Tuesday, 24 April 2012

கண்ணாடி முன்னின்று கதைத்தல்..

உனைச் சுற்றி இருந்தோர்கள்
ஒவ்வொருவராய் மெல்ல
தனக்கான வேளை வந்துவிட சிரித்தபடி
தலையாட்டி விடைபெற்றுப் போய்விடவும்
இப்போதில்
நீயும்,கவிதைகளும் நெடுமூச்சு வளர்கின்ற
நினைவுகளும் மட்டும் எஞ்சிக்கிடக்கின்றீர்

எல்லோரும் போய் உன்னை
ஓர் புறத்தில் தனியாக
சொல்லாட விட்டு விடும்
சுகம் உனக்கும் பிடிக்கும் தான்

எதை நினைத்துக் கொண்டிப்போ
இருக்கின்றாய் என்பதுவோ
இதையிப்போ ஏன் நினைத்தாய்
என்பதுவோ இப்போதில்
உந்தனுக்கு ஏனோ ஒன்றும் புரிவதில்லை

எதுவோ ஒன்றை நீ
எண்ணுதற்குள் விரைவாக
அது உன்னைக் கடந்து
அப்பாலே செல்கிறது

எதற்காக நீ இப்போ
இரங்குகிறாய் என்பதுவோ
எதற்காகச் சிரிக்கின்றாய்
இடிகின்றாய் என்பதுவோ
உனக்கிப்போ ஒன்றும்
உறைப்பதில்லை, உன்னுடைய
கவலைதானென்ன? ஏன்
கலங்குகிறாய் என்பதுவும்
உனக்கே நிசமாக
ஒன்றும் தெரியாது

கண்கள் நிலைக்குத்தி
ககனத்தில் அலைகிறது
உன்னிதயத் துடிப்பை நீ
உணருகிறாய், தலைகோதும்
அன்பான ஓர் வார்த்தை
ஆறுதலாய்ச் சாய்ந்து விட்டு
தெம்பாக எழுந்திருக்கத்
தெய்வீக மடி ஒன்று
என்பாலும் வாராதா
என்றெண்ண அலைஅலையாய்
தன் பாலம் கடந்தவையும்
தாண்டி எங்கோ போகிறது

வெடித்தது போலுள்ளே
வீணிதயம் வலித்தாலும்
உடைந்து விடாதென்ற
உறுதி உனக்குள்ளே

உனக்கான ஓர் நாடு
உயிர் நீத்த வீரர்கள்
தனக்கான வாழ்வைத்
தவிர்த்து அவர் கொடுத்த
விலைகள், அதற்கின்னும்
விடையில்லை என்பதுவும்
உலைபோல ஒரு பக்கம்
உருகிக் கொதிக்கையில் நீ
மலை உடைந்து வீழ்வது போல்
மனம் வீழ்வாய், உனக்கிப்போ

வழங்கப்பட்டுள்ள வாழ்வினையும்
நீ கண்ட
வலிகள் நிறைந்தூறும்
வழிகளையும் என்னாலே
வாழ்க்கை என்ற சொல்லாலே
வரைந்து விட முடியவில்லை
வாழ்க்கை என்கின்ற
வலிமை நிறை சொல்லுக்குள்
போக்கறுந்த உன் வாழ்வு
பொருந்தாது ஆதலினால்

உன் போக்கைச் சொல்லுதற்கு
உரிய தகு சொல்லொன்றை
எனக்கான மொழியெங்கும்
இயன்றவரை தேடுகிறேன்
எப்படியும்
வார்த்தையை வனைந்தெடுத்து
வருவேன் அதற்குள் நீ
சோர்ந்துந்தன் ஆயுளுக்குச்
சோரம் போய் வீழாதே
சேர்ந்து வருவேன் நான்
சிந்தாதே அது மட்டும்
ஊர்ந்து போகும் உன்
உயிரை விரைவாக
ஓடிப் போவதற்குத் தூண்டாதே
வருவேன் நான்..

No comments:

Post a Comment