Sunday, 31 March 2013

கனவு காத்திருக்கிறது..

காலத்தை மீறிய
கனவொன்றும் இல்லையிது
வாழ முடியாததொன்றை
வாழ்வதற்கும் எண்ணவில்லை
ஆசைகள் கூட அந்தளவு பெரியதல்ல
நேசிக்கும் ஓரிரெண்டு
நெருங்கி நிற்கும் உறவோடு
வாசமிகு என் மண்ணில் வாழ்தல்
வாழ்தலென்றால்

மாரில் மகனும்
மறு தோளில் மனைவியுமாய்
ஈரம் சொரிகின்ற காற்றில்
எமை மறந்து
ஆழ்ந்துறங்கும் போதில்
ஆரேனும் கதவினிலே
தட்டுகின்ற ஒலியென்னைத்
தட்டுவதற்கல்ல, மாறாய்
கட்டிக் கை குலுக்க
என எண்ணும் ஓர் வாழ்வு!

பனங்கூடல் நீக்கலிடை
பழம் போலத் தொங்குகின்ற
மனதின் பிரதிமையாய்
மதி ஒழுகும் ராத்திரியில்
என் தேசப்படலொன்றை
எடுப்பாய் பெருங்குரலில்
கண்ணாலே மகிழ்வீரம்
கசிய, வீதியிலே
பாடிச் செல்கின்ற
பலனுள்ள ஓர் வாழ்வு!

கண் முன்னே கொத்தாகக்
கருகி விட்ட எம் மக்கள்
மண்ணுக்காய்த் தம்முயிரின்
மார்பு தந்து போனவர்கள்
இன்னும் எங்கெங்கோ
எமக்காக வாழ்ந்தவரின்
ஆத்மாவின் தாகத்தை
அனுட்டிக்கும் தினமொன்றில்
எம் மண்ணின் நினைவிடத்தில்
எல்லோரும் கூடி நின்று
ஆன்ம விளக்கேற்றி
அன்பொளிர்க்கும் ஓர் வாழ்வு!

தேகம் சிலிர்க்க வைக்கும்
தேசியக் கொடி ஏற
ஆகுதியாய்த் தம்மை
ஆக்கியோர் உயிரிருந்து
சொல்லெடுத்து வனைந்த எம்
சுதந்திர கீதத்தை
உள்ளன்பால் உணர்ந்து
ஒருமித்து எம் மக்கள்
இதயத்தால் பாடுகின்ற
எழுச்சிமிக்க ஓர் வாழ்வு!

வாழ்வோட இயல்பாக
வலிய விதி வந்தென்னை
சூழ்ந்தழைத்துச் செல்கையிலே
சுகமாக என் மூச்சை
ஆழ்ந்திழுத்து என் மண் மேல்
ஆறுதலாய் விடும் போது
வாழ்ந்ததன் அடையாளமாய்
வட்டச் சிறு குழியாய்
இறுதி மூச்சுப் பட்டென் மண்
இங்குமங்கும் அரங்குகின்ற
அசைவுக் காட்சியை நான்
அனுபவித்துப் பார்த்தபடி
கண்ணை மூடுகின்ற
கலாதீதம் பெறு வாழ்வு!


இவ்வளவு தான் கேட்டேன்
இன்றுவரை நல்லூரான்
எவ்வளவு கெஞ்சியும் இரங்கவில்லை
என் செய்வேன்..!Wednesday, 6 March 2013

தேம்பும் உயிரின் தினவு..இதமான கனவுகளுடன் அழகொழுக
என் காலைகள் விடிவதாயும்
ஏதோ ஓர் தீவின் மூலையில்
யாரென்றே தெரியாதவர்களுடன்
வாழப் பணிக்கப்பட்ட இந்த அறைதான்
மகிழ்வு தரும் என்னுடைய வீடென்றும்
இப்போதெல்லாம் நான்
நம்பத் தொடங்கி இருக்கிறேன்
அப்பா என்பவர்
ஸ்கைப்பில் மட்டுமே வர முடியுமென
என் மகன் நம்பி இருப்பதைப் போல

