Tuesday 7 February 2012

இறப்பதற்கு முன் அந்த இருநொடிகள்

செயலில் செயலற்ற நிலையில்
சிந்தனைகள்,
உச்சிக்கேறி நின்று
உரக்கப் பறந்த பட்டம்
முச்சறுந்து மெல்ல மெல்ல
வீழுவதாய் உடல் நிலமை,

இறுதிக் கணங்களிவை என
ஊறும் உள்ளுணர்வு
இதயக் கனத்தை எல்லாம்
இறக்கி மென்மனசை
பச்சத் தண்ணியிலும்
பதமாக்கி வெறு வெளியாய்
சாந்தம் எனும் ஒளியின்
சாட்சியமாய் ஆக்கிடினும்
உள்ளாடும் நினைவலைகள் ஓடி
உயிராற்றின்
கடைசித் துளியினிலும் கனக்கிறது,

இடைநடுவில்
ஏமாற்றப்புரை ஏறி எந்தன்
நெடும்பயணம்
இறக்கேலாச்சுமைகளினால்
இடிந்தாலும், விடைபெறுமுன்
என் பார்வைக்குட்பட்ட
ஏதோ ஓர் மூலைக்குள்
எட்டி முகம் காட்டி
ஓரவிழி நீர் நிறைய
குட்டி! உன்னினைவு
இப்பொழுதும் என்மனதை
தட்ட உடலெல்லாம்
தகிக்கிறது எனும்படியாய்
ஓர் பார்வை என் முடிவில் இனிக்காதா
என்பதையே
போகையிலும் எதிர்பார்த்து
போகின்றேன்...,

அதை விடவும்
நான் படித்த கல்லூரி
நடைபயின்ற நல்லூர் மண்
கூள் காய்ச்சிக்குடித்து
கும்மாளம் போடுகிற
காரைநகர் வீடு கடற்கரை மண்
எல்லாமே
வரிசைகளில் வந்து வந்து
போகிறது...

ஆனாலும்
பெற்ற வேதனத்தில்
பெரிதாய் எனை வளர்த்து
இற்று நானுடைந்து போகையிலும்
என்வழிக்கு
உற்ற துணையாய் இருந்து
ஒருங்கிணைந்து, சொந்தங்கள்
வைத்த சுருகுதடக் கயிறுகளில்
மனம் உடைந்தும்,

இதற்கெல்லாம் பதிலாய்
இவன் இருப்பான்
எனும் கனவு
முற்றாய் சிதறி என்முடிவில்
பெற்றவர்கள்
வெற்று வாழ்வாகிப் போவார்கள்
எனும் நினைவே
இறுதியிலும் என்நெஞ்சில்
அறைகிறது.

No comments:

Post a Comment