Tuesday 7 February 2012

எங்கேயோ இருக்கிறீர்கள்..?

எனக்குத்தெரியும்
நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்
கடைசியாக நீங்கள் வேலையால் வந்து
கழற்றிப்போட்ட ஆடைகள்
உங்களில் நான் கிறங்கும்
அதே வியர்வை மணத்துடன்
கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது..

அன்றிரவு அவர்கள் உங்களை
அடித்து இழுத்துச்சென்ற போது
நான்கதறிய கதறல்
இப்போது ஒவ்வொரு வீடாய்
கேட்கத்தொடங்கி இருக்கிறது

காலையில் எழுந்து
அப்பா எங்கே என மகன் கேட்டான்
எப்படித்தான் காணாமல் போனமை பற்றி
அவனுக்கு நான் விளக்க முடியும்..?
வருடங்கள் உருண்டோடி விட்டன
காலமும் மனிதர்களும்
எதுவுமே நடந்து விடாதது போல்
போய்க் கொண்டிருக்கிறார்கள்...!

உங்கள் நெஞ்சில் இருந்து
துள்ளுவது போலவே
நேற்றைக்கு மாலையும்
என் மார்பில் குதித்தபடி
அப்பா புராணம் பாடிக்கொண்டிருந்தான் மகன்,
பொறுக்க முடியாமையின் விளிம்பிலும்
காலநீட்சியின் விரக்தியிலும்
அப்பா அப்புச்சாமியிடம் போய்விட்டார்
எனச்சொல்ல வாயெடுப்பேன்
ஆனால் ஏதோ ஒன்று
உள்ளிருந்து தடுக்கும்

எத்தனையோ இரவுகள்
தலையணையைக்கட்டி அணைப்பதும்
வெறுங்காற்றில் காலைத்தூக்கிப் போடுவதுமாக
கழிந்துவிட்டன..
ஜோசியர்கள் சொன்னபடி
ஈசானமூலை, அக்கினிமூலை என
அத்தனை திசைகளிலும் உள்ள
இராணுவ முகாம்களிலும்,
நடுநிசியின் நாய்க்குரைப்பு
ஓசைகளைக் கிழித்தபடி
வாசலில் நின்று செல்லும்
வாகனங்களின் பின்னாலும்
பல ஆண்டுகளாக
ஓடிக்களைத்து விட்டேன்,
உண்மையில்
உங்களைத்தேடி நான் ஏறாத
வாசல்கள் இல்லை
சுவர்க்க வாசலைத்தவிர,

நான் உணர்ந்து கொள்கிறேன்
என்னுடைய இந்தப்பிறப்பின்
வாழ்க்கைக்காலத்தில்
இனி ஒருபோதும்
உங்களை நான் காணப்போவதில்லை..
ஆனாலும் இப்போது கூட
உள் மனசு சொல்கிறது
நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்...?

2 comments:

  1. வருந்தி அழ வைக்கிறது உம் கவிதைகள்!...ஜூவி யில் நீங்கள் எழுதிய கவிதையின் தலைப்பைபோல (அழுவதற்கேனும் அனுமதியுங்கள்!), சுதந்திரமாய் அழக்கூட உரிமையில்லை எமக்கு! இலங்கையென்ன, இந்தியாவென்ன..எங்கிருந்தாலும், தமிழன் அகதியாகத்தான் இருக்கிறான்... தொடும் தூரத்தில் நீங்களிருந்தும், அங்கு நடந்த இனப்பேரழிப்பைக்கண்டு, வெதும்பி விம்ம மட்டுமே எம்போன்ற தாய்த்தமிழகத் தமிழர்களால் முடிந்தது!...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய முடியும் அணையான், சபிக்கப்பட்ட இனமாகிப் போனோம் நாம், மிக்க நன்றி

      Delete