Saturday 21 April 2012

நமக்கான விதி நதிக்கும்..

எங்கேயோ நிகழும்
ஏதோவோர் சேர்க்கையினால்
இங்கே வந்திறங்கி
இழுபட்டு இறுதி வரை
ஓயாமல் ஓடி
ஓர் நாள் முடிகையிலே
கடந்த பாதைகளும்
கனவுகளும், நினைவுகளும்
உடன் வராமலேயே
ஒன்றுமற்றுப் பேரிழந்து
வேறொன்றாகும்
விதி ஒன்றே இப்பாரில்
வேறொன்றே இல்லாத
விதியாய், நிரந்தரமாய்
நமக்கென்றும்
நதிக்கென்றும் நல்கியது,
அப்படியே
நதிக்கான வாழ்வும்
நம் வாழும் ஒன்றே தான்

ஒரு சிறிய முளையாக
ஒவ்வோர் துளியாக
கரு அசையும் படியாக
கசிந்தூரும் வடிவாக
உரு பின்னர் எப்படியாய்
உருவாகப் போகுதென்று
தெரியாத நிலையிற் தான்
திசையின்றி அவராகத்
தெரியாத வாழ்வொன்று
தெரிவாகும், பயணங்கள்
உடல் பிரட்டி மெல்ல
உருண்டு, தவண்டோடி
மடலொத்த பாதங்கள்
மண் தொட்டுத் தத்தி
முடிவிடத்தைத் தூரத்தை
முற்றிலுமே அறியாமல்
அடியெடுத்து வைக்கும்
அறியாத பயணத்தில்,

ஓடும் வழி இதுவென்று
ஒரு போதும் இருவருமே
கோடொன்றைப் போட்டந்தக்
குறிப்பு வழி செல்வதில்லை
கட்டிக் காவிவந்த
கனவுகளின் மூட்டை எல்லாம்
முட்டி எதிர் மோதும்
முரட்டு வழித் தடைகளிலே
தட்டுப்பட் டொவ்வொன்றாய்த்
தவறி விழும்,வீழந்தவைகள்
திட்டுகளாய் அதிலேயே
தேங்கி உலர்ந்து விடும்

எஞ்சி இருப்பவற்றை
இயன்றவரை மோதாமல்
அஞ்சுவதாய்க் காட்டாமல்
அஞ்சி, தடைகளின் மேல்
பட்டும் படாமலுக்குப்
பக்குவமாய் மெதுவாக
வேகத்தைக் குறைத்து
விலத்தி, கரைகாணும்
மோகம் தருகின்ற
முனைப்பில் இன்னமுமே
தெரியாத முடிவிடத்தின்
திக்கை அறியாமல்
புரியாத பாதை வழி
போகின்றோம்,இறுதியிலே

இந்த இடத்தை நாம்
எட்டுதற்கா இவ்வளவும்
நொந்து வழி நெடுக
நொடிந்தோம் எனுமெண்ணம்
கண்ணுள் இமைப்பதற்குள்
கரைந்து நாம் வேறொன்றாய்
மண் வாழ்வை விட்டெங்கோ
மறைவோம், அதன் பின்னே
வந்த வழித்தடத்தில்
வரலாறில் எம்பெயர்கள்
எந்தப் புகழ்த் தூசாய்
எழுந்தாலும் அது எங்கள்
கண்களிலே விழுமோ
கலங்கத்தான் வைத்திடுமோ
எண்ணச் சுவாசத்தில்
ஏறிப் புரக்கடித்திடுமோ
ஒரு மண்ணும் மிஞ்சாத
உயிர் வாழ்க்கை பூமியிலே
நமக்குத்தான் மட்டுமல்ல
நதிக்கும் தான்...

No comments:

Post a Comment