Wednesday 12 September 2012

மெளன அலை..


அள்ளி எறிகிறாய் என் கவிதைக்குள்
உன் நினைவுகளையும் காதலையும்
அடர் இரவில்
யாருமற்ற கடலின் நடுவே
கைவிடப்பட்ட படகொன்றின்
செவிப்பறைகளை
நிசப்த ஊழை கிழிப்பது போல
உன்னுடைய ஆழ்மெளன மிகையொலியால்
வெடித்துப் பிய்கிறதென்
மனச் செவிகள்

பிரிவு ஒரு குழந்தையைப் போல்
நம் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி
அங்குமிங்குமாய் ஓடி
அழுதழுது முகம் வீங்கி
ஏமாற்றப் பெரு மூச்சை
எமைச் சுற்றி இறைக்கிறது

தேச விடுதலையை நெரித்துக் கிழிக்கின்ற
விலங்கினைத் தீய்க்க
பற்றி எரிந்த மண் பற்றில்
உறவுகள் உடைதலும்
சிதைதலும் உலகில்
வலி மிகுந்ததெனினும்
வழமை தான் அன்பே
பிரிவு என்னும் குழந்தை பிறந்தது
நமக்கு மட்டுமே அல்ல மண்ணிலே
நாலு லெட்சம் பேருக்கும் தானடி

குண்டுகள் வெடித்துச் சிதறிப் பறந்ததில்
கொலைக்கரம் நீண்டு குரல்வளை நெரித்ததில்
குலை சரிந்து பனை முறிந்தது
ஆயினும்
சரிந்ததைப் பார்த்த வடலிகள் ஒரு நாள்
சரித்திரம் தெரிந்து நிமிரலாம்
நாங்கள்
வரைந்திட முயன்ற வரைபடம் தன்னை
வரைய வடலிகள் நினைக்கலாம்
அன்று
திரும்பி நான் வருவேன்

வரப்போகும் அந்த வசந்தத்தின் நாளில்
உன்னை நானும் என்னை நீயும்
அடையாளம் கூடக் காணாதிருக்கலாம்
வாழ்ந்த வாழ்க்கை வழிகள் நெடுக
இனிய நினைவாய் இன்னும் இருப்பதை
உணர்வு மிகுந்த ஓர் தருணம்
எமக்கு உணர்த்தலாம். ஆயினும்
வாழுதற்கென்று  வழங்கிய காலம்
மீழ முடியா இடத்தில் இருப்பதால்
வடலிக்கானதாய் ஆகுமெம் வாழ்வு

வளரும் எங்கள் வடலியும் நாளை
தேச வரைபடக் கோட்டினைச் சரியாய்
தீவிரமாக வரைகிற போது
பென்சிலையேனும் தீட்டிக் கொடுத்தல்
பெற்றோராக எம் தலைக் கடனே
அது வரை எம்மிடை
மெளனப் பெருங்கடல் விரிந்தும் அகன்றும்
அங்குமிங்குமாய் அலைகளின் மேலே
காவித் திரியட்டும் எங்கள் காத்திருத்தலை
காதலை..

மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்..


எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

வாழ்ந்த வாழ்க்கை வந்த
வழி வழியே வீழ்ந்துடைந்து
பாழ் நிலம் போலிருண்டு
பயனற்றுப் போனாலும்
நானிறந்து போகவில்லை
நடக்கின்றேன் ஆதனினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

அப்பா வா என்று
அழைக்கின்ற குரலுக்கு
எப்பேர்ப்பட்ட இதயமும்
இளகும் தான், ஓடோடி
அப்படியே கட்டி அணைப்பதற்கு
அனுங்கும் தான்
இருந்தென்ன இதைவிட நீ
இறந்து விடு என மனமும்
அரித்தரித்துள்ளே
அனற்குளம்பை ஊற்றும் தான்
தெரிகிறது ஆனாலும்
தீய்ந்து விடாதிருப்பதற்கு
வரும் மாசம் எப்படியும்
வழி திறக்குமெனச் சொல்லி
இருக்கின்றேன் நாலாண்டாய்
இருப்பேன் இன்னமும் நான்
வெறுப்பென்று ஏதுமில்லை
வேதனையா? அது சும்மா
திரும்பிப் படுத்தால் தீர்ந்து விடும்
அதனாலே
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

