Tuesday 24 April 2012

உரமாக்கப் போகின்றாய் உனக்கு..

உன்னினைவுப் பார்வையினில்
ஒழிப்பதற்காய் விரைவாக
என்னால் இயன்றளவும்
இழுத்தோடி தெருத்தெருவாய்
பாய்ந்து கடந்து படபடக்கப்
பதுங்கி மெல்ல
எனைத் தொடர்ந்த படியா நீ
இன்னும் வருகின்றாய்
எனத் திரும்பிப் பார்த்தால்
என் முதுகின் பின் அப்படியே
பார்த்தபடி தொடர்கின்ற
பாழ் நிலவினைப் போல்
வேர்வை மணம் சொட்ட
விம்மலுடன் உடல் சிதைந்து
படிம உருவாக என் முன்னே
படர்ந்து, நானும்
ஊரைத் தேசத்தை
உப கண்டம், கண்டத்தை
ஓடிக் கடந்தும்
ஒற்றன் போல் என் பின்னால்
தேடி வருகின்ற என்
தேசப் பளிங்கே பார்..!

தூரம் கடந்தோடத்
துடிப்பின்னும் கூடுவதை
ஆரிதயம் இப்படியாய்
அடிக்கிறது? நெஞ்செரிந்து
ஊரெரிந்த வெக்கை
உள்ளே கொதிக்கிறதே
என் பின்னால் ஓடி நீ
இவ்வளவும் வந்து விட்ட
களைப்பா இப்படியாய்
கடகடென்று அடிக்கிறது
ஒருவேளை
உன் துடிப்பா என்னுள்
ஒலிக்கிறது இல்லையெனில்
என் துடிப்பா உன்னுள்
ஏனெனிலோ துடிப்புகளுள்

கையறு நிலையில்
கையறுந்து வீழ் நிலையின்
ஒப்பாரி கூச்சல்
உடைந்தலறி விழுகின்ற
உயிர் கதறும் ஓசை
உஸ்ணப் பெரு மூச்சு
வார்த்தைகளில் வர முடியா
வதையின் கொடுமைகளை
கையிரெண்டால் மண்ணள்ளிக்
கசக்கி முனகுகின்ற
காதுச் சவ்வறுந்து
கலங்கடிக்கும் ஈனஸ்வரம்
நெஞ்சின் செவிப்பறையில்
நெருப்பூற்றி கருக்கிறதே
காலிரெண்டும் நடுங்க
கட்டறுந்த கை நரம்பு
ஓலத்தில் உதறுகின்ற
உயிர் வதையைத் தாங்காமல்
நெஞ்சு முடி பிய்த்து
நெடுஞ்சாணாய் வீழ்கிறதே

ஒற்றைக் காலூன்றிச்
சிவர் மேலே சாய்ந்து நின்று
உள்ளிழுத்துப் புகையை
ஊதி, பெண்களினை
ஓரத்தால் பார்க்கின்ற
ஊன் தேவை அறுந்தின்று
பால் வேறு பாடெரிந்து
படர்கிறதே பார்வைகளும்
என்னைக் கடக்கின்ற
எவரேனும் எனக்கிப்போ
ஓர் நிழல் உருவாய்த் தான்
உள்ளே தெரிகின்றார்
பைத்தியமா எனக்கென்று
பார்க்காதே என் மண்ணே!
உந்தனது நடையின்
ஒவ்வோர் அடி வைப்பும்
எந்தனது காலுக்குள்
இப்பொழுதும் அதிர்க்கிறது

உன்னைப் பிரிந்தென்று
ஓரடியை வேற்றிந்த
மண்ணில் நான் வந்து
மரித்துப் போய் வைத்தேனோ
அன்றிருந்து உறவெல்லாம்
அறுந்தறுந்து ஒவ்வொன்றாய்
என்னைத் தனியாக
எறிந்து விட்டுப் போகிறது
முதல் வீழ்ச்சி கொஞ்சம்
மூச்சடங்க வைத்தாலும்
அதுவே அடிக்கடியும்
ஆவதனால் பழகிப் போய்
பொது வாழ்வே எனக்குப்
பொருத்தமென்று ஆகிறது

மரமெனில் நிழலாய்
மனமெனில் நினைவாய்
கரமெனில் விரலாய்
கவியெனில் பொருளாய்
புகலிட மண் பனிப்
புகையாய் என் முனே
பூத்து மணக்குமென்
பூர்வீக தேசமே!
மரமாகப் போகுமென்
மனந்தனை மாற்றி நீ
உரமாக்கப் போகிறாய்
உனக்கு..

No comments:

Post a Comment