Sunday 6 November 2016

கண்ணம்மா என்பது..


கண்ணம்மா என்பது,

அடித்த காட்டாற்றில்
அடிபெயர்ந்து வீழ்ந்துவிட்ட
நெடிய பெருமரத்தின்
நினைவில், கிளையொன்றில்
இன்னமும் துடிக்கின்ற
இளந்தளிர்

கண்ணம்மா என்பது,

மாண்டாலும் எழுந்தெழுந்து
மறுபடியும், மறுபடியும்
மீண்டு கரைமனசை
மீட்டி, நுரை தளும்ப
ஆரத்தழுவுகின்ற அலை

கண்ணம்மா என்பது,

ஊரைப் பெயர்ந்து
ஓர் தசாப்தமானாலும்
ஈரமாய் நாசிக்குள்
எங்கிருந்தோ ஊர்ந்து வரும்
ஆட்டுப்பால் வாசத்தின்
அமர சுகம்

கண்ணம்மா என்பது,

அரைக்கண் செருகுண்டு
அந்தரத்தில் உயிர் மிதக்க
இதழால் செவி கவ்வி
இழுத்து, பிடரியிலே
விரலூர விட்டென்றன்
வெறும் பிறப்புக்குயிர் கொடுத்த
அன்புத்தேன் சொட்டும்
அடை

கண்ணம்மா என்பது,

பின்புறமாய் வந்தென்னைப்
பிடித்து, கழுத்திறுக்கி
சின்னமுளை ஈரத்தைச்
சிந்த, தோளேறி
தாடியிலே நாடியினால்
தடவி, குளைந்தபடி
அப்பா என அவனணைக்கும்
அமுத நிலை.

கண்ணம்மா என்பது,

வாழ்வை அப்படியே
வழித்தெடுத்து  விடுதலையின்
வேள்வித் தீயிலிட்டு
விதையானோர் கனவெனது
பிறப்போய்ந்து போவதற்குள்
பிறந்தால், கொடியேற
கண் நிறையக் கண்டு
காயமெல்லாம் மெய்சிலிர்க்க
அடக்கி வைத்திருப்பதெல்லாம்
அழுதூத்தி, புரவியைப் போல்
மண்புரளக் காத்திருக்கும்
மனசு..