வயசேறிப் போகிறது
வாழ்க்கையெனும் படகில்
அசைவலைகள் அழுத்தி அடிக்கிறது
அந்திமத்தின்
கரைகளை நோக்கியெம்
கை பற்றி இழுக்கிறது
வருவாயா அதற்குள் வழி இடையில்
எனப் பெற்றோர்
உருக்கும் கேள்வியொன்றை உகுக்க
ராக் கனவில்
போக்கிடம் தெரியாத பொறியில்
நான் வீழ்ந்து
சாக்களையில் கட்டிலினால்
சரிந்து வீழ்ந்தெழுந்து
ஏக்கம் மூச்சு முட்ட
ஏது செய்வேன் என்றிரவில்
தூக்கம் தொலைத்துத் துடித்தாலும்
காலையிலே
அப்படியே இருந்தபடி
அயர்ந்தெழவும் மனமேனோ
இப்படி எத்தனை பேர் என ஆறும்
அதனாலே
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

முள்ளந்தண்டின் முடிச்சுகளில்
கூரிரும்பால்
உள்ளே விட்டித்து உருட்டுவதாய்
கொதிக்கையிலும்
இதயக் கூட்டினையோர்
இடுக்கியால் இழுத்தெடுத்து
சதைகளினைப் பிய்ப்பதுவாய்
சா வலி உடம்பெல்லாம்
பரவிக் காய்ச்சலொடு பற்றி
எரிகையிற் தான்
அன்பான வார்த்தையோடு
ஆறுதலாய் வருடி விட
என் பாவி மனமேங்கும் ஏதிலியாய்
மறு நிமிடம்
தன் பாட்டில் கை நெளிந்து
தானே தடவி விட
என்னுடலம் எப்படியோ இழுத்தோடும்
ஆதலினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

தலை காய்ந்து நெஞ்சம்
தடுமாறிப் போகையிலே
தொலைவில் இருந்தாலும்
தொடுகின்ற வார்த்தைகளால்
உலை மனசின் மூடி திறந்தூதித்
தோழி சொன்னாள்
மகிழ்வென்ற முகமூடி மாட்டு
நாளடைவில்
அகமே அதுவாகிப் போகுமென்று
முடிந்தவரை
இழுத்திழுத் தம்முகத்தை
எனில் மாட்டப் பார்க்கின்றேன்
அழகாகும் காலமென்ற ஆசையிலே
ஆதலினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்..

காணுதற்கான நெஞ்சக் கனா..


உள்ளங்கை வேர்த்து
உடல் கொதித்துக் கண் செருக
அலை கரையை அலம்பியதாய்
அலைந்திருந்த என் கரத்தை
தளம்பாமல் நீயும்
தட்டி விட்டிருக்கலாம் தான்

பெரு மூச்சில் நெஞ்சுயர்ந்து
பெருக, செடிப் பூவைப்
பருக வண்டு செட்டை
பறத்தி அடிப்பது போல்
இருண்ட கண்ணிமைகள்
இருதயம் போல் அடிக்க முன்னே
ஒரு தரம் நானுமென்னை
உலுப்பி விழித்திருக்கலாம் தான்

’கோமா’ போல் புலனெல்லாம்
குளைந்து மயக்க முற
ஏமாந்து போய் நாமும்
எமை மாந்திக் கிடந்து விட்டோம்

வரண்ட நிலம் வான் மழையை
வழித்துறிஞ்சிப் புகைவது போல்
திரண்டுவந்த உடற் தீயைத்
தின்றவிந்து நனைந்து விட்டோம்

