Friday, 6 April 2012

ஆண்டுகளை ஊடறுக்கும் அவள்..

மார்மேலே சாய்ந்திருந்து
மலரிதளின் விரல்களது
கூர் நிகத்தால் மெல்லக்
கிழித்தும் கிழிக்காமல்
ஒவ்வொரு முடியாக
எண்ணுகிறேன் என்றபடி
இவ்வுலகு எனக்கீந்த
இன்பத்தின் நாட்களினை
எவ்வள வெவ்வளவோ
எனக்காகத் தந்தவள் தான்

வரச்சொன்ன நேரத்தில்
வந்திடுவாள் என்றெண்ணி
இருந்த வேலை எல்லாம்
எறிந்து விட்டுப் போய் நின்றால்
காலிரெண்டும் நோவெடுக்கக்
கால்மாற்றிக் கால்மாற்றி
ஏலாதினி என்ற நிலையினிலே கடுப்பேறி
இவளோடினி என்ன பேச்சென்று வைதபடி
இறங்கிப் போவமென நினைக்க
சிரித்தபடி
எங்கிருந்தோ வீதி கடந்தோடி வந்தெந்தன்
விரல்களுக்குள் விரல்களினைக் கோர்த்து
என் கண்ணை
இமைக்காமல் நோக்கி ஏதேதோ சொன்னபடி
சொண்டிரெண்டைக்
குவித்துச் சுழித்திடவும்
சுர் என்ற கோபமெல்லாம்
தணிந்திறங்கிச் சுழன்றவளின்
முன்விழுந்து சரணடைந்து
கர்வத்தை இழந்து
கால் பிடிக்க வைத்தவள் தான்

வெற்றி என நினைத்த
விளையாட்டில் தோற்றுவிட்டு
குற்றம் செய்தவன் போல்
குனிந்தடங்கித் தலை கவிழ்ந்து
பெற்றவர்கள் சோதரங்கள் எத்தனையோ
மற்றுமெந்தன்
உற்ற நண்பர்கள் சூந்து நின்று
எந்தனுக்கு
எத்தனையோ ஆறுதல் சொல்லியும்
முடியாமல்
இற்று நானுடைந்து போயிருந்த வேளையிலே
சற்றுமெதிர் பாராமல் வந்துள்ளே
என்னுடைய
பிடரிமுடி தன்னுள் விரலோடி
சொண்டீரம்
காதின் கரை நுனியைக் கவ்வ
மெதுவாக
விடடா எழுந்திடடா
வா வெளியே போவமென
அடடா! ஓர் மொழியிற் சொன்னாள்
அப்பொழுதில்
இன்னொருக்கால் தோற்றால்
என்னவென என் மனது
தன் நிலை விட்டுத் தவிப்பதற்கு
வைத்தவள் தான்

சொன்னதெல்லாம் செய்து
சுகம் வளர்த்து விட்டவள் தான்
சொல்லாத பல செய்தும்
சுழன்றாட வைத்தவள் தான்
என்னுடலின் வாசம்
இதுவென்று இழுத்துள்ளே
தன்னுடலின் வாசச்
சுவையோடு தந்தவள் தான்
என்னுள்ளும் கவி மனது
இருக்குதென்று நானுணர
பன்னூலாய் நான் படித்த
பாட்டாக இருந்தவள் தான்

நீண்ட வழி நடந்து
நிறை காட்டின் அடர்வுக்குள்
பூண்டான திசைப்புல்லில்
மிதித்தவர்கள் எப்போதும்
மீண்டுவர இயலாமல்
மீண்டும் மீண்டுமந்த திசைப்
பூண்டினைச் சுற்றித்
திரிவது போலென் மனசை
ஆண்டு தன் கையுள்
அடக்கி வைத்திருந்தவள் தான்

இப்படியே
எப்படியோ எல்லாம்
எனையாக்கி வைத்து விட்டு
தப்பான காலப் படகில் காலூன்றி
எப்படியும் வருவேன்
இரு என்று சொல்லி விட்டு
போகின்றேன் என்றன்று
புறப்பட்டுப் போனவள் தான்

இன்றைக்கும்
ஏதோ விதி ஒன்றால்
எனை வழியில் சந்தித்து
என்னோடு சேர்ந்து நடந்தவர்கள்
இடைவெளியில்
காரணங்கள் ஏதுமற்ற
காரணத்தைச் சொன்னபடி
கை காட்டி விலகிக் கடக்கையிலே
அவள் அன்று

போகின்ற போதில் என்
புறக் கண்ணில் உடற் தோற்றம்
பாகம் பாகமாக மறைந்திடவும்
பொறி கலங்கி இதயத் தூண்
அறுத்தெறிந்த பல்லி
வாலாக ஆகி எந்தன்
அடி வயிற்றுள் அவள் இதயம்
அதிர்ந்தது போல் இன்றைக்கும்
ஆண்டுகளை ஊடறுத்து
அவள் நினைவு மீண்டுயிர்த்து
தோண்டி அத் துடிப்பை
துடி துடிக்க வைக்கிறது..

No comments:

Post a Comment