Friday 17 January 2014

கைகளை இழந்த கணையாளி..

எல்லாமே புதையுண்டு போயிற்று
இப்போதெல்லாம் நீ
நினைவில் எழுவதில்லை
அகழ்ந்தெடுக்கும் சாத்தியத்தையும்
அடித்துச் சென்றுவிட்டது
காலக் கடல்கோள்
சிதிலங்களைக் கூட்டியள்ளி
துடைத்தெடுத்தாலும் கூட
அது இனித் தொல்பொருள் தான்
வட்டப்பாதையில்
என்றேனும் ஒருநாள்
எட்டிப்பார்க்க மட்டும் இனிது

மற்றபடி இன்றைக்கு
எழுதுகிறதா என
புதுப்பேனாவைக் கிறுக்கிப்பார்த்த போது
நினையாப் பிரகாரமாய்
உன் பெயர் தோன்றியிருப்பது
குறட்டை போல்
நானறியாமல் நிகழ்ந்த ஒன்று
திக்குவாய் மூச்சின்
திணறல் தான் குறட்டையெனில்
ஒப்புவமைப்படி
மூச்சிலின்னும் நீயிருப்பதாய்
முடிச்சுப் போட்டால்
நானல்ல அதற்குப் பாத்திரவாளி

கூர் முள்ளில் வாழைக்குருத்தாய்,
அடிபெயர்ந்து வீழ்ந்த பெருமரத்தின்
நடுங்கும் இளந்தளிராய்
முடங்கிப் போயிருக்குமென் வாழ்வு
தோள் கூடத்திருப்பவியலாதோர்
ஒற்றையடிப் பாதை.

கால்களின் கீழே காலநீரோட்டம்
பாதங்களைப் பதிக்கவிடாமல்
பலவந்தமாய் இழுத்துச் செல்கிறது
ஓடி இழுபட்டு
எதுவெதுவோ வாழ்விலாகி
இப்பொழுதில்
கோளக் கடிகாரத்தின்
வட துருவத்தில் நீ
தென் துருவத்தில் நான்
இதற்குள்
அரைவாசி ஓடிற்று ஆயுள்

போதும்
பருவகாலம் மாறுமென்றெல்லாம்
இனிப் பாடமெடுக்காதே
இலையுதிர்ந்த இளம் மரத்துக்குண்டே தவிர
பட்ட மரத்துக்கேது சொல்
வசந்த காலம்?
கைகளை இழந்த பின்னால்
எதற்குத்தான் கணையாளி?