Monday 20 February 2012

திரும்பலுக்கான சத்தியம்..

எம்முடைய பறப்பின்
கதை என்பது
சத்தியத்தின் கதை
அல்லது
திரும்பலுக்கான சத்தியம்

எமக்கெதிரே மோசமான
பருவங்கள் உருவாகின்ற போது
சுதந்திரமாய் வாழ்தல் என்ற
ஒற்றைக் காரணத்துக்காக
பல்லாயிரக் கணக்கான
மைல்களையும்
பல லெட்சம் இடர்களையும்
ஊடறுத்துப் பறக்கிறோம்

புறப்படுவது என்று
முடிவாகி விட்ட பிறகு
இறுதியாக ஒரு முறை
நாம் வாழ்ந்த இடங்களை
கண்ணில் பதித்தபடி
பறக்கத் தொடங்குவோம்

இலக்கை அடையும் வரை
இராப்பகல் பாராமல்
எங்கள் பயணம் தொடரும்
நிலா,விண்மீன்,மழை,மின்னல்
காடுகள்,மலைகள்
எத்தனையோ எத்தனையோ
அழகும் ஆபத்தும் நிறைந்த
இடங்கள், எல்லாம் கடந்து
இலக்கை அடையும் வரை
இராப்பகல் பார்க்காமல்
எங்கள் பயணம் தொடரும்

எங்கள் வாழ்வின் மீதான
போராட்டம் தான்
இந்த நெடும் பயணம்

எமக்கு முன் சென்ற
தோழர்களிற் சிலர்
எல்லைச் சிறைக் கூடுகளில்
அடைக்கப் பட்டிருப்பதையும்
எம்மைக் கண்டவுடன்
சிறைக் கம்பிகளில் முட்டி
விடுதலை வேண்டி அவர்கள்
ஈனஸ்வரம் எழுப்புவதையும்
கண்ணீர் சிந்தலுடன்
கடந்திருக்கிறோம்

எம் பறப்பின் நெடிய துயரும்
சாக்களையும் அறியாப் பலர்
வழிகளில் எம்மையும்
சிறை வைக்கலாம்
பசி எனில் சுட்டு வீழ்த்தவும் கூடும்
ஒரு வேளை இது
பொழுது போக்காகவும் கூட
அவர்களுக்கு இருக்கலாம்

ஆயினும்
நாம் கடந்து வந்த
பாதையின் சுவடுகள்
காற்றில் வாசமான ஓவியங்களாக
வரையப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில்
நாம் பறந்து கொண்டே இருக்கிறோம்

வாழ்வதற்கான
நிறைந்த ஆசைகளோடு கூடிய
பறப்பின் இடைவெளியில்
நாம் கொல்லப் படுகிறபோது
வானிற் சிதறிய
வண்ணம் நிறைந்த பறப்பின்
கனவுகள் தான்
முகில்களாக அங்குமிங்கும்
அலைந்தோடிக் கொண்டிருக்கிறதோ
தெரியவில்லை!

கண்டங்களும் கடல்களும்
கடக்கக் கடக்கத் தான்
திரும்பிச் செல்ல வேண்டும்
என்ற எண்ணம்
எம்முள் தீவிரமாகிறது
பூமிப் பந்தின்
ஒவ்வொரு மூலையில் இருந்தும்
எத்தனை எத்தனையோ தோழர்கள்
திரும்பி விடுவோம் என்ற உறுதியில் தான்
துருவங்களைக் கடக்கிறார்கள்

எம் பயணக் குறிப்புகள்
கடற்கரைகளிலும் காடுகளிலும்
இறகுகளாயும்
இறந்து போய் விட்ட
எம் தோழர்களின் என்புக் கூடுகளாயும்
எம் நெடு வழிப் பயணத்தின்
கதைகளைப் பேசிய படி
கிடக்கும்,

இங்கேயும் வாழலாம்
என்றுணர்கிற போது
அங்கே இறங்குவோம்
கூடிக் குலவுவோம், ஆடிமகிழுவோம்
ஆயிரம் இங்கு நடந்தாலும்
எங்கள்
வயல் வெளிகளின் வாசனையும்
மரங்களின் சுவாசமும்
இன்னமும் எங்கள் மூக்குகளில்
மணத்துக் கொண்டே தான்
இருக்கிறது,

நாளாந்த வாழ்க்கையில்
வாரிசுகள் எமக்கிங்கு வாய்த்தாலும்
சொந்த மண்ணின் சுகந்தத்தை
அவர்கள் எங்கள் மூக்குகளில்
இருந்து உணர்ந்தறிவார்கள்.
ஒரு வேளை
இந்த இடங்களிலேயே நாங்கள்
இறக்க நேர்ந்தாலும்
வந்த வழி நெடுக வரையப் பட்டிருக்கும்
எங்கள் வாழ்வுக் கனவுகளின்
தடம் அறிந்து பிள்ளைகளும்
சொந்தக் கூடடைவர் என்கின்ற
நம்பிக்கை
இன்னும் இருக்கிறது எங்களுக்கு,
இதுவும் கூட
திரும்பலுக்கான சத்தியம் தான்.

எமக்கான பருவம் என்று
ஒரு நாள் வரும்..!
அன்று
கூட்டம் கூட்டமாய் நாங்கள்
கூடு திரும்புவோம்

எங்கள் மண்ணும், காற்றும்
வயல் வெளிகளும், மரங்களும்
எங்களுக்காகத்தான்
தோழர்களே !
காத்துக் கிடக்கின்றன.

No comments:

Post a Comment