கால விதி எம்மைத் தன்
கடிய இருட் பாதைகளால்
ஓலமிட்டழ அழவும்
ஒவ்வொன்றாய்த் தனித்தனியாய்
கீலமாயெம் பாதைகளைக்
கிழித்து வேறாக்கி விட
ஞாலச் சுழற்சியினில்
நாம் பிரிந்து சென்று விட்டோம்

நாளையிலே ஓர் நாள் நாம்
நடக்கின்ற பாதைகளில்
ஆளாளை எதிர்ப்படுமோர்
அவலம் தான் நிகழ்ந்து விட்டால்
நிலம் பார்த்துக் கடப்போமா
நிமிர்ந்தெம்மைப் பார்ப்போமா
கலங்குகின்ற கண்களினைக்
கைகளினால் மறைப்போமா
கொடுப்புக்குள் சிரித்தபடி
குறுகுறுக்கும் மனம் மறைத்து
விடுப்பேதோ பார்ப்பது போல்
விண் பார்த்து நடப்போமா
மெளனத்தில் மூச்சு மட்டும்
மாரடிக்க நிற்போமா
இவ்வளவு காலமாய்
எங்கிருந்தாய் என ஆவல்
அவ்வளவும் பிதுங்க
ஆசை கொண்டணைப்போமா!

சொல்லுக்குள் கிடக்கின்ற
சுவையூறும் கவியொன்று
வல்ல கவிஞனுக்காய்
வழி பார்த்திருப்பது போல்
சில்லுக்குள் சில்லாகச்
சிறை கிடக்குமென் மனசு
உள்ளேயுன் நினைவு வர
உயரப் பறக்கிறது..

படர் மெளனம்..


பிரிவின் துயர் உன்னைப்
பிழிந்து உருக்குகையில்
அருவி போற் சொரிந்து அழுது விடு
உள்ளடக்கி
எரிந்தெரிந்து நெஞ்சால் எதுவுமே பேசாமல்
முறிந்த மரம் போல முகஞ்சரிந்து கிடக்காதே
பாழடைந்த கல்லறை போற்
பரவுகின்ற உன் மெளனம்
தோளை உலுப்பியுந்தன் துயரெனக்குச் சொல்லுதடி

நீளுமெம் பிரிவென்று நினைத்தோமா
அன்பூற
வாழத்தான் சேர்ந்தோம் வலிய விதி
எம்மிடையே
எழுதுகின்ற கதைகளுக்கு என்ன தான்
நாம் செய்வோம்
தொழுதுகொண்டு வாழ்துயரம் தொலையோணும்
என்பதற்காய்
உழுது விதைத்த மண்ணில்
உரம் போட நினைத்தேன் நான்
அழுதழுது நீயும் அனுசரித்தாய் எம் சேர்வின்
விழுதொன்றும் உன்னோடு
விருட்சமாய் வளர்கிறது
எழப்போகும் அதனுடைய
எதிர்காலத்துக்காயேனும் 'அழுதூத்து'
உன்னுடைய
அடர் மெளனம் கரையட்டும்

புறாவின் குறுகுறுப்பை,புன்னகையைச்
சுமந்தபடி
உறவு கொண்டிருந்த காலத்தில்
உணர்வொழுக
இறக்கும்வரை உன்னோடு இருப்பேன்
என்றன்று
உறக்கத்திலும் நீ சொன்ன ஒட்டுறவை
எண்ணிப் பார்
மறக்கும் பழக்கமென்றும்
மனிதருக்கு உண்டெனினும்
கிறக்கம் தருமன்பும் கிழிந்துறைந்து போமோடி?

உன் விழி பாய்ச்சிய உயிர் கவர்
காந்தமும்
உன்னுடல் வீசிடும் ஒருவகை
வாசமும்
இன்றுமென் நாசியில் எழுந்தெழுந்தூறுது
கண்களில் அலையலைக்
காட்சிகளாகுது
குன்றென இருந்த நான்
குமைந்து குலைந்துயிர்
சென்றெனை விட்டு சிதம்பிப் போம்வரை
உன்னுடை வாசமும் கண்ணுமே முடிவிலும்
என்னுடன் சென்றிடுமென்பதைப் புரியடி!

