Saturday 21 April 2012

இருப்பேன் நான் இறந்து போகேன்..

வார்த்தைக் கைகளினால்
வளமாக என்காலை
சேர்த்துப் பிடித்தெந்தன்
சித்தம் மனமெல்லாம்
நீர்த்துப் போம்படியாய்
நினைவறுந்து விழும் வரைக்கும்
துணியொன்றைத் தூக்கி
துவைப்பதற்கு அடிப்பது போல்
எந்தன்பைத் தூக்கி
இயன்றவரை பலம் சேர்த்து
உறவுக் கல் நடுவே
ஓர் வெடிப்பு விழும் படியாய்
கரவுத் தோள் சுழற்றி அடி
கலங்கேன் நான்

பொத்தல்களாய் நான்
போய்விடுவேன் என்றுந்தன்
சித்தத்தில் யாரோ
சீற வைத்த விடப்பாம்பின்
நச்சுப் பற்களினால்
நானான கீரியினை
உச்சத் தந்திரத்தால்
ஓங்கி அடி, அப்போதும்
காலமெனும் மூலிகையில்
கால் பிரட்டி உருண்டு விட்டு
வேழம் போலெழுந்து நிற்பேன்
வீழ்ந்து விடேன்

என்னுடைய உயிரணுவில்
இருந்துதித்த சூரியனை
உன்னுடைய வைக்கோலுள்
ஒழித்துவைக்கப் பார்க்காதே
தன்னுடைய காலம்
தளிர்த்து வர அது எழுந்து
தான் வந்த மூலத்தைத்
தேடும், கோபத்தில்
ஏனென்று கேட்டுன்னை
இருட்டுக்குள் போட்டெரிக்கும்
உன்னுடைய கள்ளத்தை
உரிக்கும், தன் கதிரால்

என்னுடைய கவி மனசின்
இயல்பறியும், புரிகையிலே
விண்ணுயர எழுந்தெங்கும்
வியாபிக்கும் எந்தனது
இருப்பு நீரூற்றாய்
எழுந்து நிறைந்தோட
உருப் பெற்றுயிக்குமென்
ஒண் கவிகள் இறவாத
வரம்பில்லாக் கால
வானத்தை வடிவமைக்கும்

நரம்பறுந்து நாடி வீழ்ந்தன்று
நாதியற்று
வரம் தர வேண்டி
வருவாய் நீ அன்றைக்கு
பரம் இகம் தெரியாப்
பக்குவத்தில் நானிருப்பேன்
உருக்குலைந்த உறவை
ஒட்டுகின்ற மனசென்னுள்
எரிந்தவிந்து போயிருக்கும்
என்பதனால் உன் பின்னால்
திரும்பி வர மாட்டேன்
திரும்பி நீ பார்க்கின்ற
திசையெல்லாம் ஒளி சிந்தும்
திசையாவேன் ஊழிவரை
இசை சொட்டும் பாட்டாக
இருப்பேன் இறந்து விடேன்..

No comments:

Post a Comment