Tuesday 7 February 2012

கலங்கரை விளக்கு..


இப்படியாய் எல்லாமே
எதுவுமற்று முடிந்ததடி
இப்பிறப்பின் வரவை
இத்தோடு முடித்து விட
எத்தனையோ தடவை நான்
எண்ணி முயன்றாலும்
காத்திருத்தல் என்ற சொல்லின்
கனதியில் அவை எல்லாம்
நேத்திரங்கள் காணாதென்
நெஞ்சை விட்டு வெளியேற
வாழ்ந்த அந்த நினைவுகளில்
வாழுகிறேன் மீதியினை

கண்கள் திறந்திருந்தாலும்
காட்சி ஒன்றும் தெரியவில்லை
பண் எதுவும் புரியுதில்லை
பாடல்களில், மண்ணுடலில்
உயிர் போய் விடுவதற்கு
ஒன்பது வழி இருந்தும்
துப்பாக்கி சடசடத்துத்
துளைத்து விட்ட வழியே தான்
கனவுகளோடுயிர் எல்லாம்
கரைந்தோடிப் போனதடி

போன உயிர் போனது தான்
போம் வழியில் அதிலிருந்த
கனவுகுத்த கண்ணீரின்
கடைசி மனத் துளிகளெல்லாம்
சேடம் இழுத்தபடி
சிதைந்துடைந்து கிடக்கின்ற
மீதி உயிர்களது
மீதினிற் தான் வீழ்ந்ததடி

அடிக்க அடிக்க ஆற்றா முடிவில்
துடிக்கும் எந்த மண் புழுவுக்கும்
கொடுக்கு முளைப்பது கூர்ப்பின் விதியடி
வெடித்துப் பாறை பிளக்க வெளியே
வெட்டிரும்பாடி தலையை நீட்டுது?
குட்டி விதையின் குழந்தைத் தளிரடி
காலம் என்கிற நினைவு வாகனம்
கலங்கலாகத் தெரியினும் அடியிலே
ஓடிக் கொண்டு தான் இருக்குது
உணரடி!

எல்லைகள் தெரியாக் காடுகளூடே
ஏதென்றறியாத் தீவுகள் தாண்டி
கல்லும் ஆணியும் கால்களைக் கிழிக்க
கரைகளே தெரியாக் கடலின் நடுவே
கண்மணி நான் நிற்பினும் எனக்கு
கலங்கரை விளக்காய்த் தெரிவது
இங்கே
உன்னுடை நினைவு மட்டுமே அல்ல
மண்ணுடை நினைவும் தானடி மயிலே..

No comments:

Post a Comment