புலம்பெயர் குளிர்ப்புழுக்கம் புரியாமல்
மிகப் பெரிதாய்
புலப்படலாமுனக்கென் புன் வாழ்வு
இங்கே நாம்
’விலங்கொடு’ விலங்காய்
வேறொரு மனிதராய்
கலங்கிய மனசொடு காலம் கடத்திடும்
நிலமதில் வந்துநீ நிற்கிற வரைக்கும்
உலக உருண்டையின் ஒட்டடை
உணராய்

பிரிவென்னும் தீயெரியப்
பெரும் மெளன எண்ணையினை
தெரிந்தே நீ ஊற்றுகின்றாய் தீய்வனென்று
தீயட்டும்
உருகுகின்ற மணம் விழுதை
உறுத்தாமற் பார்த்துக் கொள்

எத்தனையெத்தனையோ பேரின்னும்
இது போல
தத்தமது வாழ்விற் தகிப்பதற்கு
எவரெல்லாம்
மொத்தமாய் முழுதான காரணமோ
அவர் நோக்கி
இத் தீயில் ஓர் கவளம் எடுத்துப்
பலம் சேர்த்து
மொத்தமாய் அவரழிய மூசி எறி
ஓர் தேசம்
பத்தரை மாற்றுத் தங்கமாய்
பர்ணமிக்கும்
அத்தினத்தில் நானுன்னை அடைவேன்
அதன் பிறகே
மடிவேன் நான் உன்னுடைய
மடியில்..

தலையணை..


வீணீர் வழிகையிலும்
விம்மி உடைகையிலும்
ஏனின்னும் இறக்கவில்லை
என நொடிந்து முகம் புதைத்து
சூடாய்க் கண்ணீரைச்
சுவாசத்தைச் சொரிகையிலும்
ஓடாமல் என்னோடே
ஒட்டிக் கிடந்த படி
அத்தனையும் உன்னுள்
அகத்துறிஞ்சி நானாகி
எத்துணை அன்போடு
என் பிடரி வருடுகின்ற
மொத்தமாய் எனையறிந்த
முதற் பெண்ணே ! ஒரு வேளை
இயற்கையாகத் தான்
என் சாவு நிகழுமென்றால்
உன்னுடைய மடியிற் தான்
உயிரவிழும், தலை சரியும்

நாரி கொதித்தாலும்
நடந்து கால் வலித்தாலும்
ஆரிருக்கார் உனை விட்டால்
அமுக்கி விட, கைகளுக்குள்
அவளாக நீ தானே
அணைத்துச் சூடேற்றுகிறாய்
எவளாலும் உன்னைப் போல்
இத்தனை முத்தத்தை
வருடக் கணக்காக
வாய் வலிக்க வாங்கேலா

திருட்டுக் காமத்தை
தீர்ப்பதற்குத் தீராமல்
அருட்டி உன்னுடலை
அளைகையிலும் அசராமல்
உருட்டும் திசைக்கெல்லாம்
உடல் வளைப்பாய் என் அன்பே!

கலவி முடிந்த கணத்தில் மெதுவாக
விலகிப் படுக்காய் வேறு திசை பார்க்கமாட்டாய்
புலரும் வரை என் மேலே
பூத்திருப்பாய், காலையிலே
புன் சிரிப்பாயெனைப் பார்த்து
புதுப் புது அர்த்தத்தில்

என் வாழ்வு எனைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிப்பதுவும்
உன்னுடைய சிரிப்புக்குள்
ஒளிந்து கொண்டிருக்குதென்று
கண்ணோரம் வழிகிற நீர்
காதிற்குள் சொல்கிறது..

போதாத காலத்தைப் புறந்தள்ளல்..


