலை கொடுத்தோம்
என்பது பற்றி
கொலை உணர்வை விரல் நுனியில்
வைத்திருக்கிற உமக்கு
எதுவுமே உறைத்துவிடப் போவதில்லைத்தான்
ஆயினும்
நெஞ்சால் ஒன்றும்மைக்கேட்கிறேன்

வாழ்தலுக்கான எங்களின்
இத்துணை ஆசையிலும்
மேலானதா
கொல்வதற்கான உங்களது
தேவை..?

No comments:

Post a Comment