குத்தும் குளிரம்புகளை ஏந்தியபடி
அட்லாண்டிக் பெருங்கடலைத் தேடி
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
மிதந்துசெல்கின்ற பந்தொன்றைக் காட்டி
நாளை மாலை
மலைக்கு அப்பால் உள்ள மறுகரையில்
நாமிதனை எடுக்கலாமென
நம்பிக்கையுடன் சிறுவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஜோசியன் சொன்னபடி
இந்த ஐப்பசிக்குள் எப்படியும்
தன் மகனுக்கு விடுதலை கிடைத்துவிடுமென
அம்மா சொல்லிக் கொண்டிருப்பதைப் போல


மாற்றாடை இல்லாவிட்டாலும்
மனசுடையாமல்
உடற் சூட்டில் உலர்ந்து விடுமென்ற அனுபவத்தில்
மழையில் நனைந்து போன தன் சேலையை
உதறி உடுத்துக் கொண்டு
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
ஓர் ஏழைப் பெண்ணைப் போல
நனைந்து போய்க்கிடக்கும்
நள்ளிரவு வீதியின் நடைபாதை
நிலச் சூட்டில் உறங்கிக் கிடக்கிறது
களைத்த நினைவு
கண் செருகத் தொடங்க
ஒற்றைக் காலை
சுவரில் ஊன்றிக் கொண்டு
தேம்பும் உயிரை
தேற்றிக்கொண்டிருக்கும் என் காதில்
யாரோ சொல்கிறார்கள்

‘வதைப்பவனுக்கு ஆன்மா இருளும்
வதைபடுபவனுக்கே ஆன்மா விழிக்கும்’அன்பெனும் தனிமை..


மஞ்சட்பூச் சணல்வயலின்
மத்தியிலே தனியாக
எஞ்சிப் போய் நிற்கும்
இருட் பச்சை மரம் போல,
வெட்டிரும்பாற் பிளக்கேலா
வீரியப்பாறையினை
தட்டிப் பிளந்துவிட்டுத்
தனியாக நிமிர்வோடு
எட்டிப் பார்க்கின்ற
இளங்குருத்துத் தளிர்போல
தனித்துவமாய் வாழ் பழகும்
தளராத மனமொன்றை
உனையே அறியாமல்
உள் அறையும் உன் தனிமை

தனிமையெனும் ஊற்றிற் தான்
தவிப்புயிர்க்கும் அன்பூறும்
தனிமையெனும் காற்றிற் தான்
தான் பறந்து தாமாகும்
தனிமையெனும் வானிற் தான்
தனையறியும் வெளி தோன்றும்
தனிமையெனும் தீயிற் தான்
தனைப் புடமாய்த் தான் போடும்
தனிமையெனும் நிலம் மீதே
தன்னலங்கள் அற்ற விதை
இனியநறு மணத்தோடு
எழும், இவ்வுலகில்

தனிமையெனும் தேன் சொட்டத்
தவம் செய்த ஒருவனுக்கே
புனிதமாய் அன்பு வரம்
பூக்கும், ஏனெனிலோ
அவனடையும் இன்பம்
ஆர் கொடுத்தும் வந்ததல்ல
அவனாய் அளைந்தளைந்து
ஆக்கியது, ஆதலினால்
எவர் வந்து,போனாலும்
இவன் மனது ஒன்றே தான்
அவர் வந்து அணைப்பதற்கும்
அகல்வதற்கும் சுதந்திரத்தை
இவன் தனிமை கடலாய்
இறைத்து முன்னே விட்டுளது

எவருமிவன் அடிமையில்லை
இவனெவர்க்கும் அடிமையில்லை
என்கின்ற மெய்ம்மையெனும்
ஏகாந்தப் பெருவெளியில்
கண் தின்னும் காட்சிகளை
கவிதைகளில் தைத்து விட்டு
வண்ணக் கனவுகளால்
வார்த்துள்ள பாதைகளில்
எண்ணம் செயலறுந்த
இருமையற்ற நிலை கூட
விண்ணாகி விரியும்
வெளியாகிப் போய் விட்டான்..