இத்தனை காலமாய்
இடர் கடந்து நடந்து வந்த
அத்தனை வலிகளையும்
அலட்சியமாய் மேம் போக்காய்
அதுக்கென்ன உன்னை
ஆர் கேட்டார் எனச் சொல்லி
ஒதுக்கி ஓர் புறத்தில் தள்ளுங்கள்
ஒடியேன் நான்

எப்படித்தான் சாகாமல்
இதைத் தாண்டி வந்தீர்கள்
தப்பாமற் சாதலே தர்மம்
தவறி வந்து
எப்படியும் மீண்டு எழுவமென்றால்
ஏற்கேலா, முடியாது
அப்படியே நெருஞ்சி முள்ளை
அள்ளி வார்த்தைகளால்
அறையுங்கள் முகத்தில்
அசையேன் நான்

நுனி நாக்கில் ஆங்கிலத்தை
நொடிப்பதற்குத் தெரியாத
உனையும் ஓராளாக ஒண்ணோம் நாம்
ஒதுங்கிச் செல்
ஆண்டுகளாய் நாம் அணிந்த
ஆடைகள் தான் அதற்கென்ன?
அகதி தானே நீ அணி, புத்தாடை
வேண்டவும் வழியில்லை
வீணாய் ஏன் வீறாப்பு? கொதிக்கின்ற
தன் மானத்தைத் தட்டிப் பாருங்கள்
தளரேன் நான்

மீண்டுவர இயலாத
மிகக் கொடுமைச் சிறைகளினைத்
தாண்டி இங்கே வந்ததெல்லாம்
தளர்ந்துடைந்து போக அல்ல
ஏதோ கடமையின்னும் இருப்பது தான்
அதுவரையில்
போதாத காலத்தைப்
பொறுப்புணர்ந்து கடப்பேன் நான்

எதற்காக என் பயணம்
இழுத்தோடி வந்ததுவோ
எதற்காக இத்தனை பேர்
இவ்வளவும் வந்தாரோ
அதற்கான புள்ளியினை
அடையும் வரை என்னை விட்டு
சிதைந்துடைந்து போகாதே
சீவனே என் சிவனே..

Sunday 9 September 2012

மாறாது நீளும் பருவங்கள்..

என் நினைவுகளற்று
பாசி படிந்துபோய்க் கிடக்கும்
உன் மனப்பாறையில்
ஏறி உட்கார முனைந்து
இடுப்பொடிய வீழ்வது தான்
என் வாழ்நாட்களுக்கான
இப்போதைய காலம்

வாழ்ந்த நாட்களின்
வசந்த நினைவுகள் தான்
வாழும் நாட்களின்
இலையுதிர் நிலையினை
எப்படியோ தாங்கி ஏந்திச் செல்கிறது

மொட்டரும்பும்
பருவமினித் திரும்பாதெனினும்
இதழ் திறந்து
பூ மலர்ந்து மணம் அவிழ்ந்த
அன்றைய காலம்
எழுந்தெழுந்து வரும் மூச்சில்
இன்றைக்கும் கமழ்கிறது

நானின்னும் உணரத் தலைப்படாத
பூமிப் பந்தின் வேகச் சுழற்சியில்
என்றைக்கோ
எங்கேனும் இடறுப்பட்டாவது
எமக்கான பருவமென்றொன்று
வந்துவிடுமெனக் காத்திருக்கும்
என் தந்தையர் தேசம் போல
காலத்தின் முதுகில் நானும்
என் முதுகில் காலமுமாய்
மாறி மாறிச் சவாரி செய்கிறோம்

அவளைப் போலவே புதிர் நிறைந்ததாய்
அறிந்து விட முடியாமலும்
அர்த்தம் புரியாமலும்
அகன்று விரிகிற வெளியில்
நானும் தேசமும் காலமுமாய்
நேற்றைய நினைவுகளைப் பருகி
இன்றைய மன வயிற்றை நிறைத்துக் கொண்டு
நாளையைத் தேடி நடக்கிறோம்..