Monday 28 November 2022

பொட்டம்மான் அகவை 60


வெளியில் தெரியாத

விளக்கே உளவின் 

உளியில் எமை வார்த்த

கிழக்கே 

எளிதில் புரியாத 

மலைப்பே தமிழன்

அழியாப் புகழொற்றின்

தலைப்பே 


பெருங் கடலின் அடியில்

பெயரின்றி ஓடிநின்ற 

உருவங் காட்டாத ஆறே

ஒன்றாக நின்றோர்க்கு 

உருகும் மெழுகாகி 

உள்ளத்தைக் காட்டுமோர் பேறே


தேர் தெரியும் கண்ணில்

தெரியாத சில் அச்சாய் 

போர் நடத்தி சென்றிட்ட

புதிரே

யார் அறிவார் முடிவை 

என்றின்னும் சொல்கின்ற

ஊர்சுவடும் மறைவான

ஒளியே


நீருள்ளால் நெருப்போடு

நீந்திக் கடக்கின்ற 

போர்முறை சித்தித்த  பொறையே 

தலைவனின் நிழலாகத் 

தாளாத வானாக 

நிலையென்றும் தளராத 

நிறையே 


பொட்டில் உந்தனது

போம் வழியைச் சுமந்து கொண்டே 

எட்டி நடக்குமெங்கள் 

பயணம், 

எது வந்த போதும் 

என்றைக்கும் மாறாது 

ஒரு போதும் சிதறாது கவனம் 


எந்தக் கனவுக்காய்

இத்தனை நாள் நடந்தோமோ

அந்தக் கனவை நாம்

அடைவோம், 

எந்தக் கனவுக்காய் 

இத்தனையைச் சுமந்தோமோ 

அந்த நிலத்தை நாம் பெறுவோம்


எம்மானம் மீட்டெடுத்து 

எமக்கான தமிழ் நிலத்தில்

அம்மானை பாடி 

ஆடிக் களித்திடுவோம்

எம்மானம் மீட்டெடுத்து 

எமக்கான தமிழ் நிலத்தில்

அம்மானைப் பாடி 

ஆடிக் களித்திடுவோம்..

Friday 25 November 2022

ஈழ மண்ணின் காற் தடமே..

நெய்தல் நிலம் உற்பவித்த 

எங்களின நாயகனே 

உய்யவென காணும் வழி நீ ஐயா 

உந்தன்

பாதை ஒன்றே மீளும் வழி தானையா 


கண்ணிறைய உன் நினைவு 

காலமெல்லாம் உன் கனவு

மண்ணிறைய தேசம் இனி பூக்குமே 

இதழ் ஒவ்வொன்றையும் 

உந்தன் எண்ணம் ஆக்குமே.. 


ஈழமண்ணின் காற்தடமே 

எம்மினத்தின் போர்க்குணமே

ஆளும் தமிழ் வாழும் வரும் காலமே அதில் 

கோலம் பெறும் ஆகும் தமிழ் ஈழமே..

Wednesday 16 November 2022

உலகு தன்பாட்டில் உருளும்..

 கண்ணெட்டிய தூரம்வரை 

யாருமற்ற மலைப்பாதை

என்பைத் துளைக்கும் 

குளிர்ப் புகை மண்டிய 

சறுக்கு வழியில் 

வேறெவர் தான் வெளியே வருவார் 

என்றெண்ணியபடி 

வலது புறம் திரும்புகிறேன் 

ஆபத்தான ஏறுவழிப் பாதையில் 

எதையோ சுமந்து கொண்டு 

ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான் 


மாலை மங்கி இருள்கிறது 

உப்புக் காற்றின் ஊழையும் குளிரும் 

காதையும் தோலையும் பிளக்க 

எவருமற்ற அட்லாண்டிக் கடற்கரையில் 

சூன்யமான வாழ்வின் 

சுவையற்ற சுவையை

கண்ணெதிரே சூரியனை விழுங்கும் 

கடல் போல் 

தொண்டையுள் மிண்டி விழுங்குகிறேன் 

பார்க்கப் பார்க்க விரியும் 

தொடுவானக் கடலின்  கரை மணலில் 

ஒற்றைப் புள்ளியாய் 

நான் மட்டுமே இருப்பதாய் 

எண்ணும் பொழுதில் 

வெகு தூரத்தில் 

கரும்புள்ளியாய் ஓர் படகு 

கடைசி நேரச் சூரியனைக் கடக்கிறது 


தூக்கம் அறுந்த நள்ளிரவில்

இனியும் புரண்டுபடுக்க இயலாமல் 

பற்கள் நடுங்கி அடித்துக் கொள்ள 

வீட்டருகே ஓடும் ஆற்றங்கரை வழியால் 

தனியே நடந்து செல்கிறேன், 

அரவமற்ற இருள்

உலகே உறைந்து உறங்கும் வேளையில் 

நான் மட்டும் விழித்திருகிறேனோ.. 

எண்ணியபடி 

விரிந்து கிடக்கும் வானத்தை 

வெறித்துப் பார்க்கிறேன் 

விண்மீன்கள் போல் 

நாலைந்து விமானங்கள் 

இங்கிருதங்காய்

அங்கிருந்திங்காய் 

வேகமாய் தம் பாதையில் விரைகின்றன


நண்பா

நானற்ற காலத்தில்

எப்படி வாழ்வரோ 

என்ன தான் ஆகுமோ 

அதிகமாய் ஏதும் எண்ணாதே


நீ விடைபெற்ற 

மறு கணத்தில் இருந்தே 

எதுவுமே நடவாதது போல் 

உலகு தன்பாட்டில் உருளும்..