Tuesday 10 April 2012

எல்லாம் நன்மைக்கே ..

வீட்டின் விருப்பம் போல்
விளங்கத்தான் முடியவில்லை
நாட்டின் விடியலுக்கு
நம்மவர்கள் செய்கின்ற
கூட்டு முயற்சிக்கேனும்
கொடுப்போமெம் தோளை என
நன்றாகப் பட்டுணர்ந்து
நடை முறையை உள் வாங்கி
வென்றாக வேண்டும் எங்கள்
விடுதலையை என்பதற்காய்
சென்றிருந்த காலங்கள்
சில ஓட ஊரெல்லாம்

போரின் கறுத்த மேகங்கள்
பொழிந்திறுக, பொறி தாண்ட
நீருள்ளால் நெருப்பை
நிசப்தமாய் நனையாமல்
நீந்திப் போவதொத்த
நெடும்பாதை என்பதனால்
அத்தனை காலமாய் சேர்த்துவைத்த
அத்தனையும்
மொத்தமாய் தூக்கிப் போட்டுவிட்டு
வெறுங்கையாய்
செல்வதற்கு மனமின்றி நிற்கையிலே
என் அம்மா
எல்லாம் நன்மைக்கே
எழும்பு எனஅனுப்பி வைத்தார்

ஊர் விட்டுப் போன பின்பும்
உழுதல் தொடர்ந்திடவும்
நார்நாராய் நகம் நகமாய்
நம்மை அவன் கிழித்தெறிய
நாட்டை விட்டு அயல்
நாட்டுக்கு நடைப்பிணமாய்
செல்லும் விமானப் பாதையிலும்
அம்மா தான்
எல்லாம் நன்மைக்கே
ஏறென்று ஏற்றி விட்டார்

நாட்டை விட்டு விட்டு
நாம் நகர்ந்து போனாலும்
போட்டிடலாமோ எம்
பொறுப்பை எனப் புறப்படவும்
நாடி நரம்பாகப் பிரித்தெடுத்து
நம்மை அங்கும்
போட்டுள்ளே பூட்டி வைத்திருக்க
எப்படியோ
தொலைபேசித் தொடர்பெடுத்த
அம்மா பெருமூச்சோடு
அலைபோல எனையடித்த வார்த்தை
‘அப்பாடா
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தாய்
என் பெருமான்
எல்லாமே நன்மைக்கே இடியாதே’
என்பது தான்

எப்படியோ அங்கும் இழுத்துச் சுழித்தோடி
தப்பி ஒரு கண்டத்தைத் தாண்டிவிட
எல்லையிலே
அப்படியே பிடித்தென்னை
அந்தக் களைப்போடே
அடரிருட் சிறைஒன்றுள்
அடைக்க அதனாலும்
தப்பி வரும் சட்டங்களூடு
தாள் திறந்து
இப்போது பொது வெளியில்
இருந்தாலும் எனைச் சுற்றி
அந்த நிழற்படிவு
அகன்ற பெருந்தனிமை
இந்த நாட்டின் வெளிகளிலும்
இன்றுவரை
என்னை விட்டகல முடியாமல் இருக்கிறது
காலநீட்சி தந்த
களைப்பில் கலக்கத்தில்
ஏலும்வரை சொல்லி வந்த
அம்மாவும் இப்பொழுதில்
எதுவுமே எனக்குச் சொல்வதில்லை
என்றாலும்
எதிர்காலம் என்கின்ற
ஏதேனும் ஓர் கீற்றும்
இனி முன்னே எழும்பாது
என்பதனை உணர்ந்தாலும்

காலம் மிகப்பெரிய
கடப்பாரை தன்னாலே
கீலம் கீலமாய் எனைக்
கிழித்துப் பார்ப்பதெல்லாம்
ஏதோ நான் வருந்தி
எழுதுதற்கோ? என்றபடி
எனக்குள்ளே நானிப்ப
எப்பொழுதும் சொல்லுகிறேன்
எல்லாம் நன்மைக்கே
எழுதடா நீ எழுதி நட..

No comments:

Post a Comment