Friday 30 March 2018

காலம் - சூடு

காலத்தின் கைபட்டுக்
கரைந்துவிடாப் பொருளேதும்
ஞாலத்தில் இருக்கிறதா? காயத்தில்
கணப்பாய் இருக்கின்ற வெப்பம் போல்
உலகிலுள்ள
அத்தனை பொருள்களிலும்
அதனளவுக்கேற்ற படி
பற்றி இருக்கிறதா வெப்பம்?
ஆயின் காலமெனல்
உள்ளேறி வெப்பம் வெளியேறும்
இடைவெளியா..?
தகிக்கிற தேகம் தணிகிற போது
முடிந்து விடுவதா காலம்?

கணச்சூடா காலத்தின் அளவு கோல்..?


Tuesday 20 March 2018

எதிரிக்கான மொழி..

கையறுநிலைக்கும் கையறுந்து
சிறையை நோக்கி
குழந்தை நடக்க தொடங்கிய போது
நிலம்
எப்படிப் பிளக்காமல் இருந்தது..?

அடி வயிறெரிந்த
அப்பாவித்தனத்தின் வெம்மை
கண்களில் இருந்து அவிழ்ந்து
நிலத்தில் உருண்டபோது
எரிமலையொன்று அவ்விடத்தில்
எழாமல் இருந்ததது எங்ஙனம்..?

அவ்வாறாய் நீ எண்ணுவையாகின்
அவிந்த எரிந்தமலை இல்லாத் தெருவே
எங்கள் மண்ணில் இல்லையே நண்ப

எத்தனை ஆண்டாய்
எத்தனை தடவைகள்
எத்தனை குழந்தைகள்
எத்தனை பெற்றோர்
இப்படி நடந்து களைத்துப் போயினர்..?
ஆயின்
என்னதான் முடிவு என்கிறாய்..?

எமது மண்ணின் அரசியற் தன்மைக்கு
வேட்டி அரசியல் என்பது
அதிகம் போனால்
இழவு வீட்டில் விளக்கு திரிக்கு
கிழிக்க பயனுறும்,
விளங்காதென்பதை அறிந்தே ஆயுதம்
துலங்கி மறைந்தது.
அதுவும் மறைந்ததா அடுத்தது என்ன..?

ஆயுதம் வரைந்த தேசத்தின் மாதிரி
ஆயுதம் வரைந்த அறிவின் நிச வழி
ஆயிற்று, எங்கள் மரபணு ஆயிற்று
ஆயுதம் என்பது ஆயுதம் அல்ல
ஆயுதம் என்பதும் அரசியல் தானே

ஆகையால் நான் சொல்வது எதுவெனில்

எந்த மொழியைக் கேட்டால்
எதிரியின் செவிக்கு
கேட்கும் சக்தி கிடைக்குமோ,
எந்த மொழியைக் கேட்டால் எம்மவர்
சொந்த மண்ணின் சூட்டை உணர்வரோ,
எந்த மொழியில் பலமாய் இருந்தால்
உலகை இயக்குவோர்
வந்து எங்கள் வாசலில் நிற்பரோ
அந்த மொழியே அடுத்தும் வழியென
அறிவோமாயினும் அவற்றுள் இருந்து
விட்ட தவறுகள் திருத்தி விரைவில்
விழித்துக் கொள்ள மறந்தோமென்றால்
நடக்கப் போகும் நாசம் பார்க்குமுன்
இன்றே செத்துப் போவது நன்று..


Monday 12 March 2018

உங்களை மன்னித்து அருளலாம்..

எங்கள் கனவு சுதந்திர வாழ்வு
உங்கள் ஆசை அகண்ட வேலி

வேலியை அகட்டும் வேலைக்கான
கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு
கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்
ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்
இருந்தும்
கனவின் தினவை கண்களில் ஏந்தியோர்
சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர்,

புராணகாலப் பொழுதில் இருந்தே
உமக்கு நாம் தான்
போரும் புகைச்சலும்

கடல் தாண்டி நீவிர்
கதியால் போட வந்தவேளை
மீண்டுமொருமுறை
எங்கள் பூஞ்சோலை
உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது
அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள்
ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம்
சிதைதலின் வலி எத்தகையதென்பதின்
நினைவூட்டல் அது,

அதன் பின் காலம் சுழன்று
நிழலின் பின்னே
நிசமாய் அரசு நிகழ்ந்தது

எத்தனை உயிர்களின்
எத்துணை வலிகளின்
எத்தனை ஆண்டுக் கனவது
திடுமென
கந்தகப் புகையாய் கடற்கரையொன்றில்
கரைந்து போனதன்
காரியம் மிக்க காரணப் பொருளாய்
நீரும் இருந்தீர்,

ஐந்தொகை இன்னும்
சமப்படவில்லை

வெள்ளையன் கட்டிய
உங்களின் தேசம்
சுள்ளி சுள்ளியாய் உடையும் வேளையில்
எங்கள் குழந்தைகள்
பெரிய மனதுடன்
உங்களை மன்னித்து அருளலாம்

அதுவரை..


Tuesday 6 March 2018

வளவொன்று வாசல் இரெண்டு..

ஓர் வளவில் குடியிருந்தோம்
எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே
பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

உங்கள் ரகசிய நடமாட்டங்களின்
காலடிச் சத்தங்கள்
எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க
எதேச்சையாகத் தான் கவனித்தோம்
விசாரிக்கத் தொடங்கிய வேளை
அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது
எமை நீர் அறுப்பதற்கு தயாரான
ஆயிரம் தடையங்கள்

கிழக்கிலும் நீரெம்மை
கிழித்துத் தொங்கவிடும்
மரணத்தின் சாக்குரல்கள்
அடிவயிற்றில் புரளத் தொடங்க
வேறுவழியெதுவும் இருக்கவில்லை

கீறோ, கிழிதலோ இன்றி
அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய்
விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம்
அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது
குலை குலையாய் எமையழித்து
அதைக் கொண்டாடும் அளவுக்கு
நிகழ்த்திக் காட்டினீர்கள்
எதிரியிடம் கூடக் காணாத வன்மமது

ஆயினும்
இப்பாலிருந்து மன்னிப்பும் இணக்கமுமென
எத்தனை முறை, எத்தனை பேர்
பலமாயிருந்த போதுகூட பல தடவை கேட்டோம்

அப்பாலிருந்தோ
ஓர் வார்த்தை, ஓர் வருத்தம்
ஒப்புக்குக் கூட ஓர் சொல்தானும்
என்றும் எழுந்ததில்லை,
இருக்கட்டும்.

எமக்கிடையே விருட்சமாகி நிற்கும்
இந்த பெருமரத்தின் விதையில்
எவரால் குரோதம் பதியம் செய்யப்பட்டது..?
எங்கள் கனிகள் உங்களுக்கும்
உங்கள் கனிகள் எங்களுக்கும்
எப்படி விடமாகிப் போனது..?

இவ்வளவின் பின்னரும் கூட
பற்றி எரிவதைப் பார்க்கிற போது
ஓடி வந்து தோள் கொடுப்போமென்று
உன்னிய போது தான் தெரிந்தது
எதிரியுடன் சேர்ந்து
எங்கள் கால்களையும்
நீங்கள் முடமாக்கி விட்டீர்கள் என்பது..