Tuesday 24 April 2012

தேற்றும் நினைவுகளின் தோற்றம்..

ஓட்டுக்குள் நத்தை போல்
ஒழித்திருந்த உன் நெஞ்சம்
பாட்டமாய்ப் பெய்கின்ற
பருவ மழை ஈரத்தில்
மூசித் தீப்பிடித்து
மூச்செல்லாம் மோக அலை
வீசி அடித்துள்ளே
விண் கூவ, விரக மணம்
நாசிக்குள் படர்தெங்கும்
நனைக்க, என் மனசின்
வீட்டுக்குள் மெல்ல
விரைந்தூரத் தொடங்குதடி

உந்தனது மன ஆசை
ஊர்ந்து வரும் வழியெங்கும்
சிந்துதடி வீணீராய் இழுபட்டு
சிலிர்த்த மன
எண்ணச் சுவர்தனில் நீ
ஏறுகையில் ஈரலிப்பு
திண்மைக் கர்வத்தின்
தீராத வெம்மையினை
தண்மைப் படுத்தித்
தணிக்குதடி, நாடிகளை

கவ்விக் கவ்வி நீ
கடக்கையிலே சூடாக
இவ்வளவும் இருந்த
ஏதேதோ கோபமெல்லாம்
அவ்வளவு அழுக்கும்
அகன்று குளிராகி
தவ்வுகின்ற குழந்தை போல்
தவழுதடி உன் முன்னே

உணர் கொம்பை நீட்டி
உண்மை மனசு தனை
உணர்ந்திட்ட உன் நெஞ்ச
உறவின் நினைவலைகள்
என்றைக்கு மீண்டும்
ஏறும் முருங்கை மரம்?
என்றைக்குத் தன்னை
இழுத்தடக்கும் ஓட்டுள்ளே?

என்றைக்கு என்னால்
உனையறிய முடிகிறதோ
அன்றைக்கே நானுலகை
அறிவேன், அதுவரையில்
சென்று வா நினைவே
சீக்கிரமாய், என் எழுத்து
நின்று விட வேண்டாமா
நிலைத்து..

2 comments:

  1. முடிந்த யுத்தத்தின் பேறுகளாய் மனத்தைக் காயப்படுத்தும் கவிதைகள்.இதுவே உங்கள் கவிதையின் வெற்றி திருக்குமரன்.

    ReplyDelete
  2. ஆமாம் துயரவடுக்களே மிச்சமாகி உள்ள வாழ்வு
    நன்றி தாட்சாயினி

    ReplyDelete